அரசியல்

எம்.எல்.ஏக்களுடன் அசோக் கெலட் ஆலோசனை - நட்டாவுடன் சச்சின் பைலட் சந்திப்பு: என்ன நடக்கிறது ராஜஸ்தானில்?

ராஜஸ்தான் ஆளும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட் பா.ஜ.கவுக்கு கட்சி தாவல் இருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு நிலவுகிறது

எம்.எல்.ஏக்களுடன் அசோக் கெலட் ஆலோசனை - நட்டாவுடன் சச்சின் பைலட் சந்திப்பு: என்ன நடக்கிறது ராஜஸ்தானில்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ராஜஸ்தானில் அரசியல் போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சராக இருக்கும் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க கூடாரத்துக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது.

2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேட்சையுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது. ஆனால், முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற மோதல் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைமை தலையிட்டு, முதலமைச்சர் பதவி கெலாட்டுக்கும், துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளை பைலட்டுக்கு கொடுத்தும் சமாதானம் செய்து வைத்தது. ஆனால் இருவருக்கு இடையிலான மோதல் புகைந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநில காவல் துறையின் சிறப்பு செயல்படை, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யப்பட்டதா என்று துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. இது பைலட்டை ஆத்திரப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த விளக்கம் தன்னிடமும் கேட்க்கப்பட்டதாக கூறும் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜ.க தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நேற்று இரவு அசோக்கெலாட், தனது இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, " காங்கிரஸ் அரசுக்கு 109 எம்.எல்.ஏக்கள் எழுத்துப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அரசு மெஜராட்டியுடன் தான் இருக்கிறது. இன்னும் சில எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர்களும் ஆதரவு கடிதம் கொடுக்க உள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் பைலட்டின் முகாமில் 25 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது டெல்லியில் இருக்கும் பைலட், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் காலை 10.30 மணிக்கு, சிறப்பு கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார் அசோக் கெலாட். அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முறையான காரணம் கூறாமல் கூட்டத்தை தவிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பா.ஜ.கவுக்கு 73 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 48 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கூடுதலாக பெற்றுள்ளது. ஒருவேளை சச்சின் பைலட் கட்சி தாவினாலும், காங்கிரஸ் அரசுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரம் முதலமைச்சர் பதிவியை எதிர்பார்க்கும் பைலட்டின் முயற்சியும் வீணாகும் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories