உணர்வோசை

"திராவிடமே கொள்கை; பகுத்தறிவே உயிர்" நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு தினச் சிறப்புக் கட்டுரை!

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் - நடமாடும் பல்கலைக்கழகமாம் நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு தினம் இன்று.

"திராவிடமே கொள்கை; பகுத்தறிவே உயிர்" நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு தினச்  சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

''மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்க மறுப்பவன் அவனுக்கு, தானே துரோகியாகிறான். சிந்திக்க அஞ்சுபவன் மூடநம்பிக்கையின் அடிமையாகிறான்'' என்ற சிந்தனைக்கு சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன்.

நாகை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருக்கண்ணபுரத்தில் 1920 ஆம் ஆண்டு பிறந்தவர் நாவலர் நெடுஞ்செழியன், பட்டுக்கோட்டையில் பள்ளிக்கல்வியையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தவர்.

பெரியாரின் பேச்சு சமூக இழுக்குகளை களையும் கருவி என்பதை நாவலர் கண்டுகொண்டார். அதன் காரணமாகவே சுயமரியாதை இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுயமரியாதை இயக்கத் தலைவர்களைத் தம்முடைய ஊருக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார். கூட்டங்களில் தானும் பேசத் தொடங்கிய நாவலரின் நாவண்மையை பிறர் வியந்து பாராட்டினர். மாணவர் பட்டாளம் நாவலரைக் கொண்டாடத் தொடங்கி, அவரை வெளியூர்க் கூட்டங்களுக்குப் பேச அழைத்தது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் நேரடி அறிமுகத்திற்குப் பிறகு நாவலர் உலகிற்கு அறிமுகமானார்.

பேச்சாளராக இருந்த நெடுஞ்செழியன் நேரடியாகப் போராட்டக்களத்தில் இறங்கியது 1938ல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போதுதான். அதன்பிறகு தந்தை பெரியாரோடும், அறிஞர் அண்ணாவோடும் நெருக்கமாகப் பழகி, அவர்களுடைய அன்பைக் கவர்ந்தார்.

நாவலர் நெடுஞ்செழியனின் மொழியறிவு, பேச்சாற்றல், கல்விநலன் ஆகிய குணங்கள் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டன. 1944ல் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற தந்தை பெரியார் முடிவெடுத்தபோது அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா. அதனை வழிமொழிந்தவர் நாவலர் நெடுஞ்செழியன்.

நூல் பல கற்ற நாவலர் நெடுஞ்செழியன் மன்றம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தினார். அவரே அதன் ஆசிரியர். திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலர் பகுத்தறிவுக் கருத்துக்களை மன்றம் இதழில் எழுதிக் குவித்தனர். மன்றம் இதழுக்கு வலுசேர்த்தவர் நாவலரின் சகோதரர் இரா.செழியன்.

தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நாவலர் அளித்த பெருஞ்சிறப்பு அவரது திருக்குறள் உரை, பாவேந்தர் கவிதைகள் திறனாய்வு, திராவிட இயக்க வரலாறு போன்ற அதிஅற்புத ஆய்வு நூல்களாகும். திருக்குறள் மனுதர்மத்திற்கு எதிரான நூல் என்று தனது ஆய்வில் எடுத்துரைத்தவர் நாவலர். நாவலர் எழுதிய நூல்களில் மதமும் மூடநம்பிக்கையும் என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் என்று எழுதினார்.

"திராவிடமே கொள்கை; பகுத்தறிவே உயிர்" நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு தினச்  சிறப்புக் கட்டுரை!

பேச்சாளராக, எழுத்தாளராக, இலக்கியவாதியாக, பத்திரிகையாளராக அறியப்பட்ட நாவலர் 1953ல் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மும்முனைப் போராட்டத்தில் பங்கேற்று சிறைச்சென்று தி.மு.க.,வில் தனது பொதுவாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுதினார். போராட்ட களம் புகுந்ததற்காக வழக்குகளை சந்தித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு அறிஞர் அண்ணா நாவலரை முன்மொழிந்தபோது, ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று அழைப்பு விடுத்தார்.

இதோ தனது அன்புத்தம்பி நாவலர் குறித்து பேரறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார்,

''தோழர் நெடுஞ்செழியனை பெரியார் தமது மேற்பார்வையில் வைத்துப்பார்த்தார் – அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் – ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம் அவராலும் ஒருகுறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்!’' இவ்வாறு நாவலரை உச்சிமுகர்ந்துப் பார்த்தார் பேரறிஞர் அண்ணா.

தேர்தல் களத்தில் தி.மு.க., களமாடிய போது, பேரறிஞரின் தளபதியாக, பிரச்சாரக்குழுத் தலைவராக நாவலர் நெடுஞ்செழியன் தம்மிடம் கொடுத்த பணிகளை திறம்பட செய்தவர். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை தி.மு.க எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதலமைச்சர் பதவிக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். தி.மு.கவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நாவலர்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தி.மு.க தலைவராக முத்தமிழறிஞர் கலைஞரும், பொதுச்செயலாளராக நாவலரும் பதவி வகித்தனர். கலைஞரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக அலங்கரித்தவர் நாவலர்.

தான் வாழும் காலத்தில் தான் கொண்ட கொள்கையான பகுத்தறிவுக் கொள்கையை உயிர்போல் காத்துவந்தவர் நாவலர். எத்தனை மாற்றத்திலும் தன் திராவிட இயக்கச் சிந்தனையை மாற்றிக் கொள்ளாதவர் நாவலர்.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் தி.மு.க என திராவிட இயக்கத்திலேயே தன் பணியை வாழ்நாள் முழுவதும் அற்பணித்து 2000 ஆம் ஆண்டில் மறைந்தார். இயக்கத்தில் வழித்துணையாக வந்த நாவலருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

"திராவிடமே கொள்கை; பகுத்தறிவே உயிர்" நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு தினச்  சிறப்புக் கட்டுரை!

இந்த 2020 ஆம் ஆண்டு நாவலருக்கு நூற்றாண்டு. இந்த நூற்றாண்டில் உலகப் புகழ்பெற்றதும் 193 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதுமான கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகம், நாவலர் நெடுஞ்செழியன் பெயரால் உலகளாவிய தமிழ் விருது ஒன்றை நிறுவியிருக்கிறது.

இந்த விருது உலகளாவிய ஒன்று. இலக்கணம், இலக்கியம், மொழியியல், தமிழ்க்கல்வி ஆகிய துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழின் மேன்மைக்கு முதலிடம் தந்து, வாழ்நாளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழக வளாகத்தின் நடுக்கூடத்துக்கு விருது பெறுபவர் வரவேற்கப்பட்டு, அவையோர் முன்னிலையில் கௌரவிக்கப்படுவார். இவ்விருது, டொரண்டோ பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றிதழ், விருது, பணமுடிப்பு ஆகியவை அடங்கியது.

நாவலரின் பெயரில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் இந்த விருது ‘தகைசால் தமிழ் இலக்கிய விருது’ என அழைக்கப்படும். இது தமிழுக்கு செய்யப்பட்ட அணிகலன். நடமாடும் பல்கலைக்கழகத்திற்கு சூடப்பட்ட மணிமகுடம்.

தமிழ்- தமிழர்- தமிழ்நாட்டின் நலனுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டிய திராவிட இயக்கத்தின் ஆலமரம், நாவலர் என்றால் அதுமிகையில்லை.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக நாவலர் போன்ற ஆலமரங்கள் உழைத்திருக்கின்றன. இந்த அற்புத ஆலமரங்கள் குறித்து முத்தமிழறிஞர் கலைஞர் கலைஞர் இவ்வாறு கூறுகிறார்.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக உழைத்த எத்தனையோ "ஆலமரங்கள்" விழுந்து விட்டன. அவர்களில் ஒருசிலரையாவது இந்த நேரத்தில் என் நினைவில் கொண்டு வந்தால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர், என்.வி. நடராசன், முரசொலி மாறன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கே.ஏ. மதியழகன், நாஞ்சிலார், சி.பி. சிற்றரசு, ஏ. கோவிந்த சாமி, மதுரை முத்து, அன்பில், மன்னை, எஸ்.எஸ். தென்னரசு, வே. தங்கபாண்டியன், ப.உ. சண்முகம், சி.வி.எம். அண்ணாமலை, கே.டி.எஸ். மணி, கோவை ராஜமாணிக்கம், பி.ஏ. சாமிநாதன், திருவண்ணாமலை தர்மலிங்கம், முருகையன், வேலூர் தேவராஜ், மா.பா. சாரதி, இரா. வெற்றிகொண்டான், ப.உ. சண்முகம், கடலூர் இளவழுதி, இராம. அரங்கண்ணல், சாதிக் பாட்சா, செ. கந்தப்பன், முல்லை வடிவேலு, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், காரைக்குடி ராம. சுப்பையா, காஞ்சி மணிமொழியார், புலவர் கோவிந்தன், தாழை. மு. கருணாநிதி, து.ப. அழகமுத்து, எம்.எஸ். மணி, பராங்குசம், நீலநாராயணன், டி.கே. சீனிவாசன், எஸ். இராகவானந்தம், சி.டி. தண்டபாணி, புதுக்கோட்டை பெரியண்ணன், வீரபாண்டி எஸ். ஆறுமுகம் என்று எழுதிக் கொண்டே போகலாம். விழுந்த விட்ட இந்த ஆலமரங்கள் போக, எஞ்சியிருக்கும் இரண்டு "ஆலமரங்களாக", எங்களைச் சுற்றி வேர் விட்டுள்ள விழுதுகளின் துணையோடு இந்த இயக்கத்தைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று இனமான பேராசிரியரின் 93 வது பிறந்தநாளில் பேசினார் முத்தமிழறிஞர்.

ஆனால், இன்றைய தினம் முதுபெரும் ஆலமரங்களான முத்தமிழறிஞர் கலைஞரும், இனமான பேராசிரியரும் இல்லாத நிலையிலும், முத்தமிழறிஞர் குறிப்பிட்ட, திராவிட இயக்கத்தை தொய்வில்லாமல் வழிநடத்திச் செல்லும் விழுதென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.

"திராவிடமே கொள்கை; பகுத்தறிவே உயிர்" நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு தினச்  சிறப்புக் கட்டுரை!

ஆம், திராவிட இயக்கத்தின் சொல்லோவியம்- நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவினை அறிவுசார்ந்த தமிழுலகமும், திராவிட இயக்கத் தொண்டர்களும் கொண்டாட அறைகூவல் விடுத்திருக்கிறார். அறிவாலயத்தில் நாவலருக்கு அஞ்சலி செலுத்தி தி.மு.க கழகம் தம் முன்னோடியை கொண்டாடத் தொடங்கியுள்ளது.

கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதுபோல், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நாவலருக்கு நூற்றாண்டு கொண்டாட வேண்டும் என்று கடந்த ஆண்டு சட்டசபையில் கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார். இன்றைய தினம் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினின் அறத்தின் குரல் அரசின் காதுகளுக்கு ஒலித்துள்ளது.

இதனைத்தொடர்ந்துதான், தமிழக அரசு நாவலரின் நூற்றாண்டை கொண்டாட முடிவெடுத்துள்ளது. இது தி.மு.க.,வின் வெற்றி. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உன்னதமான இயக்கப்பணிக்கு எடுத்துக்காட்டு. இனி வரும் தலைமுறை நடமாடும் பல்கலைக்கழகமாம் நாவலர் நெடுஞ்செழியனின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ளும்.

திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழையும், தகுதி மிகுந்த அடையாளத்தையும் கொண்டுள்ள நாவலரின் நூற்றாண்டில் அவரது பெருமைகளை நினைவுகூர்வோம். சமூகநீதி - சுயமரியாதை ஆகிய லட்சியங்களைக் காக்கும் பயணத்தை வாழும் நாள் முழுதும் தொய்வின்றித் தொடர்ந்து மேற்கொள்ள சூளுரைப்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்ததைத் தொடர்ந்து திராவிட இயக்கச் செயல்வீரர்கள் ஊர்ஊராக நாவலருக்கு விழா எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றினை எழுதிய நாவலருக்கு மகுடம் சூட்டிய தளபதி மு.க.ஸ்டாலினின் பெயர் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் என்பது திண்ணம்.

நாவலரை மறக்காத நல்லவர் வாழ்க!

நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் புகழ் ஓங்குக!!

banner

Related Stories

Related Stories