அரசியல்

"ஊழல் செய்து ஈனப்பிழைப்பு நடத்தும் அமைச்சர் உதயகுமார் என் தகுதி பற்றி பேசலாமா” ஆ.ராசா ஆவேசம்!

அமைச்சர் உதயகுமாருக்கு தி.மு.க எம்.பி. ஆ.ராசா ஆவேச பதிலடி கொடுத்திருக்கிறார்.

"ஊழல் செய்து ஈனப்பிழைப்பு நடத்தும் அமைச்சர் உதயகுமார் என் தகுதி பற்றி பேசலாமா” ஆ.ராசா ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Venkatesh R S
Updated on

அமைச்சர் உதயகுமாருக்கு தி.மு.க எம்.பி. ஆ.ராசா ஆவேச பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில் " சாத்தான்குளத்தில் தமிழக காவல்துறை நிகழ்த்திய இரட்டை கொலையை மூச்சுத்திணறலால் ஒருவரும், உடல்நலக்குறைவால் ஒருவரும் இறந்தார்கள் என காவல்துறையை கையில் வைத்துள்ள பொறுப்புள்ள முதலமைச்சரே அறிவித்தது கொலையை மறைக்க சொல்லப்பட்ட பச்சைப் பொய் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்று குறிப்பிட்டு, அதனால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று நான் கொடுத்த வலைதள பேட்டிக்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு தன் தற்குறித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் அமைச்சர் உதயகுமார்.

உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து சாத்தான்குளத்தில் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட இரட்டை கொலையை விசாரணைக்கு ஏற்று, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மூலமாக புலன் விசாரணையை மேற்கொண்டதில்தான், நடைபெற்றது கொடூரமான கொலை என்று தெரியவந்தது.

அதுவரை தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை இது மூச்சுத்திணறல் மற்றும் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட இயற்கை இறப்பு என்றே சொல்லப்பட்டது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரே, கொடூரமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையை மறைத்து இயற்கையான மரணம் என்று சொன்னால் கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரே குற்றவாளியாகிறார். எனவே, குறைந்தபட்சம் தார்மீக பொறுப்பேற்று உள்நோக்கத்தோடு கொலையை மறைக்கும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று நான் குறிப்பிட்டேன்.

இதுவரை தான் சொன்ன பச்சைப் பொய் குறித்து முதலமைச்சர் மன்னிப்பு கோரியதாகவோ, வருத்தம் தெரிவித்ததாகவோ தெரியவில்லை. தன் ஆளுகையில் உள்ள ஒரு காவல் நிலையத்தை, காவல்துறையை நம்பாமல் வருவாய்த்துறைக்கு கீழ் கொண்டுவந்து உண்மையை கொண்டுவர உயர்நீதிமன்றம் எடுத்த முயற்சிகளும் முடிவுகளும் முதலமைச்சரின் ஆளுமைக்கும், அவருடைய நம்பகத்தன்மைக்கும் கொடுக்கப்பட்ட சவுக்கடிகளாகும்.

ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழலில் முதலமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரில் போதுமான முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற ‘தடித்ததோலு’க்கு சொந்தக்காரர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவருக்கு முட்டுக்கொடுத்து என்னை வசைபாட வேண்டிய அவசியத்திற்கு அமைச்சர் உதயகுமார் ஆளாகியிருப்பது புரியாத புதிரல்ல.

12000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு கண்ணாடியிழைக் கம்பி (Optic Fiber Cable) இணைப்புகள் அமைப்பதற்காக சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட திட்டத்திற்கான ஒப்பந்த நிபந்தனைகள் முறைகேடு செய்வதற்கு ஏதுவாக தளர்த்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக உறுதி செய்த மத்திய அரசு, அந்த ஒப்பந்தத்தையே இரத்து செய்திருப்பது உதயகுமாரின் நேர்மைக்கு கொடுக்கப்பட்ட பட்டயம். அ.தி.மு.க. அமைச்சர்களின் எல்லா முறைகேடுகளையும் மூடிமறைக்க எல்லா விதத்திலும் முயற்சிக்கும் மத்திய அரசாலேயே மறைக்க முடியாத இத்தகைய முறைகேட்டை செய்த இந்த சாமர்த்தியசாலிதான் இப்போது என் தகுதி பற்றி பேசுகிறார். அவருக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க. அமைச்சரவைக்கே என்ன தகுதி இருக்கிறது? “அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்து ஜனநாயக அமைப்பினை குலைக்கும் ஆபத்தான செயலுக்கு ஜெயலலிதாவும் மற்ற குற்றவாளிகளும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்" என்று நீதிபதி குன்காவும், "நமது ஜனநாக அரசியலுக்கு அடிப்படையாகவுள்ள அரசியல் சட்டக்கோட்பாடுகள் கொண்டுள்ள இலட்சியத்தின் மீது நடத்திய மன்னிக்க முடியாத படுகொலைதான் இந்த ஊழல்" என்று ஜெயலலிதா மறைந்தபிறகு மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றமும் உதிர்த்த கண்டனங்களுக்கு இன்னமும் நாங்கள் வாரிசுகள்தான் என்று பறைசாற்றும் விதத்தில்

v நெடுஞ்சாலைத்துறை ஊழல்

v வீட்டுவசதி அனுமதி ஊழல்

v உள்ளாட்சி ஒப்பந்த ஊழல்

v குட்கா ஊழல்

v ஆவின் ஊழல்

v சத்துணவு-முட்டை/துவரம்பருப்பு கொள்முதல் ஊழல்

v மணல்குவாரி ஊழல்

v தேர்வாணைய முறைகேடு ஊழல்

என்று பொதுவாழ்வில் ஈனப்பிழைப்பை நாளும் நடத்தும் உலுத்தர்களில் ஒருவரான உதயகுமார் என் தகுதி பற்றி பேசுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது.

என் மீதான வழக்கை நானே எதிர்கொண்டு- உங்கள் "அரசியல் புனிதத் தாயை"ப் போல் ஆண்டுகள் பலவாக ஓடி ஒளியாமல் - ஒரு நாள்கூட வாய்தா வாங்காமல்- நானே சாட்சி கூண்டில் ஏறி , சிபிஐ-யின் குறுக்கு விசாரணையை எதிர்கொண்டு வழக்கை வென்றவன் என்பது மட்டுமல்ல; என் மீது தொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை ‘ஜோடிக்கப்பட்டது’ (choreographed charge-sheet) என்று நீதிமன்ற தீர்ப்பிலேயே உறுதி செய்யப்பட்டது என்பது உதயகுமார் போன்ற அரசியல் அடிவருடிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன் மீதான ‘பாரத் நெட்’ ஒப்பந்த முறைகேட்டில் மத்திய அரசுக்கு பணிந்து தன் பதவியை எடுத்து விடுவாரோ என்ற பயத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழும் எடப்பாடிக்காக இன்னொரு ஊழல் பேர்வழி பரிந்து பேசுவதில் நமக்கொன்றும் வியப்பில்லை. பாவம், விபத்தில் விளைந்த பதவியும் பவிசும் முடிவுக்கு வரும் நேரம். அணையப்போகும் திரி கடைசி நிமிடத்தில் கூடுதல் வெளிச்சம் காட்டுவது மாதிரி உதயகுமாரின் உளறல் உரத்து ஒலிக்கிறது. விரைவில் அமைய இருக்கும் தி.மு.க. ஆட்சியில் தகுதியற்ற இவர்களின் தகுதி தக்க நேரத்தில் தீர்மானிக்கப்படும். அதுவரையாவது இவர்கள் அமைதி காப்பது அவர்களுக்கு நல்லது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories