உணர்வோசை

“ஒன்றிய அரசா..? மத்திய அரசா..?” : ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றிய ‘கு.சிவமணி’ சிறப்பு கட்டுரை !

அரசமைப்பை உருவாக்கியவர்கள் மிக்க விழிப்புடன் மத்திய அரசு (central government) என்ற சொற்களைத் தவிர்த்தனர்; ஒன்றியம் (union), ஒன்றிய அரசு அல்லது இந்திய அரசு (Government of India) என்று குறிப்பிட்டனர்.

“ஒன்றிய அரசா..? மத்திய அரசா..?” : ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றிய ‘கு.சிவமணி’ சிறப்பு கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஒன்றிய அரசு என்பதை உறுதிப்படுத்தியபோது, அதற்கு அரசியல் நோக்கில் எதிர்க் குரல் எழுந்தது; அதைத் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தத்தம் போக்குக்கு ஏற்ப ஆராய்ந்தன. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஒன்றியம் எனும் சொல்லாட்சிக்குத் தடை வேண்டிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தியாவுக்குப் ‘பாரதம்’ எனப் பெயரிடப்பட வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ‘இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்க வேண்டும்' எனும் இந்திய அரசமைப்பின் முதல் தொடர் - எப்போது, எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், யாரால் அறிமுகம் செய்யப்பெற்று, என்னென்ன விளைவுகளை எதிர்கொண்டது என்று பார்ப்போம்.

அரசமைப்புப் பேரவையில் 18 செப்டம்பர், 1949 அன்று பி.ஆர்.அம்பேத்கர் இந்தியா எதிர்காலத்தில் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என உரையாற்றுகையில், ‘ஒன்றியம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதற்கு மௌலானா ஹஸ்ரத் மொஹானி ‘மைய அரசின் அதிகாரத்தின் கீழ் மாநிலங்கள் எல்லாம் அமைய வேண்டும்’ என்ற நிலைப்பாடு, ஜெர்மனியில் பிஸ்மார்க்கும், கெய்சர் வில்லியமும் இறுதியாக அடால்ஃப் ஹிட்லரும் நடத்திய வல்லாட்சிக்கு வழிவகுக்கும் என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு அம்பேத்கர் `ஒன்றியம் என்பது அழிக்கப்பட முடியாத ஒரு கூட்டாட்சி’ என்றும், `ஒன்றியமும் மாநிலங்களும் ஒன்றோடு ஒன்று கூட்டுறவு கொண்டவை; அவை அரசமைப்பிலிருந்து அதிகாரங்களைப் பெறுகின்றன. உச்ச நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றத்தின் மேல் கண்காணிப்பு உரிமை கிடையாது; ஆனால், உயர் நீதிமன்றத்திலிருந்து மேல்முறையீட்டு அதிகாரவரம்பு மட்டுமே உண்டு. உயர் நீதிமன்றம் தன்னாட்சியுடன் இயங்கக் கூடியது. அவை போன்றவையே ஒன்றியமும் மாநிலங்களும்’ என்றும் விளக்கமளித்தார்.

இந்தியா, அதாவது பாரதம் என்ற தொடரிலுள்ள இந்தியா என்பதற்கு எச்.வி.காமத்தும், அவருடன் சேத் கோவிந்தும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், எம்.அனந்தசயனம் ஐயங்கார் ‘இந்தியா’வுக்குப் பதில் ‘பாரதம், பாரத் வர்ஷம் அல்லது ஹிந்துஸ்தானம்’ என்ற பெயரை முன்மொழிந்தார். நாடு விடுதலை அடைந்தபோது, 16 மாநிலங்களும், 562 இந்தியக் குறுநில அரசுகளும் இருந்தன. குறுநில அரசுகள் நாட்டு நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கும், மக்கள்தொகையில் 25%-ம் கொண்டிருந்தன. பல அரசுகள் பெயரளவில் இருந்தாலும் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தன. ஏறத்தாழ 44 அரசுகள் போர்ப் படைகள் வைத்திருந்தன.

குறிப்பாக, ஹைதராபாத், ஜம்மு-காஷ்மீர், மைசூர், திருவிதாங்கூர், ஜூனாகத் போன்ற குறுநில அரசுகள் இந்தியாவில் இணைய மறுத்தன. வல்லபபாய் பட்டேல் சாம பேத தான தண்ட வழிகளைப் பயன்படுத்தி, அனைத்துக் குறுநில அரசுகளையும் ஒன்றிணைத்தார். இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் உலக நாடுகள் பலவற்றில் கூட்டாட்சி அமைப்பு முறைகள் நிலவின.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க ஐக்கிய அரசுகள், சோவியத் சோஷலிசக் குடியரசு ஒன்றியம். அமெரிக்க அரசமைப்பு முறைக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. அமெரிக்காவின் மாநிலங்கள் விரும்பினால், இணைப்பிலிருந்து பிரிந்து தனி நாடாகலாம்; ஆனால், சோவியத் ஒன்றியத்தில் பிரிவினைக்கு இடமில்லை. பின்னாளில், குருஷேவ் சட்டங்களைத் தளர்த்தியதால் சோவியத் நாடு சிதறுண்டது. இணைந்தால் பிரியலாம்; ஒன்றினால் பிரிய முடியாது என்பது நுட்பமான வேறுபாடு; ஆகவேதான் ஒன்றியம் என்ற சொல்லை அரசமைப்பு போற்றிக்கொண்டது.

முதலில் உருவாக்கப்பட்ட அரசமைப்பில் 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 இணைப்புப் பட்டியல்கள் இருந்தன. அரசமைப்பை உருவாக்கியவர்கள் மிக்க விழிப்புடன் மத்திய (central), மத்திய அரசு (central government) என்ற சொற்களைத் தவிர்த்தனர்; ஒன்றியம் (union), ஒன்றிய அரசு (union government) அல்லது இந்திய அரசு (Government of India) என்று குறிப்பிட்டனர்; அரசமைப்பில் ‘ஒன்றியம்’ என்ற சொல் 430 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கலப்புப் பண்பாடுகளும் பல மொழிகளையும் கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் உயர் பண்பாட்டையும், நாட்டு ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணியொழுக வேண்டும், அதுவே கடமை எனவும் அரசமைப்பு விதித்திருக்கிறது. ஆனால் நீதிமன்றங்கள், ஊடகங்கள் போன்றவை ‘மத்திய அரசு’, ‘மத்திய’ என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றன.

அதற்குக் காரணம், 1891-ல் ஆங்கிலேயர் இயற்றிய பொது வகைமுறைகள் சட்டம் - ‘எல்லா நடைமுறை நோக்கங்களுக்காகவும் மத்திய அரசு என்பது தலைவர் ஆவார்’ என வரையறுக்கிறது; அப்போதைய தலைவர் இங்கிலாந்து மன்னரின் சார்பாற்றுநராகச் செயல்பட்ட வைசிராய் ஆவார். 1946-ல் இடைக்கால அரசின் தலைவராகிய ஜவாஹர்லால் நேரு, (நிகழ்வு நிலையில் தலைமை அமைச்சராக இருந்தாலும்) துணைத் தலைவர் என அழைக்கப்பெற்றார். நேரு 13 டிசம்பர் 1946 அன்று, இந்தியா தன்னுரிமை இறையாண்மைக் குடியரசாகும் விருப்பத்துடன் ஆட்சிப் பரப்புகளின் ஒன்றியமாக இருக்க வேண்டும் என்பதே பேரவையின் நோக்கம், அதற்கு அரசமைப்பு தேவை என்று வலியுறுத்தினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவான சொல்லமைப்புகள், 1947-ல் நாம் விடுதலை பெற்று அரசமைப்பை உருவாக்கி, 26 நவம்பர் 1949 அன்று நமக்கு நாமே வழங்கிக்கொண்ட அரசமைப்பை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது.

‘ஒன்றிய அரசு’ என்றால் ‘வந்துசேர்ந்த அரசு’ எனப் பொருள்படும்; ஒன்றியத்துடன் அத்துச் சாரியை சேர்த்து, ஒன்றியத்து அரசு எனும்போதுதான் அதற்குரிய பொருள்நலம் சிறக்கின்றது. 1988-ல் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையம் வெளியிட்ட அதிகார உரிமைத் தமிழாக்கத்தில் ‘ஒன்றியத்து அரசு’ என்றே உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் என்பதிலும் சட்டம் என்ற சொல்லைத் தவிர்க்கலாம். இந்திய அரசமைப்பு உயர்தனிச் சிறப்பு மிக்கது; சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களிலிருந்து தனி வேறானது; அது ஓர் உரிமைப் பேராவணம். அதில் 71 ஆண்டுகளாக அறிதுயில் கொண்டிருந்த ஒன்றியம் இப்போது உயிர்த்தெழுந்து உலாவருகிறது.

- கு.சிவமணி, தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றியபோது, அரசமைப்பின் அதிகாரபூர்வ தமிழாக்கத்துக்குப் பங்களித்தவர்.

நன்றி - இந்து தமிழ் திசை

banner

Related Stories

Related Stories