உணர்வோசை

"அ.தி.மு.க என்ற அவமானத்தை துடைத்தெறிவதே இந்தத் தேர்தல்” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-16

'அ.தி.மு.கவுக்கு வாக்களிப்பது அவமானம் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அ.தி.மு.க என்ற அவமானத்தை துடைப்பதே இந்தத் தேர்தல்!

"அ.தி.மு.க என்ற அவமானத்தை துடைத்தெறிவதே இந்தத் தேர்தல்” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-16
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!

அ.தி.மு.கவை நிராகரிப்போம்! - என்பதற்குள் எல்லாமே அடங்கி இருக்கிறது! அ.தி.மு.க நிராகரிக்கப் பட வேண்டிய கட்சி. நிராகரிக்கப்பட வேண்டிய ஆட்சி! அ.தி.மு.க ஆட்சி இருக்கவேண்டும் என்பதற்கான ஒற்றைக் காரணத்தைக் கூட பழனிசாமியால் சொல்ல முடியவில்லை. சொல்லவும் முடியாது!தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்! சொந்தப் புத்தி இல்லாதவர்! கனவுகள் இல்லாதவர்! மக்கள் மீது அக்கறையும் இல்லாதவர்! - அப்படிப்பட்ட மனிதர்களால் நல்லாட்சியைத் தரவும் முடியாது. தருவதற்கான தார்மீக காரணமும் அவர்களுக்குத் தோன்றாது. அப்படிப்பட்ட மனிதர் தான் பழனிசாமி!

அவர் இந்த முதலமைச்சர் பதவியை அடைவதற்குக் காரணம் பணம். சசிகலா குடும்பத்துக்கு மொத்தமாக வசூல் செய்து தருவதின் மூலமாக அவர்களது நம்பிக்கையைப் பெற்றவர் பழனிசாமி. பன்னீர்செல்வத்தை விட பழனிசாமி நம்பிக்கையாக இருப்பார் என்று அந்தக் குடும்பம் நம்பியது. அதனால் கவனம் பெற்றவர் பழனிசாமி. கேட்ட பணத்தை விட கூடுதலாக வசூலித்து, கேட்ட பணத்தை மட்டும் கொடுத்ததன் மூலமாக 'யோக்கியர்' என்று பெயர் எடுத்தவர் பழனிசாமி. அந்த ஒரே காரணத்துக்காக முதலமைச்சர் ஆக்கப்பட்டவர். இதைத் தவிர வேறு காரணம் உண்டு, என்று எவரால் சொல்ல முடியும்? எவராலும் சொல்ல முடியாது! பழனிசாமியாலும் முடியாது!

இப்படி ஒருவர் கையில் நான்காண்டு காலம் முதலமைச்சர் நாற்காலி இருந்ததே தமிழ்நாட்டுக்கு அவமானம். நாடு நாசம் ஆனது தான் மிச்சம். 2011 ஆம் ஆண்டில் இருந்து அதிமுக ஆட்சியில் இருக்கிறது. தன் மீதான வழக்கில் இருந்து விடுபடுவதிலேயே முதல் ஐந்தாண்டு காலத்தில் அக்கறையில் இருந்தார் ஜெயலலிதா. அடுத்த ஓராண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டார். இறந்தார். ஆறு ஆண்டுகள் இப்படித்தான் போனது!நான்கு மாத காலத்தில் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டையும் நாட்டு மக்களையும் நாசமாக்கினார் பழனிசாமி. இப்படித்தான் மொத்தப் பத்தாண்டு காலமும் பறி போனது. பாதாளம் போனது! அ.தி.மு.கவை நிராகரிக்க வேண்டும் என்ற முழக்கம் இந்த இடத்தில் இருந்துதான் முளைக்கிறது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது தான் அ.தி.மு.க!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி தவிர அனைத்திலும் மக்களால் நிராகரிக்கப்பட்டது தான் அ.தி.மு.க! உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டதுதான் அ.தி.மு.க! நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் நடத்தினால் அதிமுக முழுமையாகத் தோற்கும் என்று தெரிந்ததால் தான் அவர்கள் தேர்தலையே நடத்தவில்லை! நடந்த இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி தான் அ.தி.மு.க! இவை அனைத்தும் மொத்தமாக நடக்கப் போகும் தேர்தல் தான் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்!

* மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததை விட எடப்பாடியின் விவசாய துரோகத்துக்கு வேறு உதாரணம் தேவையில்லை!

* வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தமிழகத்தில் தான் அதிகம்!

* சாதாரண குடிநீர் பிரச்னையைக் கூட முழுமையாகத் தீர்க்கவில்லை!

* சாத்தான்குளம் காவல் நிலையமும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் இவர்களது சட்டம் ஒழுங்குக்கு சாட்சியங்கள்!

* கடனுக்கு மேல் கடன் வாங்கி, வாங்கிய பணத்தை பில் போட்டு கொள்ளையடிக்கும் ஆட்சி இது! எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசிடம் அனுமதி வாங்கி வைத்துள்ளார்களாம்!

* நீட் முதல் அனைத்து கல்விக் கனவையும் சிதைத்துவிட்டார்கள்!

* ஒரே ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு, இலட்சக்கணக்கானவர்களுக்கு கொரோனாவை பரப்பிய கொடூர ஆட்சி இது!

* அதிகப்படியான பாலியல் வன்கொடுமைகள், குழந்தை வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது!

* சமூகநீதியே உன் விலை என்ன என்று கேட்கும் ஆட்சி இது!

* எந்த ஆளுமைத் திறனும் இல்லாதவர் முதலமைச்சராக இருக்கிறார்!

* தமிழ்நாடு இதுவரை காப்பாற்றி வந்த அனைத்துப் பெருமைகளையும் காவு கொடுத்துவிட்டார்கள்!

குப்பையிலும் காசு பார்க்கும் குப்பை அரசு இது! அவர்களது தரம் இதில் இருந்தே தெரிகிறது!

'இந்த இடத்தில் குப்பை கொட்டாதீர்கள்! கொட்டினால் அபராதம் வசூலிக்கப்படும்" என்று சில இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும். ஆனால் எடப்பாடி அரசாங்கம், குப்பையை மாநகராட்சியிடம் கொடுத்தாலே அபராதம் போடுவது மாதிரி வரி போட்டுள்ளது. இதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது.

தி.மு.க எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருந்தால் வெட்கமில்லாமல் வசூலைத் தொடங்கி இருப்பார்கள். குப்பையை பொது இடத்தில் கொட்டினால் அபராதம், அதை தரம் பிரித்து கொடுக்காவிட்டால் அபராதம், குப்பையை எரித்தால் அபராதம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் குப்பை அரசை எப்போது குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுகிறோமோ அப்போது தான் அனைத்துக்கும் விடிவு காலம்!

அதனால் தான் அ.தி.மு.கவை நிராகரித்தாக வேண்டும்.
'அ.தி.மு.கவுக்கு வாக்களிப்பது அவமானம் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அ.தி.மு.க என்ற அவமானத்தை துடைப்பதே இந்தத் தேர்தல்! அ.தி.மு.கவை நிராகரிப்போம்! தி.மு.கவை ஆட்சியில் அமர வைப்போம்!

- தொடரும்...

Related Stories

Related Stories