உணர்வோசை

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

"மதச்சார்பற்ற அரசியல் ஒரு மதவாத அரசால் மாற்றியமைக்கப்படுகிறது. எனவே இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை காத்திட இணைந்து போராடுவோம்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வைக்கம் சத்யாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு:

வைக்கம் சத்யாகிரகம் இந்திய வரலாற்றில் இணையற்ற மக்கள் இயக்கம். அதன் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நாங்கள் இங்கு கூடியுள்ளோம்.

வைக்கம் சத்யாகிரகத்தில் பங்கேற்றதற்காக கேரளாவும் தமிழ்நாடும் பெருமை கொள்கின்றன. வைக்கம் சத்யாகிரகம் மற்றும் அதன் பாரம்பரியம் என்று வரும்போது, நமது தமிழ் சகோதரர்கள் கேரள மக்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்பதற்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டம் ஒரு சான்றாகும். வைக்கம் சத்யாகிரகத்தின் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த எனது அன்புச் சகோதரரும் தோழருமான தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரளாவில் பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின. மருமரக்கால் சமரம், அருவிப்புரம் பிரதிஷ்டை, வில்லுவண்டி சாமரம், கல்லுமலை சமரம், கிருர்வாயூர் சத்யாகிரகம் போன்றவை அவற்றில் அடங்கும். மறுமலர்ச்சி இயக்கங்களின் இந்த நீண்ட சங்கிலியில் வைக்கம் சத்யாகிரகம் ஒரு முக்கிய இணைப்பு. இருப்பினும், இது தனித்துவமானது, இது மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. மற்ற இயக்கங்களிலிருந்து இது வேறுபட்டது எப்படி என்றால் சமூக சீர்திருத்தத்தில் கவனம் செலுத்திய மறுமலர்ச்சி இயக்கங்களும், தேச விடுதலைக் காகப் போராடிய காலனிய எதிர்ப்பு இயக்கமும் வைக்கம் சத்யாகிரகத்தில் ஒன்றாக இணைந்தது என்பதுதான்.

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

அதுவரை, மறுமலர்ச்சித் தலைவர்களும், சமூக அமைப்புகளும் தனித்தனியாகவே சீர்திருத்த இயக்கங்களை நடத்தி வந்தனர். ஆனால் வைக்கம் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவர்களுடன் கைகோர்த்தார்கள். எனவேதான் வைக்கம் சத்யாகிரகம் வரலாற்றில் முக்கியத்தும் பெற்றது.

தீண்டாமையை ஒழிக்க குழு!

சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் என இரட்டை தலைமையின் கீழ் சமூக அவலங்களுக்கு எதிராக இதுபோன்ற போராட்டம் வேறு எங்கும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை. ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள், அய்யன்காளி போன்ற மறுமலர்ச்சித் தலைவர்கள் கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டியிருக்காவிட்டால், கேரளாவில் இப்படி ஒரு முற்போக்கு இயக்கம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீ நாராயண குரு வைக்கத்திற்கு சென்றார். அவர் தனது ஆசிரமத்தை சத்யாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்காக திறந்துவிட்டார். தீண்டாமையை ஒழிக்க குழு ஒன்றும் அப்போது அமைக்கப்பட்டது.

தெருவில் நடமாடும் சுதந்திரம் குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால், நம் நாட்டில் அந்த காலத்தில் அதற்கு அனுமதி இல்லை. பெரும்பாலான மக்கள் பொது சாலைகளில், குறிப்பாக கோவில்களுக்கு அருகில் நடக்க அனுமதிக்கப்படவில்லை. தூய்மை மற்றும் தீண்டாமை பற்றிய கருத்துக்கள் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டது. இது அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என்பதால் உணர்வுபூர்மான எதிர்ப்பு எழுந்தது வைக்கம் சத்யாகிரக போராட்டம் என்பது வர்ணாஸ்ரம தர்மம் என்ற மனித விரோத சாதி அமைப்புக்கு எதிரான ஒரு தெளிவான அறைகூவல் ஆகும். குருவாயூர் சத்யாகிரக போராட்டத்தின் மூலம் அது மேலும் முன்னேறியது.

இந்தப் போராட்டங்கள் ஆலய நுழைவுப் பிரகடனத்துக்கு வழி வகுத்தது. அந்த வகையில், வைக்கம் சத்யாகிரகம் நாடு முழுவதற்கும் முன்மாதிரியாக இருந்தது, அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் ஆலயங்கள் மற்றும் பொது சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவது தொடர்பான பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. குருவாயூரைத் தவிர, புனே, நாசிக் மற்றும் பலவற்றிலும் வைக்கம் சத்யாகிரகத்தின் தாக்கத்தைக் காண முடியும்.

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

பெரியார் வருகையை பெருமையுடன் நினைவுகூர்வோம்

வைக்கம் சத்யாகிரகத்தின் பொதுவான பாரம்பரியம் குறித்து பெருமை கொள்ள, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான பல விஷயங்கள் உள்ளன என்பதை ஆரம்பத்திலேயே நான் தெளிவாகக் கூறினேன். சாதி அமைப்பு, ஆரிய ஆதிக்கம், பிராமண மேலாதிக்கம் ஆகிய தீமைகளை எதிர்த்து வீரத்துடன் போராடிய தந்தை பெரியார் என்ற அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வைக்கத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சத்யாகிரக போராட்டத்தில் பங்கேற்க எங்களது மாநிலத்துக்கு வருகை தந்தார் என்ற வரலாற்று உண்மையை கேரளா எப்போதும் பெருமையுடன் நினைவு கூர்கிறது.

உடல்நிலை குன்றிய நிலையிலும் போராட்டத்தில் கலந்துகொண்டு இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். வீரம் செறிந்த வைக்கம் சத்யாகிரக போராட்டத்திற்கு பிறகு, 'வைக்கம் வீரர்' என்ற பட்டத்தைப் பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. வைக்கம் சத்யாகிரகம், தந்தை பெரியாரின் அந்தஸ்தை உயர்த்தியதோடு, மற்ற விஷயங்களில் தீர்க்கமான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்ற உத்வேகமூட்டியது.

மறுமலர்ச்சி இயக்கங்கள் குறித்து மிகப் பெரிய பார்வையை மக்களிடத்தில் ஏற்படுத்தியதிலும் வரலாற்று எல்லைகளுக்குள்அவற்றை கொண்டு சென்றதிலும் தமிழகம் எங்களுடன் ஒன்றாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வைக்கம் சத்யாகிரகத்தில் சி ராஜகோபாலாச்சாரி, சீனிவாச ஐயங்கார், அய்யாமுத்து கவுண்டர் போன்றவர்களின் பங்களிப்பு அந்த போராட்டத்தின் போது ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்குவகித்தது.

வரும் நாட்களிலும் புது உற்சாகத்துடன் முன்னேறுவோம்!

இத்தகைய புகழ்பெற்ற போராட்டங்களின் பாரம்பரியத்தை கேரளாவும் தமிழ்நாடும் மக்களுக்காக பகிர்ந்து கொள்கின்றன. வரும் நாட்களிலும், அதே போன்று புது உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். வெவ்வேறு எண்ணங்களை கொண்டோர் பொதுவான ஒரு குறிக்கோளுக்காக, ஒரு பெரிய நோக்கத்திற்காக ஒன்றிணைய முடியும் மற்றும் ஒன்றிணைக்க வேண்டும். எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட ஒற்றுமை தேவை, அதை சகோதர உறவுகளுடன், உறுதியான சக்திகளுடன் மிகக்பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என்பதை வைக்கம் சத்யாகிரகம் நமக்குஒருமுன்மாதிரியான பாதையை காட்டியிருக்கிறது. முன்மாதிரியான போராட்டம்

வைக்கம் சத்தியாகிரகம் மற்றொரு முன்மாதிரியையும் முன்வைத்துள்ளது., சமூகக் கொடுமைகள் அல்லது ஒடுக்குமுறைகளுக்கு மட்டும் ஆளானவர்கள், அதற்கு எதிராகப் போராடுபவர்களாக இருக்கக் கூடாது. இத்தகைய தீமைகள் மற்றும் அடக்குமுறைகளின் மோசமான பலனை அனுபவிப்பவர்கள் கூட அதை எதிர்த்துப் போராட ஒன்றுபட வேண்டும் என்பதுதான் அது. கே.கேளப்பன், கே.பி.கேசவ மேனன், மன்னத்து பத்மநாபன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், டி.கே.மாதவன், டி.ஆர்.கிருஷ்ணசுவாமி ஐயர், கண்ணன்தொடத்து வேலாயுத மேனன் ஆகியோர் வைக்கம் சத்யாக்கிரகத்தின் முன்னணியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கத்தை சுதந்திரப் போராட்டத்துடன் இணைப்பதில் டி.கே.மாதவன் போன்றோர் ஆற்றிய பங்கு குறிப்பிடத் தக்கது.

காக்கிநாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறப்பு கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஆலய நுழைவு போராட்டத்திற்கு ஆதரவாக அவர் தீர்மானம் கொண்டு வந்தார். டி கே மாதவனுக்கு காந்தியடிகள் ஆதரவு அளித்தார். ஸ்ரீ நாராயண குருவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகுதான் காந்தியடிகள் சத்யாகிரக போராட்டத்தை காணச் சென்றார். வைக்கம் சத்யாகிரகம் தொடர்பாக காந்தியடிகளின் முதல் கேரளா பயணம் அதுவாகும்.

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

காந்தியடிகளுக்கே அனுமதி மறுப்பு

காந்தியடிகள் வைக்கம் சென்றபோது, அவர் ஒரு ‘அவர்ணன்’(பிற்படுத்தப்பட்டவர்) என்பதால், கோயிலின் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த இந்தம்துருத்தி மன என்ற அமைப்பு ஆலயத்திற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுத்தது. கோவிலை சுற்றியுள்ள பொது சாலைகள் அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும் என்று அவர்கோரிக்கை விடுத்தபோது, கோயில் நிர்வாக அதிகாரிகளான, 'சவர்ணாஸ்' அதை செய்ய மறுத்துவிட்டனர்.

இன்று, அந்த மனா (நிர்வாகம் அன்றைய காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட பின்னணியில் இருந்து வந்த தொழிலாளர்களை கொண்டு நிர்வாக அலுவலகமாக செயல்படுகிறது. இறுதியில் வரலாறு எந்த திசையில் முன்னேறுகிறது, எப்படிமுன்னோக்கி நகர்கிறது, எப்படி ஒரு முற்போக்கான திசையில் செல்கிறது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வைக்கம் சத்தியாகிரகத்தில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்மட்டுமின்றி, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், இது உண்மையிலேயே ஒரு மக்கள் இயக்கமாகும். கே.அப்துல் ரஹ்மான்குட்டி, பரீத் சாஹிப், எம்.கே.அப்துல் ரஹீம் மற்றும் பலர் இஸ்லாமிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் சத்யாகிரகத்தை ஏற்பாடு செய்வதில் திரைக்குப் பின்னால் முக்கிய பங்கு வகித்தனர். சீக்கிய மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வைக்கத்தில் 'லங்கர்' (பொது சமையல் கூடம்) கூட அமைத்தனர். எனவே, சத்யாகிரகம் உண்மையான மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டிருந்தது.

முற்போக்கான மாற்றம் தேவை

1865 ஆம் ஆண்டிலேயே, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பொதுச் சாலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கதிருவிதாங்கூர் சமஸ்தானம் முடிவு செய்தது. இன்னும், ஆறு தசாப்தங்களுக்குப் பிறகும், அந்த முடிவை நடைமுறைப்படுத்த ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது.

சிறந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.அதை அடைய, சமூக பார்வையிலும் செயல்பாடுகளிலும் முற்போக்கான மாற்றங்களைக்கொண்டு வரக்கூடிய மக்கள் இயக்கங்களும் தேவைப்படுகிறது. இதைத்தான் நமக்கு வைக்கம் சத்யாகிரகம் சுட்டிக் காட்டுகிறது.

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

சமூக மாற்றங்களை கொண்டு வந்த ஆளுமைகள்

அரசியல் இயக்கங்கள் இருந்தாலும் சமூக இயக்கங்களுடன் அவற்றுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்ற வாதத்தை உறுதிப்படுத்தும் போக்கு பொதுவாக உள்ளது. வைக்கம் சத்யாகிரகம் அந்த கருத்தோட்டத்தை நிராகரித்து விட்டது. இந்தியாவின் பெரும்பாலான சீர்திருத்த இயக்கங்கள் உயர்ந்த ஆளுமைகளின் விளைவாக வந்தவைதான்.

ராஜாராம் மோகன் ராய், ஈ.வெ. ராமசுவாமி நாயக்கர், ஜோதிபா பூலே, ஸ்ரீ நாராயண குரு மற்றும் பலர் நாட்டில் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் நிச்சயமாக பெரும் பங்கு வகித்துள்ளனர். இருப்பினும், வைக்கம் சத்தியாகிரகம் ஒரு தனிநபரைச் சுற்றி வரவில்லை. சமூக, அரசியல் இயக்கங்களில் ஈடுபட்ட அனைவரின் கூட்டுமுயற்சியே அதன் வெற்றியை உறுதி செய்தது.

மறுமலர்ச்சி இயக்கத்தின் பாரம்பரிய அரசுகள்

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கங்களின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்ற அரசியல் அமைப்புகளே இன்று தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரியார், அண்ணா தலைமையில் இருந்த திராவிட இயக்கம், கலைஞர் போன்றவர்களால் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடைந்துள்ளது. இந்தப் பெருமைக்குரிய மரபை தமிழகத்தில் திமுக அரசு முன்னெடுத்துச் செல்கிறது.

கேரளாவில், நமது மறுமலர்ச்சி இயக்கங்களின் உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை போன்ற விழுமியங்களை உள்வாங்கி, நவீன கேரளாவை உருவாக்க இடதுஜனநாயக முன்னணி அரசு முயற்சிக்கிறது. வைக்கம் சத்யாகிரகத்தின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் இந்த இரண்டு அரசியல் அமைப்புகளும், அவர்கள் தலைமையிலான அரசுகளும் ஒன்று கூடுவது மிகவும் பொருத்தமானது.

100 ஆண்டுகளுக்கு முன்பு, சமுதாயத்தின் பெரிய நலன்களை நிறைவேற்ற செய்யச் வைக்கம் சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. நமது வரலாறு, மொழி, கலாச்சாரங்கள், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் மற்றும் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுள்ள அரசியலமைப்பு ஆகியவற்றைப் பாதுகாக்க, நாட்டின் மிகப்பெரிய நலன்களுக்காக ஒன்றுபட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூக மற்றும் அரசியலில் வெவ்வேறு கொள்கைகளை உடையவர்கள் பொது நலனுக்காக ஒன்றிணைந்த ஒரு இயக்கத்தை பற்றி நாம் நினைவுகூரும்போது, நமது காலத்திற்கு பொருத்தமான பொது நன்மையை அடைய நாமும் இதுபோன்ற இயக்கங்களைஒன்றிணைக்க பாடுபடுவது கட்டாயமாகும்.

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

பொதுநலன்களுக்காகப் போராடுவோம்

அப்போதுதான் சாதிவெறி, தீண்டாமை, சமூகத் தீமைகள், மூடநம்பிக்கைகள், மனிதாபிமானமற்ற சடங்குகள் போன்றவற்றுக்கு எதிரான போராட்டம் கூர்மையடையும். இன்றும் கூட இத்தகைய பிற்போக்கு சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளை பிரதான நீரோட்டத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதம், மாநிலம் போன்றவற்றின் அடிப்படையிலும் நம்மை பிரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. நாம் போராடி சுதந்திரம் அடைந்தாலும், இன்று நமது இறையாண்மைக்கு சவால் விடும் பொறாளாதார உறவுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இவை அனைத்திற்கும் எதிராக பொதுநலன் கருதிபோராட வேண்டும். பொறுப்புள்ள அரசியல் அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் என்ற முறையில் காலம் அதை நம்மிடம் கோருகிறது.

மதவாத அரசால் மாற்றியமைக்கப்படும் விழுமியங்கள்

நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது நிலைநாட்டும் மதிப்புகள், நமது புகழ்பெற்ற சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உருவான விழுமியங்கள் மீது கடுமையான தாக்குதல் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வைக்கம் சத்யாகிரகத்தின் மதச்சார்பற்ற தன்மை பற்றி குறிப்பிட்டிருந்தேன். இது நமது சுதந்திரப் போராட்டத்தின் மிகவும் போற்றுதலுக்குரிய மதிப்புகளில் ஒன்றாகும். இது நமது அரசியலமைப்பின் அடிப்படைக்கொள்கைகளில்ஒன்றாகும். எவ்வாறாயினும், நமது மதச்சார்பற்ற அரசியல் ஒரு மதவாத அரசால் மாற்றியமைக்கப்படுகிறது.

நமது அரசியலமைப்புச் சட்டம் மநுஸ்மிருதியால் மாற்றப்பட முயற்சிகள் நடக்கின்றன. நமது கூட்டாட்சி அமைப்பு ஒற்றையாட்சி அமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சுதந்திரமான, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டு, பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற மோசமான அனைத்து முயற்சிகள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், அவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும். கடந்த காலங்களில் இதே போன்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொண்டோம்.

அந்த நேரத்தில், நாங்கள் அதை எதிர்கொண்டு ஒன்றாக நின்று வென்றோம். தற்போதும், இதே போன்ற பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம். இந்த நேரத்தில் இந்த சக்திகளால் ஏற்படும் நெருக்கடியை நாம் கைகோர்த்து நின்று எதிர்ப்பதில் உறுதியாக உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரங்களை தகர்ப்பதற்காக ஆளுநருக்கு உரிய அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

ஆளுநர்களின் அதிகார அத்துமீறல் மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு விஷயம் தொடர்பாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு எந்த அதிகாரத்தை கொண்டு அனுப்பி வைக்கிறார்கள்? நமது கூட்டாட்சி ஆட்சியில், மாநிலப் பட்டியலில் இடம்பெறும் ஒரு விஷயத்தில் மாநிலச் சட்டம் செல்லுமா இல்லையா என்பதை பரிசீலிக்க குடியரசுத் தலைவருக்குக் கூட அதிகாரம் இல்லாதபோது, அத்தகைய மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதன் மூலம், அரசியலமைப்பின் கீழ் அளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உண்மையில் அவர்கள் வேண்டுமென்றே கைவிடுகிறார்கள்.

பெரியார்
பெரியார்

இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயலாகும். ஒரு மாநிலச் சட்டம், பொதுப் பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தைத் தொடும். மத்திய சட்டத்தில் உள்ள எந்த விதிகளையும் மீறாமல் இருக்கும் வரை, வேறுவிதமாகக் கூறினால், மத்திய சட்டத்தின் அம்சங்களுக்குள் நுழையாத பட்சத்தில், மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அத்தகைய மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநரால் அனுப்ப முடியாது. இந்த மசோதாவில் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக ஏதும் இருப்பதாக ஆளுநர் கருதினாலும், அந்த மசோதாவை தனது கருத்துக்களுடன் மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்புவதே ஆளுநருக்கு உள்ள ஒரே வாய்ப்பு.

நீதிமன்ற அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் ஆளுநர்கள்

இது தொடர்பாக, ஒரு சட்டத்தை அரசியலமைப்பு ரீதியாக தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் இந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த உண்மையை மறந்துவிட்டு, இந்த நாட்டில் ஆளுநர் பதவியை வகிக்கும் சிலர், அரசியல் சாசனத்தால் சட்டப்பூர்வமாக நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள துறைகளை ஆக்கிரமித்து வருகின்றனர்.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் சரியாகப் பிரித்து வைத்துள்ள அதிகாரங்கள், ஆளுநரைப் போன்ற ஒரு நியமன அதிகாரியின் தலையீட்டை அனுமதிக்கும் பட்சத்தில், நாட்டில் ஜனநாயக அரசியல் நிலவுவதைப் பற்றி சிந்திப்பது பயனற்றதாக இருக்கும். இந்த நாட்டில் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் எந்த ஆளுநருக்கும் தனது ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்கும் அதிகாரமோ உரிமையோ கிடையாது.

“சாதிய அமைப்பை எதிர்த்து வீரத்துடன் போராடியவர் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

இது நன்கு நிறுவப்பட்ட சட்டத்தின் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் அவ்வப்போது நினைவுகூறும் போதும் ஜனநாயக செயல்முறைக்கு குந்தகம் விளைவிப்பதை மறைமுக நோக்கமாக கொண்ட ஆளுநர்கள், மசோதாக்களை பரிசீலிக்காமல் அவற்றை முடக்கி வைக்கிறார்கள்.அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். கேரள ஆளுநரின் பழிவாங்கும் செயல்!

கேரள மாநிலத்தில், ஆளுநர் தனது ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட எட்டு மசோதாக்களை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநரின் இத்தகைய செயலற்ற தன்மையை நீதிமன்றத்திற்கு கேரள அரசு கொண்டு சென்ற போதுதான் அந்த எட்டு மசோதாக்களில் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார், மீதமுள்ளவற்றை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார்.

ஆளுநர் தனது சட்ட விரோத செயல்களை தெரிந்தே செய்கிறார் என்பது தெளிவாகிறது. அதையும் மீறி, அவர் அவ்வாறு நடந்துகொள்வதுஎன்பது அவரது அரசியல் பழிவாங்கலை மட்டுமே காட்டுகிறது. நாட்டு மக்கள் இத்தகைய பழிவாங்கும் செயல்களை திறம்பட எதிர்கொண்டு தோற்கடிப்பதில் வல்லவர்கள் என்பதை அதிகார மையங்கள் நினைவில் கொள்வது நல்லது. வைக்கம் சத்யாகிரகத்தின் இந்த நூற்றாண்டு விழா, இந்த முன்னோக்கிய பயணத்தில் புத்துணர்ச்சியையும் வலிமையையும் அளிக்கும். இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் உரையாற்றினார்.

Related Stories

Related Stories