அரசியல்

வீடியோ ஆதாரம் இருந்தும் பேலுகான் கொலையாளிகள் விடுதலை : நீதித்துறையிலும் ’காவி’ அட்டூழியம் ?

பேலுகான் கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை ராஜஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

வீடியோ ஆதாரம் இருந்தும் பேலுகான் கொலையாளிகள் விடுதலை : நீதித்துறையிலும் ’காவி’ அட்டூழியம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

கடந்த கால பா.ஜ.க-வின் ஆட்சியில் பசு குண்டர்களின் தாக்குதலால் மாநிலம் முழுவதும் சிறுபான்மையினர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தற்போது வரை மத்திய பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி பசு குண்டர்களால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கூட கிடைக்காமல் போன அவலம் பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டிருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு பேலு கான் என்பவர் ஜெய்ப்பூர் பகுதியிலிருந்து மாடுகளை வாங்கிக் கொண்டு தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். முறையான ஆவணங்களுடன் சென்றிருந்த பேலு கானின் வாகனத்தை பெரோர் பகுதிகளில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குண்டர்கள் வழி மறித்து அவரைக் கடுமையாகத் தாக்கினர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்து போன பேலு கான் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பின்னர் ராஜஸ்தான் போலிஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

வீடியோ ஆதாரம் இருந்தும் பேலுகான் கொலையாளிகள் விடுதலை : நீதித்துறையிலும் ’காவி’ அட்டூழியம் ?

மேலும் பசுக்களைக் கடத்தியதாக பேலு கான் மகன்களான இர்ஷத், ஆரிப் மற்றும் ட்ரக் டிரைவர் கான் மொகமது ஆகியோர் மீதும் பசுக் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர். போலிஸாரின் இந்தச் செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்த வழக்கு ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் குற்றச்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் சிறுவர்கள் என்பதனால் இந்த வழக்கு சிறார் நீதி மன்றத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு (சந்தேகத்தின் பலனைக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து) எதிராக போதிய ஆதாரம் இல்லை என்பதனால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செல்போன் கேமராவில் தாக்குதல் காட்சி பதிவாகி இருந்தாலும் அதனைச் சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று விசாரணை நீதிமன்றம் விலகியது.

மேலும் பேலுகான் அளித்த முதல்கட்ட வாக்குமூலத்தில் குற்றவாளியின் பெயரைக் கூறவில்லை என்று எதிர்த் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த கும்பல் வன்முறையை செல்போனில் படம்பிடித்த நபர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி சொல்லவில்லை. வீடியோவும் தெளிவாக இல்லாததால் குற்றவாளியைத் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை என்று வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

வீடியோ ஆதாரம் இருந்தும் பேலுகான் கொலையாளிகள் விடுதலை : நீதித்துறையிலும் ’காவி’ அட்டூழியம் ?

அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனையும் பேலு கான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது. ஆனால் பிரேதப் பரிசோதனையில் பேலு கான் காயங்களினால் உயிரிழந்ததாக அறிக்கையில் தெரிவித்துள்ளதாக பேலுகான் வழக்கறிஞர் கூறினார்.

மேலும் என்.டி.டி.வி நடத்திய புலன் விசாரணை வீடியோவை ஆதாரமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. ஆனால் அல்வார் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் போனது துரதிர்ஷ்டமானது. இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் களங்கம் என் வருங்காலம் சொல்லும் என ஜனநாயக அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories