அரசியல்

மத்திய அரசால் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்படுகிறது - வைகோ குற்றசாட்டு !

தமிழகம் அனைத்து துறையிலும் மத்திய பா.ஜ.க. அரசால் கடுமையாக வஞ்சிக்கப்படுவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசால் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்படுகிறது - வைகோ குற்றசாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், '' தமிழகம் அனைத்து துறையிலும் மத்திய பா.ஜ.க. அரசால் கடுமையாக வஞ்சிக்கப்படுகிறது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா சொல்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருந்து ஆய்வு செய்யவும் மசூத் அனுமதி கொடுக்கும் போதே தெரிந்துவிட்டது. அணை கட்ட ரூ.5912 கோடி ஒதுக்குவது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது என 2015ம் ஆண்டே தீட்டப்பட்ட திட்டம். வெளிப்படையாக அனுமதி தராவிட்டாலும் அணையை கட்டிக் கொள்ளுங்கள் என்ற செய்தி 2015ல் வெளியானது. மேகதாது அணை கட்டுவார்கள். அதன்பின்னர் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரும் கிடைக்காது.

தமிழகம் குடிக்க தண்ணீர் இல்லாமல் வாடி வதங்குகிறது. அமெரிக்க செய்தி நிறுவனத்தில் சென்னை மக்கள் குடிநீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட காரணம் அரசு முன் எச்சரிக்கைக்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரி, குளங்கள் தூர் வாரப்படவில்லை, கால்வாய்கள் சீரமைக்கபடவில்லை. மணலை தோண்டி பணத்தை கொள்ளையடித்ததால் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விட்டது. அடுத்த 2 மாத காலத்தை எப்படி தாக்குபிடிக்க போகிறோம் என்று தெரியவில்லை.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக 272 கிணறுகளுக்கு அனுமதி வழங்கியதோடு மேலும் 104 கிணறுகள் அமைக்க அனுமதி கேட்டு இருக்கிறது. இதற்கும் அரசு அனுமதி வழங்கும். இந்தியாவில் எல்லா திட்டத்தையும் எதிர்க்கலாமா என்று சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி தான். இந்த திட்டங்களால் இந்திய அரசுக்கு லட்சக்கணக்கான கோடி வருமானம் வரும். ஆனால் தமிழகம் பாலைவனம் ஆகி எத்தியோப்பியாவை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்.

காவிரியில் தண்ணீர் வரவில்லை. மறுபுறம் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் 10 ஆயிரம் ஆழம் வரை 636 வேதியியல் பொருட்களை ஒரு நாளுக்கு 2 கோடி கன அடி தண்ணீருடன் செலுத்தப்படும். அவை மீண்டும் வெளியே வரும் போது நச்சு தண்ணீராக வரும். அடியோடு விவசாயம் பாழடைந்து எதிர்காலத்தில் காவிரி டெல்டாவில் நிலங்களே இல்லாமல் போய்விடும். இதனால் தான் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கிறோம். திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று அல்ல. வருகிற திட்டம் எல்லாம் தமிழகத்தை வஞ்சிக்கிற திட்டமாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறொம்.

இதில் அரசியல் ஒன்றும் கிடையாது. அரசு கடுமையாக எதிர்க்கின்ற ஆற்றலை இழந்துவிட்டது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என வரிசையாக கொண்டு வந்து தற்போது ஒரே குடும்ப அட்டை என்றால் . கீழ் கோர்ட்டுகளுக்கும் மத்தியில் இருந்து நீதிபதிகளை நியமிக்க போகிறார்கள் என்றால் மாநில அரசின் அதிகாரங்களை அனைத்தையும் பறித்துக் கொண்டு நகராட்சிகளை விட மோசமான நிலைமைக்கு மாநில அரசுகளை ஆளாக்கி புல்டோசர் கொண்டு சமப்படுத்துவது போல் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் வேலைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் '' இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories