உணர்வோசை

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவும், ஏற்கனவே நடப்பில் உள்ள இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் மறுத்து வருகிறார்கள்.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆடுகள் நனைகிறதே என்று ஓநாய்கள் கவலைப்படுமா? எல்லா மாநிலங்களிலும் சாதிய அடிப்படையில் மக்களைத் திரட்டி சாதியப் பிளவுகளை பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வருவதையே வழக்கமாக வைத்திருப்பதுதான் மோடி அரசாங்கம். அப்படிப்பட்டவர்கள் கணக்கெடுப்பு நடத்துவதால் சாதிய உணர்வுகள் மேலோங்கும் என்பது இந்த ஆண்டின் நூதனமான நகைப்புக்குரிய விஷயமாகும்” என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக நடத்தாமல் இருப்பது குறித்து தீக்கதிர் நாளேட்டில் கே.பாலகிருஷ்ணன் கட்டுரை தீட்டியுள்ளார்.

அந்தக் கட்டுரை பின்வருமாறு :-

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் வரலாற்றில் முதன்முறையாக கேரளத்தில் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது பீகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளைத் தற்போது வெளியிட்டுள்ளது. கேரள மாநில அரசும் சாதிவாரி ஆய்வினை நடத்தப் போகிறோம் என்று அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பல கட்சிகளும், ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், நடக்கவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு இணைத்தே இதனை நடத்த வேண்டும் என்று வலுவாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் வழிநடத்தப்படும் ஒன்றிய பாஜக அரசோ சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று பிடிவாதமாக மறுத்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில், சாதிவாரிக் கணக் கெடுப்பையும் சேர்த்தே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு, சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த இயலாது என்று சொன்னதுடன் அது ஏராளமான சிக்கல்கள் நிறைந்திருக்கும் பிரச்சனை என்றும் தெரிவித்தது. இதனால் மக்களின் உண்மையான வாழ்வாதாரத்தை எவ்விதமாகவும் துல்லியமாக கணக்கிட முடியாது என்று சொல்லி சாதிவாரிக் கணக்கெடுப்பையே நடத்த முடியாது என்று அழுத்தமாக மறுத்து, வாக்குமூலமாகவே தெரிவித்தது.

ஒன்றிய அரசால் முடியாதா?

ஆனால், உண்மையில் மாநில அளவிலேயே சாதி வாரி கணக்கெடுப்பு சாத்தியமாகிவிட்டது. போது, பீகார் மாநில அரசினால் துல்லியமான ஆய்வினை நடத்த முடியும்போது, எல்லா அதிகாரங்களும் படைத்த ஒன்றிய அரசாங்கத்தால் அது ஏன் முடியாது? ஒவ்வொரு மாநில அரசும், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்காக தனித்தனியாக பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடுவதற்குப் பதிலாக, வழக்கமாக நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பினை நடத்தினால் அந்தசெலவோடு இணைத்தே சாதி வாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முடியுமே. இதனால் கூடுதலான செலவுகளை குறைக்க முடியும்; அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள், இதர பட்டியலின மக்களின் சதவீதத்தை தெரிந்து கொள்ள ஆதாரமாக அமைந்திடும்.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

ஆனால் இந்த கணக்கெடுப்பிற்கு ஒன்றிய அரசாங்கம் மறுப்புச்சொல்வது ஏன் என்பதுதான் அழுத்தமான கேள்வி. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்க மேம்போக்கான காரணங்களை ஒன்றிய அரசு கூறினாலும், உண்மையான காரணம் என்னவெனில், மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் சாதிய கட்டமைப்பு ஆழமாக ஊடுருவியுள்ள நமது நாட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களும், பட்டியலின மக்களும் இடஒதுக்கீடு உரிமைகளைப் பெற்று மேம்பட்டு முன்னேறிவிடக் கூடாது; அந்த மக்களை அழுத்தியே வைத்திருக்க வேண்டும் என்பது தான். அதற்காகவே பிடிவாதமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய பாஜக அரசு மறுத்து வருகிறது.

மனுவாத சிந்தனையே அடிப்படை!

இந்திய விடுதலைக்கு முன்னால், 1881-இல் துவங்கி 1941 வரை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த எல்லா மக்கள் தொகை கணக் கெடுப்புகளுமே சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கித்தான் நடத்தப்பட்டது. 1941-இல் கடைசியாக எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியிடப்படாத சூழலில், 1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலேயே, இப்போதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை கணக்கிடப்படுகிறது. ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மண்டல் கமிஷன் தீர்மானித்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு 27 சதவிகிதமாக வரையறுக்கப்பட்டது. இந்த விகிதம் 1931-ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே கணக்கிட்டு வழங்கப்பட்டது.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

1931 கணக்குப்படி இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 52 சதவிகிதம் என்பதை கணக்கில் கொண்டு, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மண்டல் கமிஷன் சிபாரிசு வழங்கிய 1990 ஆம்ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருந்தால், அதன் மூலம் 50 முதல் 70 சதவிகிதம் வரை இடஒதுக்கீடு உரிமையை பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றிருக்க முடியும். மொத்த கல்வி, வேலை வாய்ப்பில் 70 சதவிகித வாய்ப்புக்களை இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலைமை ஆட்சியாளர்களுக்கு உருவாகியிருக்கும். இதை தவிர்ப்பதற்காகத்தான், தற்போதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி வாரி ஆய்வை நடத்துவதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

திட்டமிட்டு தவிர்க்கும் பாஜக!

2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பொறுத்தவரை, அதில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்தே நடத்தப் பட்டது. ஆனால், இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் தொகுக்கப்பட்ட நிலையில், 2014-இல் ஆட்சிக்கு வந்த பாஜக, முடிவுகளை வெளியிட மறுத்துவிட்டது. 2011 கணக்கெடுப்பானது, விரிவான வகையில் 118 கோடி மக்களை கணக்கெடுப்பிற்குள் கொண்டு வந்துள் ளது; இந்தக் கணக்கெடுப்பினை தவறுகள் அதிகம் இல்லாத, துல்லியமான கணக்கெடுப்பாக கூறலாம் என்றே அதில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர். இந்த கணக்கெடுப்பிற்காக, 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்பட்டது.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டும் வெளியிட்ட மோடி அரசாங்கம், சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை மறைத்துவிட்டது. 2011 கணக்கெடுப்பு அடிப்படையில் சாதிவாரி மக்கள் தொகை விபரத்தை வெளியிட்டால், தற்போது முற்பட்ட சாதியினர் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் அனுபவித்துவரும் சலுகைகள் கேள்விக் குள்ளாகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக் கீட்டை மிகக்கூடுதலாக வழங்க வேண்டும் என்ற குரல் கள் வலுப்படும். அதனால் அவர்கள் உரிமைகளைப் பெற்று முன்னேறும் சூழல் உருவாகும். இது ஆர்.எஸ்.எஸ் திட்டத்திற்கு எதிரானது. எனவேதான் பாஜக அரசாங்கம் கணக்கெடுப்பை வெளியிடாமல் மறைக்கிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவை காரணமாக சொல்லி அதை மொத்தமாக ஒத்திவைத்து விட்டது மோடி அரசு. உலகத்தின் பெரும்பாலான நாடுகள், கொரோனா காலத்திலும் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளன. சாதி வாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கை எழும் என்பதாலேயே இதனை அவர்கள் தவிர்த்தனர். இன்றுவரை கணக்கெடுப்பும் நடைபெறவில்லை, அதற்கான அறிகுறியும் இல்லை.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

பிற்பட்டோருக்கு பதவிகள் மறுப்பு!

கணக்கெடுப்புக்கான கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் - பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைக் கூட மோடி அரசு முழுமையாக அமல்படுத்தாமல் இருக்கிறது என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். மத்திய கல்வி நிலையங்கள், ஐஐடி, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில், பட்டியல் - பழங்குடியினருக்கு மொத்தம் 22.5 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

எனினும், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் பணியிடங்களில் 1 சதவிகிதம் கூட பட்டியலின பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அமலாகவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோரும் மிகக்குறைவாகவே உள்ளனர். ஒன்றிய அரசில் 90 துறைகள் - அதற்கான துறைச் செயலாளர்கள் இருப்பதாகவும், இதில் 3 அரசுத்துறை செயலாளர்கள்தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆவர். மீதி இருக்கும் அனைவருமே முற்பட்ட சாதியினராக உள்ளனர். அவர்கள் அனுபவித்து வரும் சலுகைகள் பறிபோய் விடக்கூடாது; அடித்தட்டில் இருக்கும் ஓபிசி மக்கள் துறைச் செயலாளர்களாக அந்தஸ்து பெற்றுவிடக் விடக்கூடாது என்பதும், ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கங்கள் ஆகும்.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

தனியார் துறை இட ஒதுக்கீடு!

அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பே இன்று எந்த அளவிற்கு இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயமாகிக் கொண்டிருக்கின்றன. அரசுத் துறைகளில் பணியிடங்கள் இருந்தபோதே பிற்படுத்தப்பட்ட மக்கள் அந்த இடங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி அமர்த்தப்படவில்லை. இடஒதுக்கீட்டை அமல்படுத்த முழுமனதோடு ஒன்றிய அரசு செயல்பட்டதில்லை.

தற்போது தனியார்மயம் மூலம் வேலைவாய்ப்பே இல்லாமல் போகும் நிலையில், இடஒதுக்கீடு மூலம் கிடைக்கும் சில வாய்ப்புகளையும் தட்டிப்பறிப்பதற்காகவே தனியார்மய நடவடிக்கை வேகப்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் தொகுத்துப் பார்த்தால், தப்பித்தவறி கூட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி அடைந்துவிடக் கூடாது; அவர்கள் முன்னேறிவிடக் கூடாது என்பதுதான் அர்த்த மாக இருக்கிறது.

“சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!

ஆடு நனைவதாக ஓநாய்க்கு கவலை?

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மறுப்பதற்கு, இன்னொரு காரணமும் கூறுகிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், சாதிய உணர்வு மேலோங்கிவிடுமாம். ஆடுகள் நனைகிறதே என்று ஓநாய்கள் கவலைப்படுமா? எல்லா மாநிலங்களிலும் சாதிய அடிப்படையில் மக்களைத் திரட்டி சாதியப் பிளவுகளை பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வருவதையே வழக்கமாக வைத்திருப்பதுதான் மோடி அரசாங்கம். அப்படிப்பட்டவர்கள் கணக்கெடுப்பு நடத்துவதால் சாதிய உணர்வுகள் மேலோங்கும் என்பது இந்த ஆண்டின் நூதனமான நகைப்புக்குரிய விஷயமாகும்.

பிற்படுத்தப்பட்ட- பட்டியலின- பழங்குடியின மக்களை அடக்கி ஆளும் வருணாசிரம கோட்பாடு இருக்கும்வரை சாதிய உணர்வு என்பது கெட்டிப்படவே செய்யும். மாறாக, பட்டியலின - பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி வேலை வாய்ப்பில் அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட்டு, அதன்மூலம் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரும்போது, இதர சமூகத்தோடு இணைந்து சமமான நிலையைப் பெறும்போது சாதிய உணர்வு தானாகவே மங்கிப் போய்விடும் என்பதுதான் வரலாற்று உண்மை.

ஆனால், அந்த மாதிரியான நிலைமை வந்துவிடக் கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க-வினர் உண்மையான திட்டம். அதனால்தான், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவும், ஏற்கனவே நடப்பில் உள்ள இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் மறுத்து வருகிறார்கள். எனவே, பாஜகவின் நயவஞ்சக நடவடிக்கையை எதிர்த்து நாடு தழுவிய குரல் எழ வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- நன்றி : தீக்கதிர்.

banner

Related Stories

Related Stories