உணர்வோசை

கேள்விக்குறியாகும் OBC இட ஒதுக்கீடு... இன்னொரு முத்துலட்சுமி ரெட்டி இனி உருவாக முடியுமா?

தான் படிக்கப் போராடி ஒரு சமூகத்தின் கல்விக்கு வழிஅமைத்து, தனியொரு பெண்ணாக சட்டமன்றக் கதவுகளைப் பெண்களுக்குத் திறந்து வைத்து, பிணிகொண்ட சமூகத்தை மீட்கப் போராடினார் முத்துலட்சுமி ரெட்டி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்றைக்கு ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்போடு ஒப்பிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது தமிழகம். மகப்பேறு காலத்தில் தாய்சேய் இறப்பு விகிதத்தில் இந்திய சராசரியோடு ஒப்பிட முடியாத அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது தமிழகம். இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது தமிழகம். 2014-ல் உலக நாடுகளுக்கு முன்மாதிரி தமிழக சுகாதாரக் கட்டமைப்பு என்று அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். இவையெல்லாம் ஒருநாளில் நடந்த கதையல்ல. காலச்சக்கரத்தை சற்று பின் செலுத்துவோம். அதில் மறைக்க முடியாத பெண் ஒருவர் மிளிர்கிறார்.

அப்போது ஆண்டு 1926. மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண்மருத்துவரான அந்தப் பெண்ணிடம் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்குமாறு இந்திய மாதர் சங்கம் கேட்டுக்கொண்டது. தன்னுடைய 16 ஆண்டுகால நெடிய மருத்துவ சேவைக்கு இடைஞ்சலாக அரசியல் பணி இருக்கலாம், அண்மையில் இங்கிலாந்து வரை சென்று கற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தற்கால சிறப்பு மருத்துவத்தை அரசியலுக்காக விட்டுக்கொடுக்க நேரிடலாம், எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கு போதிய அளவிலான அனுபவம் பொதுவாழ்வில் இல்லை என்று கூறி அவர் தயக்கம் காட்டினார். ஆனால், மாதர் சங்கத்தின் அழுத்தத்தினாலும் பெண்கள் முன்னேற்றத்தில் அவர் கொண்ட தன்னிகரற்ற ஈடுபாட்டாலும் அந்தப் பெண் பதவி ஏற்றார். இன்றைக்கு அவர் இந்திய அரசியலின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், முதல் பெண் துணை சபாநாயகர். அவர் பெயர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை, பால்வினை நோய்களுக்கான சிறப்பு மருத்துவம், அதில் பெண் மருத்துவர்களுக்கான தேவை, பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவக் கண்காணிப்பு தேவை, குழந்தைத் திருமண தடைச்சட்டம், தேவதாசி ஒழிப்பு மசோதா, மகப்பேற்றில் பெண் மருத்துவர்களின் அவசியம், பெண் காவல்துறையினரின் முக்கியத்துவம், தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு, குழந்தை கடத்தல் தடை என அவர் தொட்டதெல்லாம் அதுவரை ஆண்கள் பேசக்கூடத் துணியாதவை.

“நீங்கள் நகைகளை, பட்டுப்புடவைகளை பெண்களுக்கு வாங்கிக்கொடுக்கலாம், கடற்கரைக்குச் செல்ல அவளுக்கு வாகனம் வாங்கித்தரலாம். ஆனால் பெண் சுதந்திரம் என்பது வேறு. ...பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான சொத்துரிமை, கல்வி உரிமை, பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் வரை எங்களால் ஆண்களுக்கு இணையாக தேர்தலில் பங்குகொள்ளமுடியாது” என்று சட்டமன்றத்தில் முழங்கி பெண்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் வேண்டினார்.

கேள்விக்குறியாகும் OBC இட ஒதுக்கீடு... இன்னொரு முத்துலட்சுமி ரெட்டி இனி உருவாக முடியுமா?

அவரின் உறுதியான தெளிவான வாதங்களால் தமிழகத்தில் பல மருத்துவ சாதனைகள் நடைபெற்றன. இதனால் சர்ச்சைகள் எழலாமல் இல்லை. “இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு மருத்துவமனைகள், மருத்துவர்கள் மருத்துவம் என்ற காரணத்திற்காக அதிகம் செலவு செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்களுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், எதுவரை மருத்துவத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறோமோ அதுவரை நம் செல்வம், வசதி, ஆற்றல் யாவற்றையும் இழந்து துன்பப்படுவோம்”. ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னாள் சட்டமன்றத்தில் ஒலித்த இந்தக் குரல், காலம் கடந்து இன்றைய கொரோனா காலத்திற்கும் பொருந்துகிறது.

சட்டமன்றத்தை விட்டு வெளியே இருந்த காலத்திலும், 1954-ல் அடையார் புற்றுநோய் மருத்துவமனையைத் துவக்கி புற்றுநோயினால் இறந்த தன் தங்கைக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார், சமூகத்திற்கு ஒரு வெளிச்சம் தந்தார். இன்றளவும் இலவசமாகவும், மிகக்குறைந்த மருத்துவ செலவிலும் செயல்படும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை ஆசியாவின் தலைசிறந்த புற்றுநோய் மருத்துவமனையாக வளர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

தான் படிக்கப் போராடி ஒரு சமூகத்தின் கல்விக்கு வழிஅமைத்து, தனியொரு பெண்ணாக சட்டமன்றக் கதவுகளைப் பெண்களுக்குத் திறந்து வைத்து, தன் வாழ்நாளில் தான் ஆரோக்கியமாக வாழ்ந்ததே அல்ல என்று தானே சொல்லுமளவுக்கு பாதிக்கப்பட்ட உடலோடும் பிணிகொண்ட சமூகத்தை மீட்கப் போராடினார் முத்துலட்சுமி ரெட்டி. ஆனால் இன்றைய களநிலவரத்தில், அனிதாக்கள் நம்மிடம் இல்லை. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மருத்துவ இடஒதுக்கீடு கேள்விக்குறியாகி நிற்கிறது. முத்துலட்சுமி பிறந்து 134 ஆண்டுகள் ஆகப்போகிறது இன்னும் 8 நாட்களில். அவர் இறந்து இன்றோடு 52 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இப்போது அவரிடம் இந்த சமூகத்தின் மனசாட்சி மன்னிப்பு கேட்கப்போகிறதா அல்லது நன்றி சொல்லப்போகிறதா என்று புரியாமல் விம்மி நிற்கிறோம்.

- கௌதமி

banner

Related Stories

Related Stories