உணர்வோசை

“தாடி வளர்த்த நேரத்தில் கொஞ்சம் மக்களையும் கவனித்திருக்கலாமே மோடி” : பிணக்குவியல்களுக்கு இடையே ஓர் ஓலம்!

மோடி கட்டமைத்திருக்கும் இந்தியாவின் லட்சணம் இதுதான்!

“தாடி வளர்த்த நேரத்தில் கொஞ்சம் மக்களையும் கவனித்திருக்கலாமே மோடி” : பிணக்குவியல்களுக்கு இடையே ஓர் ஓலம்!
test
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

‘என் தாயை யாராவது பார்த்துக்கோங்க’ என உள்ளே நுழைய முடியாமல் கதறும் ஒரு மகன். விக்கலை போல் மூச்சுக்காக ஏங்கித் திணறி சரியும் கணவனை கண்டு கதறி எழும் மனைவி, ‘அப்பாவை யாராவது பாருங்க...’ என கதறும் மகனை கேட்டு ஆம்புலன்ஸ்ஸுக்குள் சென்று பார்க்கும் ஒருவர், ‘கெட்ட சேதி’ என சொல்லி இறங்குகிறார், அசையாமல் கிடக்கும் மகனை பார்த்து கோபத்துடன், ‘எழுந்திரிடா, எழுந்திரிடா’ என திட்டிக் கொண்டிருக்கும் தாய்! மோடி கட்டமைத்திருக்கும் இந்தியாவின் லட்சணம் இதுதான்!

கோவிட் பரவலின் முதல் அலை கடந்த வருடம் நேர்ந்தது. உலகமே விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்த சமயம் மோடி மட்டும் விமானம் வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து அகமதாபாத்தில் பெரிய கூட்டம் நடத்தி குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தையும் ஒடுக்கிக் கொண்டிருந்தார். பிறகொரு நன்னாளில் ‘அனைவரும் கரகோஷம்’ எழுப்புங்கள் என தொலைக்காட்சியில் தோன்றி பொறுப்பில்லாமல் அறிவிக்க, ஊருக்குள் கூட்டம் கூட்டமாக பாத்திரம் தட்டும் சம்பவங்களும் நடந்தேறின. பிறகொரு நன்னாளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சில மணி நேரங்களே இடைவெளி இருக்கும் நிலையில் பொது முடக்கம் அறிவித்தார். வெவ்வேறு ஊர்களிலும் மாநிலங்களிலும் சென்று வேலை பார்க்கும் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பேருந்து நிலையங்களில் குவிந்தனர். கோவிட்டுக்கான குவிமையங்கள் வெற்றிகரமாக உருவாகின.

மக்களின் வாழ்வாதாரத்துக்கான எந்தவித பொருளாதார கவசமும் அறிவிக்கப்படவில்லை. நிதி அமைச்சர் மட்டும் திடுமென ஒருநாள் ஞாபகம் வந்து திரையில் தோன்றி ஏற்கனவே வழக்கில் இருக்கும் நலத்திட்டங்களை புதிதாக அறிவிப்பது போல் அறிவித்தார். மோடியும் தாடி வளர்க்கையில் கிடைத்த இடைவெளிகளில் அவ்வப்போது தோன்றி விளக்கு ஏற்றவும் மீண்டும் கைதட்டவும் விமானங்களில் மருத்துவமனைகள் மீது பூக்கள் கொட்டவுமென கார்ப்பரெட் நிறுவன HR போல புதுப்புது டாஸ்க்குகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

இவற்றுக்கு இடையே இந்தியாவை இந்தியாவாக கட்டமைத்த பெரும் தொழிலாளர் கூட்டம் தங்களின் ஊர்களுக்குத் திரும்ப முடிவெடுத்தது. மொத்த நாட்டிலும் முடங்கிப் போய் வெறித்துப்போன சாலைகளில் குறுக்கும் மறுக்குமாக நடக்கத் தொடங்கியது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதால் அவர்களுக்கு வேலை தந்த முதலாளிகளுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் கொடுக்கவும் அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. அவர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் அக்கறையும் மோடியின் அரசுக்கு இருக்கவில்லை. உணவுமின்றி வேலையுமின்றி என்ன செய்வதென தெரியாமல் ஊர்களுக்கு திரும்ப அவர்கள் முடிவெடுத்தபோது பேருந்துகள் இல்லை. ரயில்கள் இல்லை. நடக்கத் தொடங்கினர்.

“தாடி வளர்த்த நேரத்தில் கொஞ்சம் மக்களையும் கவனித்திருக்கலாமே மோடி” : பிணக்குவியல்களுக்கு இடையே ஓர் ஓலம்!
ThePrint

ஜம்லோ என்கிற 12 வயது பெண் தெலங்கானாவிலிருந்து சொந்த ஊரான சட்டீஸ்கரின் பிஜாப்பூருக்கு 150 கிலோமீட்டர் பயணத்தை தொடங்கி ஊருக்கு ஐம்பது கிலோமீட்டர் இருக்கும்போது சாலையில் விழுந்து இறந்தாள். மத்திய பிரதேசத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், ‘பொது முடக்கம் என்கிறார்களே.. ரயிலும் முடக்கப்பட்டுதானே இருக்கும்’ என நினைத்து ரயில் பாதையில் இளைப்பாறினார்கள். ஆனால் மோடி இந்தியாவில் மக்களுக்குதான் முடக்கம், முதலாளிகளுக்கு அல்ல என்பதை அவர்கள் தெரிந்திருக்கவில்லை. சரக்கு ரயில் ஓடி வந்து அவர்கள் மீது ஏறி அரசின் உண்மையான அக்கறை யாரின் மீது என்பதை புரிய வைத்து ஓடியது. 16 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாயினர். இன்னொரு பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டத்தை அரசதிகாரிகள் பிடித்து உட்கார வைத்து கிருமிநாசினியை பீய்ச்சி அடித்தனர்.

உத்தர பிரதேச யோகி அரசுக்கு வேறொரு முக்கியமான கவலை இருந்தது. முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் லாபத்தை எப்படி மீட்டுக் கொடுப்பது என்கிற கவலை. இனி வரும் வருடத்தில் எல்லா நிறுவனங்களும் 12 மணி நேரங்களுக்கு மேல் தொழிலாளர்களை வேலை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது. தொழிலாளர் உரிமை சட்டங்கள் பலவற்றை ரத்து செய்தது. அதிக நேரம் வேலை பார்த்தாலும் ‘ஓவர் டைம்’ ஊதியம் கிடைக்காது என்கிற நிலை. மத்திய அரசும் நிறுவனங்களிடம் செல்லக் கோபத்துடன், ‘தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டாம், பாவம் அவர்கள்’ என யோசனை கூறியது. உடனே பல நிறுவனங்களில் சம்பளம் வெட்டியெறியப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன் வாங்கிய சம்பளங்களுக்கு சரேலென தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் பணியாளர்களின் வேலைகளை பிடுங்கி தூக்கி எறிந்தது.

மோடி மயிலுக்கு உணவு போடும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

உலக நாடுகள் கோவிட் பரவலை குறைப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரத்தில் இருந்தன. ‘என் புருஷனும் கல்யாணத்துக்கு போனான்’ என மோடியும் தடுப்பூசி ஆராய்ச்சியை அறிவித்தார். இந்திய சுதந்திர தினத்தன்று தடுப்பூசி வந்துவிட வேண்டிய வகையில் வேலை பார்க்க ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வாளர்களோ ‘ஆஸ்ட்ரிச் பார்த்திருக்கீங்களா ஆஸ்ட்ரிச்’ என மோடியை கேட்டதும் வேறு வழியின்றி அந்த திட்டத்தை மக்களுக்காக தியாகம் செய்துவிட்டு தாடியில் கவனம் செலுத்தினார் மோடி. மோடிக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என ஒருநாள் நிர்மலா சீதாராமன் தோன்றி ‘கூறு பத்து ரூபாய்’ என பொதுத்துறை நிறுவனங்களை விற்றார்.

இதற்கு மேலும் இவர்களுக்கு அறிவு வரப் போவதில்லை என வெறுத்துப் போய் கோவிட்டே சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டது. ‘ஹைய்யா ஜாலி’ என அம்பானிக்கு விவசாயி வேடம் கட்டுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் மோடி. விவசாயிகள் அதை எதிர்த்து தங்களுக்கான துயரத்தை கேட்கச் சொல்லி தில்லி எல்லைகளுக்கு சென்றனர். மோடி கேட்கவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் அமித்ஷா அசைந்து கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிராக காவலர்கள் களமிறக்கப்பட்டனர். விவசாயிகள் வரும் வழியில் ஆணிகளை அறையச் சொன்னார் மோடி. பள்ளம் தோண்டி விவசாயிகளை அதற்குள் ‘தொபுக்கடீர்’ என விழ வைத்து இந்தியாவின் விவசாயப் பிரச்சினையை தீர்த்து வைக்க முயன்றார்.

“தாடி வளர்த்த நேரத்தில் கொஞ்சம் மக்களையும் கவனித்திருக்கலாமே மோடி” : பிணக்குவியல்களுக்கு இடையே ஓர் ஓலம்!

அடுத்தகட்டமாக ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மோடிக்கான டெலிப்ராம்ப்டரே கதறியழும் வகையில் பொய்கள் எழுதிக் கொடுக்கப்பட்டன. ஐந்து மாநில தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தாமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய விசுவாசத்தை காட்டியது. கோவிட் இரண்டாம் அலையை பற்றி உலக நாடுகள் எச்சரித்துக் கொண்டிருந்த வேளையிலும் மேற்கு வங்கத்துக்கு எட்டு கட்ட தேர்தலை அறிவித்து நல்ல பெயரை வாங்கிக் கொண்டது தேர்தல் ஆணையம். பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. இவற்றுக்கு நடுவே கடவுளை நாம் மறந்துவிடக் கூடாது என 31 லட்சம் பேர் கும்பமேளாவில் அரசின் உதவியுடன் கூட்டப்பட்டனர்.

தமிழகமும் கேரளாவும் புதுச்சேரியும் ஒரே கட்டத்தில் தேர்தலை எதிர்கொண்டு முடித்த நேரத்தில் கோவிட் இரண்டாம் அலை தலைவிரித்தாடத் தொடங்கியது. மோடி எந்த கவலையுமின்றி மேற்கு வங்கத்தில் கூட்டம் கூட்டமாக மக்களைக் கூட்டி பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

கோவிட் தடுப்பூசிகளை உலகம் அறிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மட்டும் இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மொத்த தடுப்பூசி தயாரிப்பையும் ஒதுக்கியது. மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யாமலேயே தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. 70% விகித செயல்திறன் கொண்ட தடுப்பூசியின் மிச்ச 30% சதவிகிதத்துக்கு அரச பாதுகாப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. தடுப்பூசி கொடுக்கும் பக்கவிளைவு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. பக்கவிளைவுகளுக்கான மருத்துவச் செலவுக்கும் அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய சூழலில்தான் இன்று நாம் காணும் எல்லா காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தன. தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் கிடைக்கவில்லை. என்ன செய்வதெனவும் மக்களுக்கு தெரியவில்லை. கோவிட் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. கோவிட் மரணங்களுக்கான இறுதிச் சடங்குகளுக்கு இடமில்லை. படுக்கை, தடுப்பூசி, ஆக்சிஜன், சுடுகாடு என எதற்கும் பதிலின்றி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில்தான் மோடி மீண்டும் ஊடகங்களிடம் அல்ல, தொலைக்காட்சியில் தோன்றினார்.

நீளமாக தாடி வளர்த்திருந்தார். தலையின் பின்பக்கத்தில் முடி பிறைநிலா போல் தோற்றமளிக்கும் வகையில் அற்புதமாக வாரியிருந்தார். கோவிட்டை எதிர்த்து இரண்டாம் போர் நடப்பதாக அறிவித்தார். அப்போரில் இந்தியாவின் உச்ச அதிகாரம் படைத்த பிரதமர் எதிரியான கோவிட்டை எப்படி கையாளப் போகிறாரென எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக மக்களுக்கு துணையாக ஓர் ஓரத்தில் நிற்பதாக உறுதியளித்தார். நம்புங்கள், இவரே இந்திய நாட்டுக்கு பிரதமர்.

“தாடி வளர்த்த நேரத்தில் கொஞ்சம் மக்களையும் கவனித்திருக்கலாமே மோடி” : பிணக்குவியல்களுக்கு இடையே ஓர் ஓலம்!

அற்புதமான நிர்வாக மாடல் என கொண்டாடப்பட்ட குஜராத்தில் கோவிட் பாதிப்பு கொண்டோருக்கு சிகிச்சை படுக்கைகள் கிடைக்காத நிலை. ஒரே படுக்கையில் மூவர் படுத்து சிகிச்சை பெற வேண்டிய கோரம். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக மாநில அரசுகள் ஆக்சிஜன் கேட்டு நீதிமன்ற படி ஏறியிருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்காக தொடர்பு கொள்ளப்படுகையில் பிரதமர் பதிலளிக்கவில்லை என்கின்றன. பிச்சை எடுத்தாவது, கொள்ளை அடித்தாவது ஆக்சிஜனை மக்களுக்கு கொடுக்க சொன்னது நீதிமன்றம். அடடே.. நீதிமன்றமே கொள்ளை அடிக்க அனுமதி கொடுத்துவிட்டதே என ஆனந்தத்தில் திளைத்தார் பிரதமர்.

அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ‘மக்கள் நலனா... என்ன ஆச்சரியம்’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அறிவிப்பு வெளியாகிறது. தடுப்பூசிகள் இனி தனியார் சந்தையிலும் கிடைக்கும் என்றும் அவற்றை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றது அறிவிப்பு. ‘நீட்’ முதலிய நுழைவு தேர்வுகளை நடத்தி ‘சுகாதாரம்’ மத்திய அரசுக்குதான் என அடம்பிடித்து நம் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்த மோடி தற்போது தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ளட்டும் என கைவிரித்திருக்கிறார்.

இவற்றுக்கு பிறகு ஒரு முக்கியமான விஷயமும் வெளியானது. கோவிஷீல்ட் என்கிற தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் அதிபரான அதார் பூனாவாலா, ‘அரசுகளுக்கு 400 ரூபாய்யும் தனியாருக்கு 600 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்படும் என்றார். இதற்கு முன் தனியாரில் தடுப்பூசி இல்லை. அரசுக்கு விற்கப்பட்ட தடுப்பூசியும் 150 ரூபாய் கட்டணத்தில்தான் விற்கப்பட்டது. ‘பற்றியெரியும் வீட்டில் ஏன் இந்த கொள்ளையடிக்கும் வேலை’ என நாம் கதறுவதற்கு அதார் பூனாவாலா சொல்லும் பதில் இதுதான்:

“முதலில் தடுப்பூசி எந்தளவுக்கு வேலை பார்க்கும் என்பது எங்களுக்கு தெரியாது. எனவேதான் 150 ரூபாய்க்கு கொடுத்தோம். தற்போது அது பலனளிப்பது தெரிவதால் நாங்கள் விலை ஏற்றுகிறோம். எங்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம்”. சீரம் நிறுவனத்துக்கு தயாரிப்பு அனுமதியை கொடுத்தது மத்திய அரசுதான். அதுவும் ஜனவரி மாதத்திலேயே அதார் பூனாவாலா கொடுத்த ஒரு பேட்டியில், “பத்து கோடி டோஸ்களுக்கு மட்டும்தான் நாங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதற்குப் பிறகு தனியாரில் 1,000 ரூபாய் வரை விலை வைத்து விற்கவிருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.

“தாடி வளர்த்த நேரத்தில் கொஞ்சம் மக்களையும் கவனித்திருக்கலாமே மோடி” : பிணக்குவியல்களுக்கு இடையே ஓர் ஓலம்!

அதாவது 130 கோடி பேர் வாழும் நாட்டில், இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டிய தடுப்பூசியில் 10 கோடி டோஸ்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்றால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படும் என்பது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும். அந்த ஒப்பந்தத்துக்கு பிறகும் புதிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவென வேறெந்த நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அரசு உற்பத்தி நிறுவனங்களே பல இருக்கும்போதும் அவை எதுவும் அரசால் சீண்டப்படக்கூட இல்லை. பதிலாக ‘போட்டோஷூட்’, ‘டெலிப்ராம்ப்டர் ரீடிங்’, ‘டாஸ்க் கேம்’, ‘சாலையில் ஆணி அடித்தல்’ முதலிய அத்தியாவசிய வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார் மோடி.

சரியாகச் சொல்வதெனில் இரண்டு நிறுவனங்கள் லாபத்தில் கொழிப்பதற்காக வேண்டுமென்றே தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, தனியாரில் மருந்துகளை இறக்கி, மக்களை சாகக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்கு உயிர் கொடுத்திருப்பவர் பிரதமர் மோடி. இவர்தான் இப்போதும் மேற்கு வங்கத்தில் சென்று ‘எத்தகைய ஆட்சியை நாங்கள் தருவோம் தெரியுமா’ என 56 இஞ்ச் மார்பை விரித்து பஞ்ச் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். கொத்துக்கொத்தாக மக்கள் செத்துவிழும் ஒரு பேரிடரை வணிகமாக்கும் அரசைப் பார்த்திருக்கிறீர்களா?

பார்த்துக் கொள்ளுங்கள்!

Related Stories

Related Stories