அரசியல்

மழை இல்லாததால் தண்ணீர் இல்லை என சொல்வதற்கு அரசு எதற்கு? : துரைமுருகன் கேள்வி!

மழை இல்லாததால்தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

மழை இல்லாததால் தண்ணீர் இல்லை என சொல்வதற்கு அரசு  எதற்கு? : துரைமுருகன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் முழுவதும் தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். கிராமங்கள் மட்டுமல்லாது, தலைநகரமான சென்னையும் தண்ணீர் இன்றி தவித்துவருகிறது. சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறுவலுயுறுத்தியுள்ளன. மேலும், தண்ணீர் பற்றாக்குறையால் சென்னையில் பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன், "தமிழகத்திற்கு ரயில் மூலம் 20 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்ப கேரளா முன்வந்தது, ஆனால் தமிழக அரசோ தற்போது தண்ணீர் பற்றாக்குறை எதுவும் இல்லை எனக் கூறி எந்த உதவியும் வேண்டாம் என்று மறுத்துள்ளது. தமிழக முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "தண்ணீர் தருவதாக கேரள அரசு கூறியதை, தமிழக அரசு வரவேற்றிருக்க வேண்டும். கேரள அரசு தர முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழக அரசு பெற்றுக் கொள்ளாதது ஏன்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்டு என அவர் தெரிவித்தார். தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து வறட்சி நிதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்ய தவறியுள்ளது. ஆந்திர மாநிலத்திடமிருந்து உரிய தண்ணீரைப் பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் பத்திரிகையாளர்களிடம் மழை இல்லை, அதனால் ஏரி, குளங்கள் வறண்டு போய்விட்டது. ஆதலால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனச் சொல்கிறார். முதல்வர் இப்படி அலட்சியமாகச் சொல்வதா? இப்படி சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை. ஊடகங்களும், மக்களுமே போதும். மக்கள் இதைத் தான் சொல்கிறார்கள். இதையே திரும்ப சொல்வதற்காகவா தமிழக அரசு உள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார்.

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது குடிநீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க தி.மு.க நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories