உணர்வோசை

இரு கைகள் இல்லா இசைக் கலைஞன் - வியந்து பாராட்டிய அனிருத்: யார் இந்த தான்சேன்?

மாற்றுத் திறனாளி தான்சேன் இசைத்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை வியந்து பாராட்டியுள்ளார் அனிருத். தான்சேன் பற்றிய அறிமுகம் இந்த கட்டுரையில் காணலாம்.

இரு கைகள் இல்லா இசைக் கலைஞன் - வியந்து பாராட்டிய அனிருத்: யார் இந்த தான்சேன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

13 வயது வரை அனைத்து சிறுவர்களையும் போல ஓடியாடிக் குறும்பு செய்து கொண்டிருந்த சிறுவன் தான் தான்சேன். எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து அவரது இரு கைகளையும் பறித்தது. தான்சேன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த இரும்புக் கம்பி, துரதிஷ்ட வசமாக மின்சார கேபிளில் பட, இரண்டு கைகளையும் இழக்க நேரிட்டது. மிகுந்த போராட்டத்துக்கு பின்னரே உயிர்ப் பிழைத்து வந்தார்.

விபத்துக்கு பின் நிலைமை முன்போல இல்லை. இரண்டு கைகள் இல்லை. தன்னுடைய வேலைகள் எதையும் தன்னாலே செய்து கொள்ள முடியாத நிலை. அடுத்தவரின் உதவியில் மட்டுமே இயங்க முடியும் என்ற சூழல். கிட்டத்தட்ட ஒரு குழந்தை போல.

அப்பா கண்ணன், திருமணம் மற்றும் திருவிழா கச்சேரிகளில் லைட் மியூசிக் கச்சேரி நடத்தும் ஒரு சிறிய ட்ரூப் வைத்திருக்கிறார். ஒரு அண்ணன் தான்சேன் என இரண்டு பிள்ளைகள். இரு கைகளை இழந்த பிள்ளைக்கு வசதிகள் செய்து தரும் அளவுக்கு குடும்ப நிலை இல்லை.

நலம் விசாரிப்பதாக வந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், " பையனை எங்கயாது ஸ்பெஷல் ஸ்கூல் இல்லைன்னா ஆஸ்ரமத்துல சேர்த்துடுங்க. நீங்க இருக்க நிலையில எப்படி வளர்க்க முடியும்..." என்று அறிவுரை கொடுத்துவிட்டுச் சென்றனர்.

குடும்ப சூழ்நிலை, வளர்ப்பதில் உள்ள சிரமம் இதை மட்டுமே மற்றவர்கள் பார்த்த நேரத்தில், "அந்த பிஞ்சு மனது எவ்வளவு பாடுபடும். தாழ்வு மனப்பான்மையில் உழன்று தவிக்குமே. " என்று நினைத்தது தான்சேனின் தாய் நாகஜோதி மட்டுமே.

"என்ன பாடுபட்டாலும் சரி. என் பிள்ளைய நான் ஆளாக்கிடுவேன்" என்று வைராக்கியமாக சொந்த பந்தங்கள் முன்னால் சபதமேற்றார். இன்று அதை நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.

Drums Tansen
Drums Tansen

தான்சேன் இப்போது டிரம்ஸ் மற்றும் கீபோர்ட் இசைக் கலைஞர். விபத்துக்கு முன் அவர் டிரம்ஸ் பயிற்சி மேற்கொண்டிருந்திருக்கிறார். விபத்தை அடுத்து சில வருடங்கள் பயிற்சியை தொடர முடியாமல் இருந்திருக்கிறது. 12-ம் வகுப்பு முடித்த, பள்ளி விடுமுறை நாளில் மீண்டும் டிரம் ஸ்டிக்கை எடுத்திருக்கிறார்.

இரு கைகளிலும் ரப்பர் பேண்ட் மாட்டிக் கொண்டு அதில் டிரம் ஸ்டிக்கை செருகி, டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். இசை ட்ரூப் நடத்தும் அப்பா மற்றும் அண்ணன், தான்சேனுக்கு பக்க பலமாக இருந்துள்ளனர்.

அன்று தான்சேனின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கியது. இன்று இசையமைப்பாளர் அனிருத் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறார் தான்சேன்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின், "வாத்தி கம்மிங்" பாடல் வைரல் ஹிட். அந்த பாடலை கீபோர்டு மற்றும் டிரம்ஸ் என சேர்த்து வாசித்து, யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார் தான்சேன். அந்த வீடியோ இசையமைப்பாளர் அனிருத்தின் பார்வைக்கு சென்றுள்ளது.

தான்சேனின் திறனை பார்த்து வியந்த அனிருத், அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து, வெகுவாக பாராட்டியிருந்தார். " முழுக்க முழுக்க உண்மையான திறமை" என பாராட்டி பதிவிட்டிருந்தார் அனிருத்.

Mindblown ! Just pure amazing talent 😍🏆🙏🏻 God bless you brother! #VaathiComing

Posted by Anirudh Ravichander on Friday, May 8, 2020

அனிருத்தின் பாராட்டை அடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பல சினிமா பிரபலங்கள் அந்த வீடியோவை பகிர்ந்து தான்சேனை வாழ்த்தி வருகின்றனர்.

நடிகர் மற்றும் நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ், அந்த வீடியோவை பகிர்ந்து நடிகர் விஜய் மற்றும் அனிருத்துக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். " உங்கள் இருவர் முன்னிலையில் வாசிக்க வேண்டும் என்பது தான்சேனின் ஆசை. அதை நிறைவேற்றித் தர வேண்டும்" என பதிவிட்டிருந்தார். இதையடுத்து ராகவா லாரன்ஸை தொடர்பு கொண்ட நடிகர் விஜய், நிச்சயம் ஒரு நாள் தான்சேனின் ஆசையை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார். தனது இசையில் தான்சேனுக்கு வாய்ப்பளிப்பதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார். விரைவில் தான்சேனின் இசை சினிமாவில் ஒலிப்பதை நாம் கேட்கலாம்.

Happy Mother’s Day to all mothers in the world, it’s been 4 years Since I build a temple for my living mother. I...

Posted by Raghava Lawrence on Saturday, May 9, 2020

தனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணி மகிழ்ச்சியில் இருந்த தான்சேனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். " கொரோனா லாக்டவுன்ல வீட்ல இருந்தே எதாச்சும் பண்ணால்ம்னு யோசிச்சு பண்ணது தான் அந்த வீடியோ. இது இசையமைப்பாளர் அனிருத் சார் வரைக்கும் போய் சேரும்னு நான் எதிர்பார்க்கல. மகிழ்ச்சியா இருக்கு. சோசியல் மீடியால நிறைய பேர் வாழ்த்துறாங்க. மகிழ்ச்சியா இருக்கு. இத என் முன்னேற்றத்துக்கான படிக்கட்டா பார்க்குறேன். " என்று பெரிய கொண்டாட்டங்கள் ஏதும் இல்லாமல் இயல்பாக பேசினார் தான்சேன்.

லாரன்ஸ் மாஸ்டருடன் தான்சேன்
லாரன்ஸ் மாஸ்டருடன் தான்சேன்

துவண்டு போய் வானம் இடிந்து விழும் நிலைக்கு வாழ்வு சென்றாலும், உயிர்வாழ ஊக்கம் தருபவராக நம் கண்முன் கடந்து செல்லும் தான்சேன், தனக்கு வாழ்வில் இரண்டு விஷயங்கள் ஊக்கமளிக்கும் என்கிறார்.

" சின்ன வயசுலயே கை போனதால, குடும்பத்தினரும் சரி நண்பர்களும் சரி என்னை சில வேலைகளை செய்ய விட மாட்டாங்க. உன்னால இத செய்ய முடியாதுன்னு சொல்லுவாங்க. அது அவங்க என் மேல காட்டுற அக்கறையோ, பரிவாகவோ இருக்கலாம். ஆனால், உன்னால முடியாதுன்னு யாராது சொல்லிட்டா அந்த விஷயத்தை செஞ்சே ஆகணும்னு வெறி வரும். அத கண்டிப்பா செஞ்சு முடிப்பேன். யாரும் என்ன நினைச்சு பரிதாபப்படுறது பிடிக்காது. பரிதாபம் என்ன முடக்கிடுது. அப்படித்தான், என்னால் பைக் ஓட்ட முடியாதுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் தான் ஓட்டியே ஆகனும்னு வெறித்தனமா இருந்தேன். எனக்கு பைக் ஓட்ட ஏதுவா வண்டியோட கைப்பிடியில கிளாம்ப் ஒன்னும், கயிறு ஒன்னும் பொருத்திட்டேன். அதுல கைய விட்டு பேலன்ஸ் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சேன். முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. போகப் போக கத்துக்கிட்டேன். அப்போ கிளட்ச் இல்லாத பைக்க ஓட்டுனேன். இப்போ எல்லா கியர் வண்டிகளையும் ஓட்டுவேன். போன வருசம் கேரளாவுக்கு ஒரு வார பைக் டிரிப் நானே ஓட்டிட்டு போய்ட்டு வந்தேன்." என்று மலைக்க வைக்கிறார். பைக் மட்டும் அல்ல காரையும் மிக நேர்த்தியாக இயக்குகிறார் தான்சேன்.

" இது என்னங்க பிரமாதம். டிராஃப்டர் கருவி வச்சு இன்ஜினியரிங் டிராயிங் வரைவான் தான்சேன்" என்கின்றனர் தான்சேனின் கல்லூரி நண்பர்கள். ஆம் தான்சேன் ஒரு கணினி அறிவியல் பொறியியல் பட்டதாரி.

பைக் ஓட்டும் தான்சேன்
பைக் ஓட்டும் தான்சேன்

" வண்டி ஓட்டுரது தான்சேனுக்கு சவாலான விஷயம் தான். ஆனா இன்ஜினியரிங் டிராயிங் போடுறது எல்லோருக்குமே சவாலானது. அத நேர்த்தியா செய்வான் தான்சேன். அவனுடைய கையெழுத்து இன்னும் அழகா இருக்கும். நாங்க எப்போவுமே அவன வித்தியாசமானவனா பார்த்ததில்ல. அப்படி பார்க்குறதையும் அவன் விரும்புறதில்லை. அவன் வாழ்க்கையில அவன் கத்துக்கிட்ட ஒவ்வொரு விஷயமும், சாதிச்சிருக்குற ஒவ்வொரு விஷயமும், முழுக்க முழுக்க அவனுடைய ஆர்வம் மற்றும் திறமையால நடந்தது. மாற்றுத்திறனாளி என்ற இரக்கம் அவனுக்கு எப்போதுமே தேவைபட்டதில்ல. அப்படிப்பட்ட நண்பன் கிடைச்சதுக்கு நாங்க பெருமைபடுறோம்." என்கிறார்கள்.

"எனக்கு ஊக்கமளிக்குற இன்னொரு விஷயம் என் அம்மா" என்று தொடர்ந்து பேசத் தொடங்கினார் தான்சேன்.

" என் கை இப்படி ஆனதுல இருந்து இப்போ வரைக்கும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தையும் எங்க அம்மா பார்த்து பார்த்து செஞ்சிட்டு இருக்காங்க. வாழ்க்கையில என்ன பண்ண போறோம்ன்னு புரியாம இருந்த நேரத்துல, என் அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவுல இருக்கு.

'நமக்கு இப்படி ஒரு குறை ஆயிடுச்சேன்னு நினைச்சுட்டு உட்காரக் கூடாதுப்பா. ஒரு பக்கம் குறை இருந்தாலும் இன்னொரு பக்கம் நீ சாதிக்க வாழ்க்கையில ஏதோ ஒன்னு காத்துக்கிட்டு இருக்கும். அத நீ தான் தேடிக் கண்டு பிடிக்கணும்ன்னு சொன்னாங்க. அப்படி நான் தேடிக் கண்டுபிடிச்சது தான் இசை.

இப்போ நான் ஒரு மியூசிக் ட்ரூப் வச்சிருக்கேன். வெளிநாடுகள்ல போய் மக்கள மகிழ்விக்கிறேன். என்னால ஒரு 10 பேருக்கு வேலை கொடுக்க முடியுது.

இது போக சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில சட்டம் படிச்சுட்டு வர்றேன். சட்டம் மூலமா மக்களுக்கு நீதியைய கொண்டு சேர்க்கனும்னு இருந்த எண்ணம் தான் இதுக்கு காரணம். இடையில கொஞ்சம் சினிமா வாய்ப்பு கிடைக்குது. லாரன்ஸ் மாஸ்டரோட காஞ்சனா - 3 படத்துல ஒரு சீன் நடிச்சிருக்கேன். மாஸ்டர் நடத்துற கலை நிகழ்ச்சிகளில் எல்லாம் நானும் பங்கேற்று வாசிக்கிறேன். இப்படி ஒவ்வொரு நிலையா வாழ்க்கை முன்னேறிக்கிட்டு இருக்கு.

அம்மா  நாகஜோதியுடன் தான்சேன்
அம்மா நாகஜோதியுடன் தான்சேன்

என்னை போல கையிழந்த மாற்றுத் திறனாளிகள் மோசமான வாழ்க்கை நிலையில இருக்கிறத என்னால பார்க்க முடியுது. எனக்கு கிடைச்ச மாதிரி குடும்ப ஆதரவும், சமூக ஆதரவும் முறையா கிடைக்காம இருக்கிறதே அவங்களோட நிலைமைக்கு காரணம். அப்படி இருக்குறவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய நான் செஞ்சிட்டு இருக்கேன். கைகள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு டிரம்ஸ் கத்துக் கொடுத்திட்டு இருக்கேன்." என்று புன்னகைக்கிறார்.

சட்டக் கல்லூரி மாணவன் தான்சேன்
சட்டக் கல்லூரி மாணவன் தான்சேன்

மேலும் ஒரு கோரிக்கையை கலைஞர் செய்தி வாயிலாக வைத்திருக்கிறார் தான்சேன். " நான் வச்சிருக்கிற மியூசிக் ட்ரூப் மூலமா 10 முதல் 15 கலைஞர்கள் இருக்காங்க. இப்போ இந்த கொரோனா காலத்துல, திருமணம் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்தாகிடுச்சு. இதனால் எங்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. வருமானம் எதுவும் இல்லை. என்னால சமாளிக்க முடிஞ்சாலும், எங்க இசை ட்ரூப் கலைஞர்களுக்கு என்னால உதவ முடியல. நாங்கன்னு இல்லை, எங்களப் போல தமிழகம் முழுவதும் கலைஞர்கள் தொழில் நடக்காம ரொம்ப கஷ்ட்டபட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் அரசாங்கம் கவனத்துல எடுத்துக்கிட்டு தேவையான உதவிய செய்யனும்னு கோரிக்கை வைக்கிறேன். அரசாங்கத்திடம் இத கொண்டு சேர்த்துடுங்க" என்றார்.

கை இல்லை என்றாலும் நம்பிக்'கை' கொண்டு வாழக்கையை பற்றிச் செல்கிறார் தான்சேன்.

banner

Related Stories

Related Stories