உணர்வோசை

கந்தாரா படம்.. இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் திட்டத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறதா?

கந்தாரா என்பது இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் project ஆகவும் இந்துத்துவம் கைப்பற்றி வரும் படைப்புவெளியை பயன்படுத்தி வளர்ந்து கொள்ள விரும்பும் ஷெட்டிமாரின் உத்தியாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

கந்தாரா படம்..  இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் திட்டத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காந்தாரா’ கன்னடப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி சமூக தளங்களில் விவாதங்களை உருவாக்கி வருகிறது. ஒரு சாரார் அற்புதமான திரை ஆக்கம் என கொண்டாடுகின்றனர். இன்னொரு தரப்பு படம் முன் வைக்கும் அரசியலில் சிக்கல் இருப்பதாக சொல்கிறார்கள்.

கதை என்ன?

நிலத்தைப் பொதுவாக வைத்து வாழும் பழங்குடிகள், நிலப்பிரபு, காட்டிலிருந்து பழங்குடியை அகற்ற விரும்பும் அரசின் வன இலாகா அலுவலர் என மூன்று முனைகளுக்கு இடையே கதை நகர்கிறது.

கிட்டத்தட்ட கதை என்னவாக முடியுமென்பதை நீங்கள் யூகித்திருக்க முடியும். அவ்வாறாகவே படம் முடிகிறது.

க்ளைமேக்ஸ் அவதார் பட க்ளைமேக்ஸின் மினியேச்சர் வெர்ஷனாக இருந்தது.

ஒரு தொன்மக் கதையையும் தற்காலப் பிரச்சினையும் இணைக்க முயன்றிருக்கிறார்கள். தொன்மக் கதை படத்துக்கு தேவையான அமானுஷ்யத்தையும் இறுதி வெடிப்புக்கான முத்தாய்ப்பையும் சரியாகக் கட்டமைத்துக் கொண்டே வருகிறது. இறுதிச் சண்டையில் நாயகனே வீழ்ந்தாலும் ‘இல்லை, இன்னும் இருக்கிறது’ என ஒரு வகை சூரசம்ஹாரம் அல்லது ருத்ரத் தாண்டவத்தை எதிர்பார்க்கும் அளவுக்கான திரைக்கதை நெய்யப்பட்டிருக்கிறது. இறுதி 10 நிமிடங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.

திரையாக்கமாக நல்லனுபவத்தை படம் அளித்திருந்த போதும், சில நெருடல்கள் இருந்தன.

இப்படத்தை இயக்கியிருப்பவர் படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டி.கந்தாரா படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டியின் பாத்திரப் பெயர் ஷிவா. பழங்குடியாக வருகிறார். காட்டையும் நிலத்தையும் அபகரிக்க முயலும் அரசு மற்றும் நிலப்பிரபுவுக்கு எதிராக நிற்கிறார். அருமையாகவும் நடித்திருக்கிறார்.

படத்தில் வரும் பழங்குடி மக்களின் கடவுளாக பஞ்சுர்ளி என்ற காட்டு தெய்வம் காட்டப்படுகிறது. அதை முதலில் ஒரு கல்லாக காட்டுகிறார்கள். சில காலத்துக்கு பின் தெய்வத்தை வணங்கும் வடிவமாக பூத கோல நடனத்தைக் காட்டுகின்றனர். அதற்குப் பிறகு திடுமென பஞ்சுர்ளி கடவுளின் இடத்தில் ஒரு பன்றியை வைத்து வராக அவதாரம் என்கிறார்கள்.

கந்தாரா படம்..  இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் திட்டத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறதா?

படத்துவக்கத்தில் எருமைப் பந்தயத்தில் நாயகன் கலந்து கொள்கிறான், வேட்டையாடுகிறான். பன்றிக் கறி உண்ணுகிறார்கள். எல்லாமே திராவிட வழிபாட்டு மற்றும் வாழ்வியல் முறைகள். சடாரென திரிசூலமாகவும் விஷ்ணுவின் அவதாரமாகவும் படம் அவற்றை சுவீகரிக்கும்போது ஏதோ தவறாக இருப்பது உறைக்கத் தொடங்குகிறது.

காட்டிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றும் வேலை செய்யும் வன இலாகா அதிகாரி படத்தின் இறுதியில் நல்லவராகி விடுவார். மொத்தத்தில் நிலப்பிரபு மட்டுமே கெட்டவர் என்பதாக படம் முடிகிறது.

அதாவது அரசிடம் பழங்குடி மக்களை இணங்கிப் போக படம் சொல்கிறது. கூடுதலாக பழங்குடி வழிபாடு பார்ப்பனமயமாக்கப்படுகிறது.

நிலப்பிரபு வீட்டுக்குள் பழங்குடியினர் அனுமதிக்கப்படுவதில்லை. கையைக் கொடுத்தாலும் அசுத்தம் போகக் கையைக் கழுவிக் கொள்கிறார். பார்ப்பனியத்தை கேள்வி கேட்கும் ஒரு இடம் கூட படத்தில் இல்லை. இன்னொரு இடத்தில் பழங்குடி குடிசைக்கு குண்டு வைப்பவர் இஸ்லாமியராக காண்பிக்கப்படும் காட்சி இடம்பெறுகிறது.

பார்ப்பனியம் வேரூன்றுவதை எதிர்த்ததற்காகவே சமூக செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட இடம் கர்நாடகா. குறிப்பாக கல்புர்கி! லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல என்னும் இயக்கம் கிளம்புவதற்கான முக்கிய நபராக இருந்தவர். பார்ப்பனமயப்படுத்தப்படாத தமிழர் வழிபாடு போலவே கர்நாடகாவிலும் பூர்வ வழிபாடு அல்லது திராவிட வழிபாடுகள் இருந்தன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இருந்தவர்களை இந்துத்துவம் அங்கு கொன்றிருக்கிறது. இப்படத்தில் அத்தகைய பூர்வ வழிபாடுகளை தனதாக இந்துத்துவம் சுவீகரித்துக் கொள்கிறது.

கந்தாரா படம்..  இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் திட்டத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறதா?

பூதகோலம் உள்ளிட்ட கடலோர கர்நாடகாவின் பூர்வ தெய்வ வழிபாடுகளை பார்ப்பனமயப்படுத்தி இஸ்லாமியர்களை அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பார்ப்பன ஆதிக்கத்துக்கும் முந்தைய கால திராவிட வழிபாட்டு முறைகளை தற்போது இந்துத்துவம் தன்வயப்படுத்தி வருவதாக நியூஸ்மினிட் தளம் கூட ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, பழங்குடிகளை காட்டிலிருந்து வெளியேற்றி கார்ப்பரெட்டுகளுக்கு அதை தாரை வார்க்க முயலும் அரசிடம், பூர்வகுடிகளே மனமுவந்து வந்து நிலங்களை அளிக்க வேண்டுமென படம் கேட்டு முடிவதுதான். பச்சையான அயோக்கியத்தனம்!

ஆகவே, கந்தாரா என்பது இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் project ஆகவும் இந்துத்துவம் கைப்பற்றி வரும் படைப்புவெளியை பயன்படுத்தி வளர்ந்து கொள்ள விரும்பும் ஷெட்டிமாரின் உத்தியாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories