அரசியல்

“தமிழ் மொழிக்கு கேடு என்றபோது, தமிழகம் போர்க்களமானதை மறந்து விடக்கூடாது” : முத்தரசன் எச்சரிக்கை!

“தமிழ் மொழிக்கு கேடு செய்யும் நோக்கத்தோடு, இந்தி மொழி திணிக்கப்பட்ட போது, தமிழகம் போர்க்களமானதை மறந்து விடக்கூடாது” என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

பா.ஜ.க தேசியத் தலைவரும், மத்திய அரசின் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, ஒரே நாடு, ஒரே மொழி என்ற முறையில் இந்தி மொழியை எல்லா மாநிலங்களும் கற்க வேண்டும், பேச வேண்டும் எனத் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி மொழியை பிற மாநிலங்களில் திணித்து விடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உள்துறை அமைச்சர் நாட்டை இந்தி மொழி மூலம் தான் ஒருமைப்படுத்த முடியும் என்ற விஷம விதையினை விதைத்து வருகிறார்.

ஒரே ஒரு தேர்தல், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு, ஒரு மொழி என ஒற்றைக் கலாச்சாரத்தை கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகள் முயற்சிக்கின்றன. அதே போல் ஆட்சி முறையில் ஒரு நபர் சார்ந்த சர்வாதிகார ஆட்சி நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புதான் தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அச்சாணி என்பதை நிராகரித்து வருகிறார்கள்.

“தமிழ் மொழிக்கு கேடு என்றபோது, தமிழகம் போர்க்களமானதை மறந்து விடக்கூடாது” : முத்தரசன் எச்சரிக்கை!

இதன் தொடர்ச்சியாகவே உள்துறை அமைச்சரின் சுட்டுரை செய்தியும் அமைந்திருக்கிறது. தமிழ் மொழிக்கு கேடு செய்யும் நோக்கத்தோடு, இந்தி மொழி திணிக்கபட்ட போது, தமிழகம் போர்க்களமானதை மறந்து விடக்கூடாது. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழ்நாட்டு மக்கள் விரும்பி ஏற்கும் வரை ‘இந்தி ‘கட்டாயம் இல்லை’ என அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்.

தொன்மைப் பழமை வாய்ந்ததும், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியில் இணைந்து வளர்ந்து வருவதுமான ‘தமிழ்’ மொழியை அழித்துவிடும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மத்திய அரசும் சமஸ்கிருதவாதிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மொழி பேசும் அனைவரும் ஒன்றுபட்டு மத்திய அரசின் மொழிவெறிக் கொள்கையை முறியடிக்க வேண்டும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories