உணர்வோசை

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?

நாட்டில் நடக்கும் எல்லா கெட்ட விஷயங்களுக்கும் காரணம் நேருதானாம். நாட்டின் உயரிய பொறுப்பான பிரதமரையும் தாண்டி ஒருவரால் (அதுவும் இறந்து போன ஒருவரால்) செயல்பட முடிகிறதெனில், அவர்தானே சிறப்பானவர்!

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மோடியின் கனவு பலித்துவிட்டது. 

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கி, பக்கத்து ஆப்கானியத்தையும் நேபாளையும் இழுத்துப் போட்டு, மாகாளி சகல கைகளில் ஆயுதங்களுடன் நிற்பதை போன்ற ஒரு வரைபடம் அகண்ட பாரதம் என்கிற பெயரில் இந்தியாவுக்கு கிடைத்து விட்டது.

அங்கும் மோடிதான் ஆண்டு கொண்டிருக்கிறார். கனவு நனவான தேசமாயினும் அவருக்கு வேலைகள் முடிந்தபாடில்லை. கடிகார முட்களின் மேலேறி வேகமாக ஒடி அவ்வப்போது கடிகாரத்துக்கு வெளியே தாண்டி குதித்து பின் கடிகாரத்துக்குள் இறங்கி ஓடிக் கொண்டிருக்கும் அளவு வேலை.

எப்போதும் போல அன்றும் நாட்டுக்காக 27.5 மணி நேரங்கள் உழைத்திருந்த நிலையில், மோடியே எதிர்பார்க்காத நிலையில் சற்று கண்ணயர்ந்து விட்டார் மோடி.

அச்சமயத்தில் ஒரு பெரும் பிரச்சினை!

எங்கென்றே தெரியாமல் ஏதோவொரு நரக மூலையிலிருந்து பறந்து வந்த ஒரு கொசு, அரசமாளிகையின் சாளரத்தையும் தாண்டி உள்ளே நுழைந்துவிட்டது. அங்கிங்கு என ராகம் பாடியபடி சுற்றி பார்த்துவிட்டு, தனக்கான இடத்தை அந்த கொசு பார்த்துவிட்டது. ஆர்வத்துடன் அந்த இடத்துக்கு சென்று, மெல்லிய நுனிகளால் பட்டும்படாமல் இறங்கி கால்களை படர்த்தி, சுதந்திரமாக தனக்கான உணவை எடுக்க ஆயத்தமாகிறது கொசு.

உணவுக் குழாயை முன்னிழுத்து ஊசி போடும் ஒரு மருத்துவனின் லாவகத்துடன் பக்குவமான இடத்தை கண்டுணர்ந்து குழாயை கொசு செருக, அவ்வளவுதான்.

கொசு கடித்தது மோடியின் மூக்கை! 

பெரும் ஓலம். 

அகண்ட பாரதம் கலகலக்கிறது. 

கடிப்பதற்கான உரிமையை கொசுவிற்கு யார் தந்தது?

தூக்கத்திலிருந்து துள்ளியெழுந்த மோடி கோபத்துடன் கத்துகிறார்:

“எங்கே அந்த நேரு?”

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?

நகைச்சுவையாக இருந்தாலும் இங்கு சொல்லப்பட்டிருக்கும் எதுவும் உண்மையில் நடக்கக் கூடியது என்பதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் துயரம்.

புதிய நாடாளுமன்றம் என ஆடி ஆடி ஒரு கட்டடத்தை கட்டி முடித்தாயிற்று. வருடத்தின் முதல்முறையாக ஜனாதிபதியை அழைத்து வருகிறோம் என்கிற பெயரில் ஒருவர் ’ஆபத்தான பாம்பை’ பிடித்துக் கொண்டிருப்பதை போல செங்கோலை தூரமாக வைத்து பிடித்தபடி நடந்து வர, ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க’ பாணியில் வருகை பாடல் பாடி ஜனாதிபதி உள்ளே வர, ஆரவாரமாக தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசியிருக்கும் மோடி ஒரு மூணே முக்கால் லட்சத்து முப்பதாயிரத்து இருபத்து ஏழாவது முறையாக நேருவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

மோடிக்கும் நேருவுக்கும் என்னதான் பிரச்சினை?

மோடி பிறந்தது 1950ம் ஆண்டில். நேரு இறந்தது 1964ம் ஆண்டில். நேரு இறக்கும்போது மோடிக்கு வயது 14. நேருவுக்கு வயது 74. அநேகமாக நேரு இறந்த தகவலே கூட சில மாதங்கள், ஏன் சில வருடங்கள் கழித்து கூட மோடிக்கு தெரிந்திருக்கும் வாய்ப்புகளே அதிகம். எனவே தனிப்பட்ட முறையில் எந்தவித வாய்க்கால் தகராறும் நேருவுடன் மோடிக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

வேறு என்ன பிரச்சினை?

அடிப்படை சிந்தனை!

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?

பாஜகவை பின்புலத்தில் இருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேரடியாக அதை ஒப்புக் கொள்வதில்லை. டீக்கடையில் வேலை செய்ததாக கூட கதை விடுவார், ஆனால் ஆர்ஸ்எஸ்ஸுடனான தன் உறவை மோடி வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார். இன்று வரை பாஜக அரசாங்கம் எழுப்பிய சிலைகளில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் சிலை ஒன்று கூட இல்லை. குறைந்தபட்சமாக ஒரு ஹெட்கேவர், கோல்வால்கருக்கு கூட சிலை இல்லை. கொஞ்சம் கூட நன்றியில்லாதவர்கள்!

ஆனால் சமீபத்தில் ஒரு சிலையை திறந்து வைத்தார் மோடி. தீனதயாள் உபாத்யாய்  என்ற ஒருவர். அவர் யாரென எவருக்கும் தெரியாது. பாஜக கொண்டாடும் பலரும் இத்தகையோர்தான் எனினும் யார் இந்த தீனதயாள் உபாத்யாய்?

பாரதீய ஜனதா கட்சிக்கு முன் இருந்த பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர்தான் இந்த தீனதயாள் உபாத்யாய்.

இவரைத்தான் பாரதீய ஜனதா கட்சி, தங்கள் அமைப்பின் சிறந்த சிந்தனையாளராகவும் தத்துவவாதியாகவும் முன் வைக்கிறது. 

செப்டம்பர் 2013ம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவதற்கு முன், போபால் பொதுக்கூட்டம் ஒன்றில் அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோரின் உரைகள் முடிந்ததும் பேசிய மோடி தீனதயாள் உபாத்யாய் பற்றி பேசினார். “தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகையில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும்,” என்றார் மோடி.

2014ம் ஆண்டில் ஆட்சியை பிடித்து நாடாளுமன்றத்தில் முதன்முதலாக பேசிய உரையிலும், “ஏழைகளுக்கான சேவைதான் தீனதயாள் உபாத்யாயாவின் நோக்கம். அதைத்தான் நான் செய்யவிருக்கிறேன்,” எனப் பேசினார்.

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?

பாரதீய ஜனதா கட்சியின் சாசனத்திலும் தீனதயாள் உபாத்யாயா இடம்பெறுகிறார். முக்கியமாக ‘ஒருங்கிணைந்த மனிதம்தான் (Integral Humanism) கட்சியின் அடிப்படை கொள்கை’ என பாஜக கட்சித் திட்டம் அறிவித்துக் கொள்கிறது. அந்த Integral Humanism என்கிற தத்துவத்தை உருவாக்கியவர்தான் தீனதயாள் உபாத்யாயா.

1965ம் ஆண்டு மும்பையில் பேசிய தீனதயாள் உபாத்யாயா, Integral Humanism என்றால் என்னவென விளக்கியிருக்கிறார். இந்தியச் சமூகம் கடைபிடிக்க வேண்டிய சமூகமுறையாக அதை விவரிக்கிறார்:

“பாரதீய கலாசாரத்தில் தர்மம்தான் பிரதானம். தர்மத்தின் வழி இயற்கை செயல்படும்போதுதான் பண்பாடும் நாகரிகமும் பிறக்கிறது. அரசு, அரசாங்கம், நீதித்துறை ஆகியவற்றை தாண்டிய விஷயம், தர்மம். இந்திய மக்கள்தொகையான 45 கோடி பேரில், ஒருவரை தவிர மற்ற அனைவரும் ஒரு விஷயத்துக்காக வாக்களித்தார்கள் என்றாலும், அந்த விஷயம் தர்மத்துக்கு எதிராக இருந்தால், அது தவறானதுதான். தர்மத்தை எதிர்த்து செயல்பட எவருக்கும் உரிமையில்லை.

“இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்படும் மதச்சார்பின்மை தவறான விஷயம். ஏனெனில் அரசின் அடிப்படையாக தர்மம்தான் இருக்க வேண்டும். ஒற்றை தேசம்தான் இந்தியாவுக்கான தர்மம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தர்மத்துக்கு விரோதம். இந்தக் காரணத்துக்காகதான், இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி முறையை ஒற்றை முறைக்கு மாற்ற வேண்டும். மாநிலங்களுக்கு அதிகாரங்கள் இருக்கக் கூடாது. ஒன்றிய அரசுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்க வேண்டும். அரசுடன் தனிநபர் முரண் கொள்ளும் அரசியல் முறையை சமூக வளர்ச்சிக்கான முறையாக பார்க்கும் மேற்கத்திய அரசியல் முறை தவறானது.”

இந்த பாணியில் இன்னும் நிறைய பேசியிருக்கிறார் தீனதயாள் உபாத்யாயா. இதைத்தான் இன்றைய ஒன்றிய அரசு படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வது எளிது. இந்த மாற்றங்களுக்கு எதிராக நிற்பவர்தான் நேரு!

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?

வரலாற்று ரீதியாகவே நேரு, ஆர்எஸ்எஸ் உருவாக்க விரும்பும் இந்தியாவுக்கு ஒரு பெரும் தடை என்கிறார் பேராசிரியர் ராம் புனியானி.

ராம் புனியானியை பொறுத்தவரை இந்திய துணைக்கண்ட பரப்புக்குள் பிரிட்டிஷ் வரும் வரை, இங்கு ஒரு கூட்டம் ஆட்சியிலிருந்து கொண்டும் சமூக அதிகாரத்துக்கு தனிச்சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை, வருணாசிரம அடிப்படையில் பிரிக்கப்பட்டதுதான் சமூகம். கல்வியுரிமை, வருணாசிரமத்தின் மேலடுக்குகளில் உள்ளவருக்கு மட்டும்தான். வேறு எவரும் கற்க முடியாது. நீதி (அதாவது தீனதயாள் உபாத்யாயாவின் வார்த்தைகளில் சொல்வதெனில் தர்மம்) என்பதும் மநு நீதிதான். பெண்களுக்கு உரிமையே கிடையாது. மனிதர்கள் அனைவரும் அரசன் தலைமையிலான குழுவுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் புரோகிதர்களுக்கும் சேவை செய்வது மட்டும்தான்.

பிரிட்டிஷார் வந்த பிறகு அந்த சமூக ஒழுங்கு குலைகிறது.

பிரிட்டிஷ் அரசுப் பணிகளை செய்வதற்காக பலரை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷாருக்கு இருந்தது. அதற்கு முன் அவர்களுக்கு கல்வியறிவு புகட்ட வேண்டியது அவசியம். எனவே பிரிட்டிஷார், அனைவருக்கும் கல்வி கொடுக்க முனைகிறது. அப்போதும் முட்டுக் கட்டை போடுகிறது முந்தைய சமூகத்தின் கூட்டம். பிரிட்டிஷுக்கு முந்தைய சமூகத்தில் தலைநிமிர்ந்து பேசினால் கூட தண்டிக்கப்பட்டவர்கள், பிரிட்டிஷ் காலத்தில் தங்களுக்கான உரிமைகளை கேட்டு பெறுகின்றனர். கல்வி கற்கின்றனர். 

பிரிட்டிஷின் அனைவருக்குமான கல்வி, அரசுப் பணி போன்றவற்றால் பலன் பெற்ற தலைமுறை ஒன்று உருவாகிறது. அந்த தலைமுறை அடுத்த தலைமுறையை இன்னும் நவீனமாக வெளிநாடுகளுக்கு சென்று படித்து வருமளவுக்கு உருவாக்குகிறது. பாரிஸ்டர்கள், ஐரோப்பிய அரசியல், சர்வதேச பார்வை போன்றவை முதன்முறையாக இந்தியத் துணைக்கண்ட பரப்புக்குள் வருகிறது. அந்த புதிய தலைமுறை, இந்திய துணைக்கண்டத்தை ஒரு நாடாக கற்பனை செய்யத் தொடங்குகிறது. பிரிட்டிஷுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் அந்தத் தலைமுறை பெரும் பங்கு வகிக்கிறது.

பிரிட்டிஷாருக்கு முந்தைய அதிகார பீடங்களுக்கு இந்த புதிய, நவீன சமூகம் பிடிக்கவில்லை.

எனவே இந்திய சுதந்திரப் போராட்டம் இரு தரப்பாக பிரிகிறது.

ஒன்று, எல்லாருக்கும் சம வாய்ப்புகளை அளிக்கும் நாட்டை உருவாக்கும் கற்பனையில் தேசிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த நவீன வர்க்கங்கள். இன்னொன்று, பிரிட்டிஷ் போன பிறகேனும் தங்களின் அதிகார பீடங்களை மீண்டும் நிர்மாணித்துவிட வேண்டுமென விரும்பிய பழைய வர்க்கங்கள்.

நவீன வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான் காந்தி, அம்பேத்கர், நேரு, பகத் சிங் போன்றவர்கள். இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் பழைய வர்க்கங்கள் உருவாக்கியவை.

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?

இந்தியாவை விட்டு பிரிட்டிஷ்  வெளியேறிய பிறகு பிரதமரான நேரு, நவீன வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் பொதுத்துறையைக் கட்டினார். அம்பேத்கர், அரசியல் சாசனத்தை கட்டினார். காந்தி, மதச்சார்பின்மையைப் பேசினார். 

மதச்சார்பற்று அனைவருக்கும் சம வாய்ப்புகளை அளிக்க வேண்டுமென்கிற தேசியத்தை நவீன வர்க்கம் உருவாக்கிக் கொண்டிருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பழைய வர்க்கங்கள் மதத்தை தேசியமாக்கி தங்களின் பீடங்களை மீண்டும் உருவாக்க போராடிக் கொண்டிருந்தது.

இந்திய சுதந்திரத்துக்கு பிறகான காலகட்டம் ரத்தத்தில் நனைக்கப்பட்டதற்கு காரணம், இந்த பழைய வர்க்கங்களின் அரசியல்தான். அவர்களது அரசியலின் முதல் பலியாகதான் காந்தி கொல்லப்பட்டார். ஆனாலும் நேரு உருவாக்கிய மதச்சார்பற்ற, சமவாய்ப்புகளும் பொதுத்துறையும் கொண்ட இந்தியாவுக்கான அஸ்திவாரம் பலமாக இருந்தது. அதை அழிப்பதற்கென பழைய வர்க்கங்கள் துணை கொண்ட அமைப்பான ஆர்எஸ்எஸ்தான், முதலில் ஜனசங்கத்தை உருவாக்கியது. அது தோற்றபிறகு பாரதீய ஜனதாவை தோற்றுவித்தது.

அத்தகைய பாரதீய ஜனதா கட்சியின் பிரதமராகத்தான் மோடி வளர்த்தெடுக்கப்பட்டு இன்று ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறார்.

மோடியின் ஆட்சியில் தலைவிரித்தாடும் மதவாத தேசியமும், சாதிய முறைகளும் யதேச்சையானதல்ல. ஒரு பெரும் வரலாற்றுப் போக்கின் நீட்சி. பழைய வர்க்கங்கள் மீண்டு ஓர் இருண்ட காலத்தை உருவாக்குவதற்கான நூற்றாண்டு கால யத்தனிப்பு!

இப்போதைய பிரதமர் நேருவா, மோடியா?

எனவேதான் நேரு, மோடிக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறார். எனவேதான் நேருக்கு பதிலாக தீனதயாள் உபாத்யாயா போன்றவர்களை பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்துகிறது.

எனவேதான் மோடிக்கு சிம்மசொப்பனமாக இன்றும் நேரு இருக்கிறார்.

சமத்துவ வாய்ப்புகளை கோரும் சுதந்திரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் வரை, நேருதான் மோடியைப் பொறுத்தவரை இந்தியப் பிரதமர்!

இந்திய சுதந்திரப் போராட்டம் இருக்கும் காலம் வரை, மோடியின் தூக்கத்தை குலைப்பவராகதான் நேரு இருப்பார்!

banner

Related Stories

Related Stories