அரசியல்

"ரஜினிகாந்திடம் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை எதிர்பார்க்க முடியாது" - திருமாவளவன் எம்.பி !

ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்பார்க்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

"ரஜினிகாந்திடம் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை எதிர்பார்க்க முடியாது" - திருமாவளவன் எம்.பி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசை ரஜினி பாராட்டி பேசியதற்கு, திருமாவளவன் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. அங்கு நடைபெறும் விஷயங்களை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஊடகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மக்களுக்கு, மோடி அரசு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளையும், அதிகாரங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது ஒரு மாபெரும் வரலாற்றுத் துரோகம். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி மத்திய அரசின் இந்த எதேச்சதிகரப் போக்கை கண்டித்துள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் கூடி கலந்தாய்வு செய்வோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் தகர்க்க கூடிய வகையில் மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனுடைய உச்ச நிலையாக தான் ஜம்மு-காஷ்மீர் உரிமைகளை ரத்து செய்ததாகப் பார்க்கப்படுகிறது. இதைக் கண்டித்து இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய உள்ளோம். நெருக்கடியான நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டது சரியான முடிவு. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

வேலூர் தொகுதியில் தி.மு.க அனைத்து பராக்கிரமங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. ” என்றார்.

காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவின் நடவடிக்கையை பாராட்டியும், அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் போல என விவாதத்தை கிளப்பும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் “ ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்பார்க்க முடியாது. அவர் மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவதுண்டு. ஆகவே மகாபாரதத்திலிருந்து மோடி - அமித்ஷாவுக்கு உவமையாக சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அடையக் கூடியதும் இல்லை'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories