அரசியல்

“டெண்டர் முறைகேடே இல்லையெனில் சி.பி.ஐ முன் ஆஜராகும் திராணியுண்டா?” - ஜெயக்குமாருக்கு துரைமுருகன் சவால்!

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள தகவல்களையே ஒரு அமைச்சர் மறுக்கிறார் என்றால், ஊழல் ஆணவமும், அமைச்சர் என்ற அதிகார வெறியும் தலைக்கேறிவிட்டது என்றுதான் அர்த்தம் என துரைமுருகன் சாடல்.

“டெண்டர் முறைகேடே இல்லையெனில் சி.பி.ஐ முன் ஆஜராகும் திராணியுண்டா?” - ஜெயக்குமாருக்கு துரைமுருகன் சவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

" ‘கமிஷன் - கரெப்ஷன் - கலெக்‌ஷன்’ என்ற “ஊழல் தந்திரத்தின்”அடிப்படையில் இயங்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் - அதில் அமைச்சராக உள்ள ஜெயக்குமாருக்கும் நல்லாட்சி தந்த தி.மு.க பற்றியோ அல்லது அப்பழுக்கற்ற பொதுவாழ்வினை தனது அசையாச் சொத்தாக வைத்திருக்கும் எங்கள் கழகத் தலைவர் பற்றியோ குறை கூற அருகதை இல்லை!" என தெரிவித்து தமிழக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“ஊரடங்கு நேரத்தில் ஏன் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடுவதற்கு அவசரம் காட்டி” “அதே ஊரடங்கு காலத்திலேயே ஆன்லைனில் டெண்டர் தாக்கல் செய்ய தேதியையும் நிர்ணயித்தீர்கள்” என்று முதலமைச்சரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கேள்வி கேட்டால், அமைச்சர் ஜெயக்குமார் “சம்மன் இல்லாமல்” ஆஜராகி “பதில்” என்ற போர்வையில் “உளறல்கள்” நிரம்பிய ஒரு வெட்கக்கேடான அறிக்கையை வெளியிட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரடங்கில் டெண்டர் விட்ட துறை அமைச்சருக்கே இல்லாத கவலை ஏன் ஜெயக்குமாருக்கு வந்தது? கோயம்பேடு நோய்த் தொற்றையே கவனிக்க முடியாமல் - சென்னையை பீதியில் மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் முதலமைச்சருக்கு – அமைச்சர் ஜெயக்குமார் “முந்திரிக் கொட்டை போல் முந்திக்கொண்டு ”ஒரு நாலாந்தர அறிக்கையை ஏன் வெளியிட வேண்டும்?

முதலமைச்சர் துறையின் ஊழலை மறுப்பதில் இவருக்கு என்ன சொந்த லாபம்? அ.தி.மு.க ஆட்சியில் டெண்டர்களின் “மதிப்பீடுகள் தயாரிக்கும் லட்சணமும்” “ஆன்லைன் டெண்டர்களில் நடக்கும் கூத்துக்களும்”அனைவருக்கும் தெரிந்ததுதான். ஊரே சிரிப்பதுதான்!

“டெண்டர் முறைகேடே இல்லையெனில் சி.பி.ஐ முன் ஆஜராகும் திராணியுண்டா?” - ஜெயக்குமாருக்கு துரைமுருகன் சவால்!

டெண்டர் குறித்து பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து - அ.தி.மு.க. ஆட்சியின் டெண்டர் முறைகேடுகளைப் பார்த்து நல்லோர் அனைவரும் கைகொட்டிச் சிரித்துள்ளார்கள். “கமிஷன் - கரெப்ஷன் - கலெக்‌ஷன்”என்ற “ஊழல் தந்திரத்தின்”அடிப்படையில் இயங்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் - அதில் அமைச்சராக உள்ள ஜெயக்குமாருக்கும் நல்லாட்சி தந்த தி.மு.க பற்றி பேசுவதற்கோ அல்லது அப்பழுக்கற்ற பொதுவாழ்வினை தனது அசையாச் சொத்தாக வைத்திருக்கும் எங்கள் கழகத் தலைவர் பற்றிக் குறை கூறுவதற்கோ சிறிது கூட யோக்கியதை மட்டுமல்ல; அருகதையே இல்லை!

தனது துறை ஊழல் குற்றச்சாட்டில் - தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து - உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான்!

அண்ணன் தம்பி அத்தனை பேருக்கும் கான்டிராக்ட் கொடுக்கும் சிண்டிகேட் அமைத்துள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இருப்பது இந்த ஆட்சியில்தான்!

இந்தியாவிலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்!

ஏன், ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டு - சிறைத் தண்டனை பெற்ற முதலமைச்சரைக் கொண்ட ஒரே ஆட்சியும் அ.தி.மு.க. ஆட்சிதான்!

அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை ஊழல் சாம்ராஜ்யத்தில் மூழ்கி கஜானாவை காலி செய்து கொண்டிருப்பதும் இந்த ஆட்சியில்தான்!

ஆனால், இவற்றையெல்லாம் மறந்து - புனித ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருப்பதாலேயே “தாங்கள்” புனிதர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பொய் வேடம் போட நினைத்தால் - அது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போலாகும்!

சில தினங்களுக்கு முன்பு கூட முறைகேடுகளுக்காக - பாரத்நெட் டெண்டரை மத்திய அரசே நிறுத்தி வைத்துள்ளதே - அதுவும் அ.தி.மு.க. ஆட்சி டெண்டர்தான்!

அதுவும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது போல் ஊழல் அ.தி.மு.க. அரசின் “தொழில்நுட்பக் குழு” வடிவமைத்த டெண்டர்தான்! - ஏன், ஜெயக்குமார் “இப்போது” இதயதெய்வமாக வணங்கி - வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அந்த டெண்டருக்கு மத்திய அரசு தடை போட்டிருக்கிறது!

தன் மகனின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவிசெய்ய ஒரு துணை முதலமைச்சர் தனது துறையைப் பயன்படுத்தியிருக்கிறாரே - அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!

இப்படி இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

“டெண்டர் முறைகேடே இல்லையெனில் சி.பி.ஐ முன் ஆஜராகும் திராணியுண்டா?” - ஜெயக்குமாருக்கு துரைமுருகன் சவால்!

எங்கள் கழகத் தலைவர் எழுப்பிய தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு டெண்டர் முறைகேடுகளைப் பொறுத்தமட்டில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அனைத்து முறைகேடுகளும் தெளிவாக உள்ளது. எப்போதும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் திறமையை முத்தமிழறிஞர் கலைஞரிடம் இரவலாகப் பெற்றவர் எங்கள் கழகத் தலைவர்.

அமைச்சர் ஜெயக்குமாருக்கு தேவை என்றால் ஒரு “பூதக்கண்ணாடி” வாங்கி ஊரடங்கு முடிந்தவுடன் “பார்சலில்” அனுப்பி வைக்கிறேன். அதை மாட்டிக் கொண்டு அந்த “500 முதல் 700 கோடி வரை அதிக மதிப்பீடு போட்டது” “32 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை சிலருக்கே வழங்க முயற்சிப்பது” “டெண்டர் தகுதிகளை ஒருதலைப்பட்சமாக நிர்ணயித்தது” “அரசு ஆணைக்கும், டெண்டர் ஆணைக்கும் இடையே உள்ள மதிப்பு வேறுபாடு” எல்லாம் உள்ள - உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அஃபிடவிட்டை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்; தன்னை “தகவல்” ரீதியாக வளர்த்துக் கொள்ளலாம்!

“உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள தகவல்களையே ஒரு அமைச்சர் மறுக்கிறார்” என்றால் - ஊழல் ஆணவமும், அமைச்சர் என்ற “அதிகார வெறியும்” தலைக்கேறிவிட்டது என்றுதான் அர்த்தம். எல்லா துறைக்கும் “வக்காலத்து” வாங்கும் வேலையை மட்டுமே செய்து கொண்டு ஓர் அமைச்சர் தமிழக அமைச்சரவையில் இருப்பது வெட்கக் கேடானது!

இந்த நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நான் ஒரேயொரு சவால் விடுகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் விடப்பட்ட பராமரிப்பு டெண்டர்கள் - இந்த தஞ்சாவூர் டெண்டர் எல்லாவற்றையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்துங்கள்.

வேறு ஒரு துறைக்கு பதில் கொடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பதால் - இப்படியொரு ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தையும் நீங்கள் “தாராளமாக” எடுத்துக் கொள்ளலாம். “நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் எதிலும் முறைகேடுகள் நடக்கவில்லை” என்று அறிக்கை விடுவது போல், சி.பி.ஐ. முன்பும் விசாரணைக்கு ஆஜராகி பதில் சொல்லலாம். அந்தத் திராணியும் - தெம்பும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இருக்கிறதா?

தனக்கு சம்பந்தமில்லாத துறையின் முறைகேடு குறித்து அறிக்கை விடும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், இந்த முறைகேடுகளுக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவேளை முதலமைச்சரின் நெடுஞ்சாலைத்துறையை திரைமறைவில் அமைச்சர் ஜெயக்குமார் கவனித்துக் கொள்கிறாரா?

அதைவிட, “ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள்” என்பார்கள். இப்படி ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து அறிக்கை விடுவதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு என்ன ஆதாயம்? என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால், நாகரிகம் கருதி அதுபோன்ற கேள்வியை நான் அமைச்சரைப் பார்த்து கேட்க விரும்பவில்லை.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. அதிலும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு - குறிப்பாக, “தர்மயுத்தத்திற்கு” முன்பான முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி, “கூவத்தூருக்குப்” பிறகான முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி எல்லாவற்றிலும் அரங்கேறியுள்ள ஊழல்கள் ஒன்றல்ல - இரண்டல்ல; மலை போல் குவிந்து கிடக்கிறது!

அப்படியொரு ஊழல் மலையில் அமர்ந்து “ஒய்யாரமாக” ஆட்சி நடத்தும் முதலமைச்சருக்கோ, அமைச்சர் ஜெயக்குமாருக்கோ மக்களின் நலனுக்காக ஆட்சி செய்த தி.மு.க. மீதும் - "மக்கள் பணியே என் பணி" என்று கொரோனா நேரத்திலும் இரவு பகலாக செயலாற்றிக் கொண்டிருக்கும் எங்கள் கழகத் தலைவர் மீதும் ஒரு சுண்டுவிரலை நீட்டக் கூட தகுதி இல்லை.

இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியும் - ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் நினைவில் கொண்டு - நாவடக்கத்துடன் பேட்டி கொடுப்பதும் - கை அடக்கத்துடன் அறிக்கை எழுதுவதும் நல்லது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories