அரசியல்

தேச துரோக வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - வைகோ பற்றி சரியாகத் தெரியாமல் நீதிபதி சொன்ன அறிவுரை !

தேச துரோக வழக்கில் வைகோ மீதான ஒரு வருட தண்டனையை நிறுத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேச துரோக வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - வைகோ பற்றி சரியாகத் தெரியாமல் நீதிபதி சொன்ன அறிவுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், கடந்த 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வைகோ மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க ஆயிரம் விளக்கு ஆய்வாளருக்கு 4 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

வைகோ இனி பேசுவதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து பேசும்படி வைகோவிற்கு நீதிபதிகள் அறிவுரை கூறினர். ஆனால், ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்தபோது, நீதிபதியிடம் வைகோ நேரடியாக சொன்னார் “ பேசுவேன்; ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். நான் தந்தை பெரியார் வழியில் வந்தவன். 1938 ஆம் ஆண்டு, இதே சென்னை நீதிமன்றத்தில், தந்தை பெரியாருக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு அவர் நீதிபதியைப் பார்த்து, ‘அதிகபட்ச தண்டனை எதுவோ, அதைக் கொடுங்கள் என்று கேட்டார். தீர்ப்பைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு, மூன்று வருடம், மூன்று வருடம் என்று சத்தம் போட்டுக்கொண்டே சென்றார் என நான் படித்து இருக்கின்றேன்.

நான் அந்த வழியில் வந்தவன். ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றேன். 38 இல் தந்தை பெரியார் சொன்னார்; அதைத்தான், பெரியாரின் பேரன் வைகோ இன்றைக்கு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கின்றேன். நான் பேசியது தேசத்துரோகம் அல்ல; இது தேசத்துரோகம் என்றால், இதை நான் தொடர்ந்து செய்துகொண்டு இருப்பேன்.” என்று வைகோ பேசியது, இன்று விசாரணை செய்த நீதிபதிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

banner

Related Stories

Related Stories