உணர்வோசை

‘முஸ்லிம்களுக்கு வீடு இல்லை’ : இஸ்லாமிய வெறுப்பைத் தின்னும் சமூகம் எனும் மலைப்பாம்பு - தாமிரா நினைவலைகள்!

ரெட்டை சுழி, ஆண் தேவதை போன்ற படங்களை இயக்கிய தாமிரா கொரோனாவால் உயிரிழந்தை நிலையில் இஸ்லாமியர்கள் வெறுப்பு குறித்த எழுதிய அவரது பதிவின் நினைவலைகள்.

‘முஸ்லிம்களுக்கு வீடு இல்லை’ : இஸ்லாமிய வெறுப்பைத் தின்னும் சமூகம் எனும் மலைப்பாம்பு - தாமிரா நினைவலைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமூகம் என்னும் மலைப் பாம்பு

சென்னையில் இன்னமும் வாடகைக் குடியிருப்புதான். என்றபோதும் நான் வாடகை வீடு தேடி அதிகம் அலைந்ததில்லை…காரணம் கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடியிருந்துவிட்டோம். சில வசதிக்குறைவுகள் இருந்த போதும் வீட்டின் உரிமையாளர் மற்றும் சுற்றத்து மனிதர்களின் அன்பு எங்களை இடம்பெயர அனுமதிக்கவில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் இடநெருக்கடிக்காக, இன்னும் சற்று பெரிய வீடாக பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் கடந்த ஒரு மாதகாலமாக வாடகை வீடு தேடி அலைகிறோம்.

இன்று எம்எம்டிஏ காலனியில் ஒரு வீட்டிற்குப் போயிருந்தோம். வாசலில் டூ லெட் போர்ட் மாட்டப்பட்டிருந்தது. நல்ல மரங்கள் அடர்ந்த இடத்தில் அந்த வீடு அமைந்திருந்தது. வெளித்தோற்றமே நன்றாக இருந்ததால்,.. மனைவியை இறங்கி விசாரிக்கச் சொன்னேன்..

மாடி பால்கனியில் வீட்டின் உரிமையாளப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். என் மனைவி ”வீடு வாடகைக்குக் கிடைக்குமா?’ என்று கேட்டதும்.. சிரித்தபடியே ”முஸ்லீம்ஸுக்கெல்லாம் வாடகைக்கு விடறதில்லைங்க” என்றார்.. என் மனைவி பதிலுக்கு ”தேங்க்ஸ்” என்றபடி வந்துவிட, அந்தப் பெண்மணி போனில் யாரிடமோ சிரித்துப் பேசியபடி தன்னியல்பில் பால்கனியில் நடந்து கொண்டிருந்தார்..

அவரது முகத்தில், ஒரு பர்தா அணிந்து வந்த பெண்ணுக்கு….,தான் இதைவிட நல்ல பதிலை சொல்லிவிட முடியாது என்பது போல, ஒரு பாவனை இருந்தது.நெடுங்காலமாக.. இப்படி ஒரு பதிலை தொடர்ச்சியாக சொல்லி வந்தவர் போல மிக நிதானமாகவும், கண்ணியமாகவும்,, புன்னகையுடனும் அந்த சொல்லை உதிர்த்திருந்தார்..

தூரத்து மரத்தடியில் நின்றபடி அந்த அம்மாவையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.. நான் கோபித்துக் கொண்டு சண்டைக்குப் போய்விடுவேனோ என்கிற அச்சம் என் மனைவியிடமிருந்தது. ’வாங்க மச்சான் போகலாம்’ என்றாள்.நான் மிகக்கனிவான பார்வையோடு, அந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். .அந்த அம்மா நிச்சயமாக அசைவ உணவாளிக்கு வீடில்லை என்று சொல்பவர் இல்லையெனத் தோன்றியது..

நடுவகிடெடுத்து உச்சியில் குங்குமம் வைத்திருந்த விதத்தில்… அவர் என்னுள்ளிருந்த எத்தனையோ அம்மாக்களின் சாயல்களைக் கொண்டிருந்தார்.. எனக்குள் இருந்த கேள்வியெல்லாம் எப்படி இந்த அம்மாவைத் தொலைத்தேன் என்பதுதான்...

கோவில் கொடை வீதிகளில் ’என்ன மருமவனே நல்லா இருக்கியளா? மயினிய கேட்டதாச் சொல்லுங்க’.. என விசாரிச்ச ஏதோ ஒரு மாமியின் சாயல், ’என்ன சின்னய்யா ஒரு வாய் காஃப்பித்தண்ணி குடிச்சிட்டுப் போ’ எனக் சொன்ன ஏதோ ஒரு சித்தியின் சாயல்.. ’என்ன கொளுந்தப்புள்ள வந்தியளா’ எனக் கேட்கும் ஏதோ ஒரு மதினியின் சாயல்.. ’தம்பி மாமன் தெனம் குடிச்சிட்டு வாராவள என்னன்னு கேக்கப்படாதா?’ எனக் கேட்கும் ஏதோ ஒரு அக்காவின் சாயல்,’யோவ் தாத்தா என்ன அமட்டிக்கிட்டு நிக்கீரு’ என மிரட்டிய.., ஏதோ ஒரு பேத்தியின் சாயலைக் கொண்டவளாக இருந்தார்.அந்த அம்மா… இவர்கள் எல்லோரது கைகளையும் என்உள்ளங்கைக்குள் வைத்துத்தான் உறவு கொண்டாடிக் கொண்டிருந்தேன்..எப்போது பிடி நழுவியது…யார் விலக்கி விட்டார்…

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது நான் நண்பன் வி.கே சுந்தர் வீட்டில் தங்கி இருந்தேன்.. ஓராண்டு காலமாக அந்த வீட்டின் உரிமையாளருக்கும் எங்களுக்கும் நல்ல நட்பும் உறவும் இருந்தது.. சுந்தரும், சந்திராவும்..என்மேல் அத்தனை அன்பாக இருந்தார்கள்.. நாங்கள் ஒரு குடும்பமாக இருந்து கொண்டிருந்த போது.. ஒரு பத்து நாள் பயணமாக என் மனைவி பஷிரியா வந்தாள்.. அப்போது அவள் புர்கா அணிபவளாகக் கூட இல்லை..

தலையில் ஒரு ஸ்கார்ப் கட்டி இருந்தாள்..அவளது இஸ்லாமியத் தோற்றத்தைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் சண்டையிட்டு.. ஒன்று அவர்களை வெளியேற்றுங்கள்.. அல்லது வீட்டைக் காலி பண்ணுங்கள் என்று சொன்னார்.. சுந்தர், உங்களுக்காக நண்பனை விட்டுக் கொடுக்க முடியாது என வீட்டை ஒரு நாளில் மாற்றினான்.. ஓராண்டு நட்பை ஒரு நாளில் முறிக்கும் அளவிற்கு அந்த வீட்டின் உரிமையாளர் மூளைக்குள் ஏதோ திணிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அன்று ஊடகத்தில் பணி செய்து கொண்டிருந்தோம் நாங்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே போல ஒரு சம்பவம்.. இந்த சமூகமெனும் மலைப்பாம்பு இருபத்தைந்து ஆண்டுகளாக இஸ்லாமிய வெறுப்பெனும் இரையைத் தின்றுவிட்டு.. அசைய இயலாமல் படுத்துக் கிடக்கிறது. அச்சுறுத்தலோ, அறிவின்மையோ நாம் பிணைத்திருந்த கைகளை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டு வருகிறோம். மீண்டும் மீண்டும் நம்மில் யாரோ அதற்கு இரை போட்டபடியே இருக்கிறோம்…

ஏதோ ஒரு வீடு கிடைத்துவிடும்.. எப்படியோ வாழ்க்கை நகர்ந்துவிடும்… ஆயினும் நம்மிடையே நெளிந்து கொண்டிருக்கும் அந்த மலைப்பாம்பின் மீதான அச்சம்.. இருவருக்கும் தீரப் போவதில்லை..!

- இயக்குநர் தாமிரா

banner

Related Stories

Related Stories