உணர்வோசை

“மனித குல அழிவுக்கான அடுத்த எச்சரிக்கை” : அலற வைக்கும் அறிக்கை!

காலநிலை மாற்றச் சிக்கலை சரிசெய்வதற்கான காலம் வேகமாக கழிந்து கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறது காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசாங்கங்கள் குழுவின் அறிக்கை.

“மனித குல அழிவுக்கான அடுத்த எச்சரிக்கை” : அலற வைக்கும் அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மனித குல அழிவுக்கான அடுத்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

28/02/2022 (திங்கட்கிழமை) அன்று காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசாங்கங்கள் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்த அறிக்கை இது.

காலநிலை மாற்றச் சிக்கலை சரிசெய்வதற்கான காலம் வேகமாக கழிந்து கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறது அறிக்கை. 330லிருந்து 360 கோடி மக்கள் காலநிலை மாற்ற பாதிப்பு இருக்கும் சூழல்களில் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட உலக மக்கள்தொகையின் பாதி.

18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் அறிக்கை ஒவ்வொரு பகுதி ரீதியாக நேரும் புவிவெப்பத் தாக்கங்களை அலசி ஆராய்ந்திருக்கிறது. அரசுகள் உடனடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கவில்லை எனில், ‘வாழத்தக்க சூழலும் எதிர்காலமும்’ இருக்கப் போவதில்லை எனவும் அலற வைக்கிறது அறிக்கை.

காலநிலை மாற்றம் என்றதும் வெயில், மழை, நிலநடுக்கம், எரிமலைக் குழம்பு, கடல் பொங்கல் என்றெல்லாம் ‘2012’ ஆங்கிலப் பட பாணியில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது என்றோ வரப் போகும் ஒரு பிரச்சினை என கற்பனையில் இருக்கிறோம். காலநிலை மாற்றம் இயற்கை இடர்களாக மட்டும் வரப் போவதில்லை என்பதை இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக நிறுவுகிறது.

கடல் மட்டம் உயர்ந்தால், கடலோரத்தை விட்டு உள் மாவட்டத்தில் குடியேறி விட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பதும் முட்டாள்தனமே என்கிறது அறிக்கை. கடலால் பாதிக்கப்படவில்லை எனில் உள்மாவட்டத்தில் பஞ்சத்தாலும் விலைவாசி உயர்வாலும் சுருட்டிப் போடும் கடும் வெயிலும் நம்மை பாதிக்கக் காத்திருக்கும்.

உலகம் முழுவதும் உள்ள பிரச்சினைதானே எனக் கேட்கும் போக்கும் இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு, தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு, சென்னைக்கு என்ன பாதிப்பு, நான் வசிக்கும் வீட்டுக்கு என்ன பாதிப்பு எனக் கேட்பதும் எல்லாருக்கும் வருவதுதானே எனக்கும் என அக்கறையின்றி இருப்பதும்தான் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் காரணிகளாக இருக்கின்றன.

இதுவரை ஐ.நாவிலிருந்து வந்த காலநிலை மாற்றம் பற்றிய அறிக்கைகளுக்கும் தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கைக்கும் இடையே ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. இதுவரை வந்த அறிக்கைகளின் வரிகள் எதிர்காலச் சுட்டலிலேயே ‘இனி இப்படியாகும், இப்படி நடக்கும், இப்படி மாறும்’ என பெரும்பாலும் இருந்தது. ஆனால் இந்த அறிக்கையோ பெரும்பாலும் நிகழ்காலச் சுட்டலையே கொண்டிருக்கிறது.

நம் அழிவு எதிர்காலத்தில் இல்லை. அழிவுக்கு நடுவேதான் நாம் இருக்கிறோம்!

“தெற்காசியாவில் தீவிர காலநிலைகள் உணவு பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற விவசாய நாடுகள் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பெரும் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்கின்றன” என்னும் அறிக்கை, நீண்ட கால வெப்ப அலைகளும் இந்தியாவில் தொடங்கி விட்டதாக குறிப்பிடுகிறது.

270 அறிவியலாளர்கள் சமர்ப்பித்த 34,000 ஆய்வுகளின் அடிப்படைகளில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

“விலைவாசியில் கடும் உயர்வு 2015லிருந்து 2040 வரை எல்லா தெற்காசிய பகுதிகளில் நேர்ந்து தொடர்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அரிசி விலையும் கோதுமை விலையும் தொடர்ந்து உயர்வது உணவு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும்,” என்கிறது அறிக்கை.

“மனித குல அழிவுக்கான அடுத்த எச்சரிக்கை” : அலற வைக்கும் அறிக்கை!

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அறிக்கைக் குறிப்பிடுகிறது.

“நகரமயமாக்கல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினாலும் காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் நகரங்களையே அதிகமாக தாக்கவிருக்கிறது. பெரும்பாலான கடலோர நகரங்கள் கடல் மட்ட உயர்வாலும் வெப்ப அலைகளாலும் நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பாலும் பாதிக்கப்படும்,” என்கிறது அறிக்கை.

மும்பை, சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் முதலிய நகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான மெட்ரோ நகரங்களாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுபவை. இந்த நகரங்களுக்கு ஏற்படும் பாதிப்பு இங்கு வாழும் மக்களுக்கான பாதிப்பாக மட்டும் இல்லாமல், இந்தியப் பொருளாதாரத்தையே பாதிக்கும் நிலையில் இருக்கும்.

மேலும் ”காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் ஆபத்துகளும் மிக நுட்பமடைந்து கொண்டே வருகின்றன. எதிர்கொள்வதற்கு கடினமானவையாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. பல காலநிலை இடர்கள் ஒரே நேரத்தில் தோன்றும். பல காலநிலை மற்றும் காலநிலையல்லா ஆபத்துகளும் ஒன்றோடொன்று இணையும். உருவாகும் ஆபத்தை பன்மடங்கு அதிகரிக்கும். விளைவுகள் பல துறைகளிலும் பகுதிகளிலும் பிரதிபலிக்கும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சில முறைகள் புதுவகை தாக்கங்களையும் ஆபத்துகளையும் உருவாக்கும்,” என்றும் குறிப்பிடுகிறது அறிக்கை.

அது என்ன காலநிலை ஆபத்து மற்றும் காலநிலையல்லா ஆபத்து?

மழை, புயல், வெயில், வறட்சி, தண்ணீர் பஞ்சம் ஆகியவற்றை காலநிலை ஆபத்துகள் எனக் கொண்டால் சாதி, தீண்டாமை, ஆணாதிக்கம், வேலைவாய்ப்பின்மை, குறைந்த வருமானம் முதலியவை காலநிலையல்லா ஆபத்துகள். இவை இரண்டும் ஒன்று சேர்கையில் நேரவிருப்பது உங்களின் கற்பனைக்கெட்டா பேரழிவாக இருக்கும். அது தொடங்கியும் விட்டது என்பதையே அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த அறிக்கையை இந்தியா வரவேற்றிருக்கிறது என்பதுதான். சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிக்கையின் கணிப்புகளை வரவேற்று, “காலநிலை மாற்றம் சர்வதேசப் பிரச்சினை என்பதால் சர்வதேச ஒத்துழைப்புடன் மட்டுமே அதை சரி செய்ய முடியுமென தீர்க்கமாக இந்தியா நம்புகிறது,” எனக் கூறியிருக்கிறார்.

பொறுப்பை தட்டிக் கழிக்கத்தான் எத்தனை வியக்கியானங்கள்?

banner

Related Stories

Related Stories