உணர்வோசை

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?

கொரோனா தொற்றிய ஒரு மருத்துவரின் சடலத்துக்கு இறுதி மரியாதையை, அவமரியாதையாக்கி இருக்கிறார்கள்.

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது என பல சமயங்களில் சொல்வது, இதற்கு மிகப் பொருத்தமானது. அரசாங்கப் படைக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையிலான போரில்கூட மரணித்துப்போகும் மனிதர்களை எந்தத் தரப்பும் மரியாதையுடன் அடக்கமோ எரியூட்டமோ செய்வது உலக வழக்கம்.

ஆனால், அண்மையில் சென்னையில் நிகழ்ந்த அவலமான ஒரு இறுதிமரியாதை, அதற்கு நேரெதிராக அமைந்துவிட்டது. அதையடுத்து சென்னையில்தான் இரண்டாவதாகவும் கொரோனா தொற்றிய ஒரு மருத்துவரின் சடலத்துக்கு இறுதி மரியாதையை, அவமரியாதையாக்கி இருக்கிறார்கள்.

முதலாமாவர், ஆந்திர மருத்துவர்..! எத்தனை பேருக்கு எலும்பு மூட்டு சிகிச்சை அளித்திருப்பாரோ, கடைசி கட்டத்தில் அவருடைய குடும்பத்தினர் எல்லாருக்கும் கொரோனா தொற்றிவிட, அவராக பெரும் முயற்சிசெய்துதான் சென்னை, வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வந்து சேர்ந்துள்ளார்.

கொள்ளைநோய் அவரின் உயிரைப் பறித்துவிட, தனியராக இருந்தவரின் சடலமும் தனியாகப் போனது. ஏழு மணி நேரம் அங்குமிங்கும் அலைக்கழித்து, இறுதியாக போரூரில் அவரது உடலம் தகனம் செய்யப்பட்டதாகத் தகவல்! முதலில் திருவேற்காட்டிலும் பிறகு அம்பத்தூரிலும் கொரோனா நோயால் இறந்தவர் என்பதால் அவரது உடலை எரியூட்ட சுற்றுப்பகுதிவாசிகள் பலரும் கும்பலாக வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?

இரண்டாமவர், கீழ்ப்பாக்கத்தில் பூந்தமல்லி சாலை அருகில் தனியாக மருத்துவமனை நடத்திவந்தார். நரம்பியல் சிகிச்சை வல்லுநரான இவரும் மருத்துவரான இவரது மகளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதில் தந்தைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு உறுப்புகள் செயலிழந்து இறந்துபோனார்.

நேற்று முன்தினம் இரவு அவரின் உடலை அடக்கத்துக்கு எடுத்துச்சென்ற போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கும்பல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், சடலத்தைக் கொண்டுசென்ற ஊழியர்களை கடுமையாகத் தாக்கி அவசர ஊர்தியையும் உடைத்து சேதப்படுத்தினர். சென்னையில் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதே போன்ற கும்பல் எதிர்ப்பும் வன்முறைச் சூழலும் இரண்டாவது வாரமாக நீடித்துவருகிறது.

நீலகிரி மாவட்டம் தெங்குமரகடா எனும் ஆற்றால் சூழப்பட்ட மலை கிராமத்தில் மருத்துவத் தொண்டாற்றிய இளம் மருத்துவர் ஜெயமோகன், கொரோனா - டெங்கு அறிகுறிகளுடன் கோவையில் சிகிச்சைபெற்று பலனின்றி இறந்துபோனார்.

அவருடைய உடலத்தையும் சொந்த ஊரிலேயே அடக்கம்செய்ய ஊரில் உள்ள ஒரு கும்பல் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அவருடைய உடல் அங்கு இறுதிமரியாதைக்குப் பின் அடக்கம்செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டுள்ளன.

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?

இதேசமயம், மறுநாள் அதே ஊரில் மறைந்த மருத்துவருக்கு ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர் எனும் செய்தி மனதை உருகவைக்கிறது. மருத்துவர்களின் சடலங்களுக்கு மட்டுமா இந்தத் தீண்டாமை - கொள்ளை நோய் அச்சத்தால் அவமரியாதை இழைக்கப்படும் அவலம் என்றால், பலருக்கும் சாவுக்குப் பிந்தைய இந்த ’சோதனை’ நடந்துள்ளது.

கடந்த 14ஆம் தேதியன்று, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா பிரிவில் சிகிச்சைபெற்று வந்த திண்டுக்கல் மாவட்ட முதியவர் (96 வயது) ஒருவர் இறந்துவிட்டார். அவரின் சாதிவழக்கப்படி உடலத்தை அடக்கம் செய்ய அருகிலுள்ள பாலாம்பாள்புரம் இடுகாட்டுக்கு கொண்டுசென்றபோதும் அப்பகுதியில் உள்ளவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியலிலும் இறங்கினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகே அங்கு அடக்கம் செய்யமுடிந்தது.

அதற்கு முன்னதாக, தலைநகர் சென்னையில் ஓரளவு சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் வசிக்கும் ஆதம்பாக்கம் பகுதியில், சொந்த ஊருக்குத் திரும்பமுடியாத வெளிமாநிலத் தொழிலாளர்களை மாநகராட்சியின் சார்பில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தடியடி நடத்திதான் கும்பலை போலிஸார் கலைத்தனர்.

இந்தச் சம்பவங்கள் பானை சோற்றுக்கு ஒரு பதம்போலத்தான் என்பது பல மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்கள் உணர்த்துகின்றன.

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?

திடீரென உலகமெங்கும் ஏற்பட்ட பெருங் கொள்ளை நோய் பற்றி பாமர மக்களுக்கும் உணர்த்தும்படியாக அரசாங்கங்கள் செயல்படவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறது. ஆனால் கைகழுவச் சொன்னதற்குக் கொடுத்த அழுத்தம், தொற்றியவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள், கெடுவாய்ப்பாக இறந்துவிட்டால் சடலங்களைக் கையாள்வது எப்படி என்பது குறித்து தெளிவான வழிகாட்டல்களையும் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இந்திய ஒன்றிய அரசும் இதற்கான நெறிமுறைகளை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசின் சார்பில் இதையொட்டி மருத்துவர்கள் அளவுக்கு ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்புகள் சென்று சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களோடு பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினால் அது போதுமானதாக இல்லை. இது மட்டுமல்ல, முன் எச்சரிக்கை குறித்து குறிப்பாக கைகழுவுங்கள், தனித்திருங்கள் என பல வகைகளிலும் விளம்பரம் செய்த அரசாங்கம், ஒரு மனிதன் இறந்தபின்னர் அவனுக்கு கிடைக்கவேண்டிய இறுதி மரியாதை கிடைக்கவிடாதபடி ஆக்கிவிட்டதே! பொதுமக்களுக்கு இதைப் பற்றிய அச்சத்தையும் பீதியையும் முன்னுணர்ந்து செயல்பட்டிருந்தால் இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்காமல் நிச்சயமாகத் தவிர்த்திருக்க முடியும்.

அரசாங்கம் ஏன் செய்யவில்லை?

டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா இராஜேஷ், அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவு இல்லாமல் இருப்பதை ஒப்புக்கொண்டார். சம்பவத்துக்கு மறுநாள் நடந்த அன்றாட செய்திச் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ‘அரசு மருத்துவமனையில் இப்படியான பிரச்னையை எதிர்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை; தனியார் மருத்துவமனை ஆட்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை’ என்று மாறுபட்ட விளக்கம் அளித்தார்.

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?

சுகாதாரத் துறை அமைச்சரிடம் கேட்கலாம் என்றால், அன்றாடம் அப்படி இப்படி விளக்கம் கொடுத்து முதலமைச்சரைவிட பிரபலம் ஆனதாலோ என்னவோ, திடீரென ஆளையே காணோம். (அதைப் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த விளக்கம் அபாரம்; அது தனி.)

ஒன்று மட்டும், உண்மை. அம்பத்தூர் சம்பவத்தன்று, ஆந்திர மருத்துவரின் சடலத்தை மயானத்திலேயே போட்டுவிட்டு அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் போய்விட்டதாக கடுமையான விமர்சனம் அப்போது எழுந்திருந்தது. அந்த சூழலிலேயே அரசுச் செயலாளர் பீலா இப்படியொரு விளக்கம் அளித்தார். அதே மருத்துவமனை தொடர்பானதும்தான் சென்னை மருத்துவரின் மரணம் என்றாலும், கரூரிலும் கோவையிலும் நிகழ்ந்த இறப்புகள் அரசு தொடர்பான மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்தானே! அதற்கு இது பொருந்துமா?

கொள்ளை நோய்க்கு தங்கள் உயிருக்கு உயிரானவர்களைப் பறிகொடுத்த அவர்களின் உறவுகளின் மனம் என்ன பாடுபடும்! வரும்முன் காக்காவிட்டாலும் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவை மீறி கும்பல் எதிர்வினைகளைக் கட்டுப்படுத்த முதலமைச்சரின் கையில் இருக்கும் காவல்துறையால் முடியாதா?

நாகர்கோவிலில் பணிக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பிய அரசு மருத்துவரை தடியால் அடித்தும் - சென்னையில் செய்தித்தாள் எடுத்துச்சென்ற பணியாளரைத் தாக்கியும் அரசுகளின் உத்தரவை மீறுவதற்கு அவர்களால் முடிகிறது என்றால், இறந்துபோன ஒரு மனித உயிருக்கான மரியாதையைக்கூட செலுத்தவிடாதவர்களை முன்கூட்டியே தடுப்புக்காவல் செய்திருக்கமுடியாதா?

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?

கொள்ளை நோய்க் காலத்தில் கடுமையாகப் பணியாற்றும் பல அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்தவர்களின் கடமை மதிப்பிற்குரியது, பாராட்டுக்குரியது; ஆனால், கொள்கை முடிவெடுக்க வேண்டிய அரசாங்கத்தின் கவனமின்மையால் அவர்களுக்கும் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும் நிலை!

இன்னுமொன்று, மருத்துவர்களை மக்கள் அவமதிக்கிறார்கள் என இன்னொரு பிரச்னையும் குறிப்பிடப்படுகிறது. வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய் டாக்டர் எனப் போற்றப்பட்ட மருத்துவர் எஸ். ஜெயச்சந்திரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன் 71ஆவது வயதில் இறந்தபோது, மொத்த சென்னை நகரமே நெகிழ்ந்து, அழுது, இறுதி மரியாதை செய்தது.

இதைப் போல மற்ற மாவட்டங்களிலும் பல மருத்துவர்களும் இருந்தும், இறந்தும் மக்கள் மனதில் மரியாதையுடன் நிலைத்து நிற்கிறார்கள். எனவே, ஒரு சில வன்போக்காளர்கள் செய்யும் அடாவடித் தனத்தை பகுதிமக்கள் செய்ததாகக் கருதுவதும் பொருத்தமாக இல்லை.

இப்போதைய கொரோனாவைப் போலவே 1980-களில் தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. கிருமி தொற்றியவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு, அவர்கள் மீது தீண்டாமை ஏவப்பட்டது. பல அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டது. புள்ளிராஜா விளம்பரத்தை இன்றைய 30+ வயது ஆட்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

“உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலையா?” - மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்த அரசாங்கம் மனதுவைக்குமா?

உலகம் முழுவதும் ஏற்பட்ட அசம்பாவிதங்களை, தனிநபர் பாதிப்பைத் தடுக்க அந்த விளம்பரங்கள் பயன்பட்டன. இப்போதும் இந்த கொள்ளை நோய்க் காலத்திலும் அரசாங்கம் அந்தப் பணியைக் கோட்டைவிட்டிருக்காமல் செய்திருந்தால், எத்தனையோ பேரைக் காப்பாற்றிய ஆந்திரப் பிரதேசத்தின் அந்த எலும்பு மருத்துவரின் சடலம் ஏழு மணி நேர அலைக்கழிப்பையும் அவமரியாதை செய்யப்பட்ட இறுதி அவலத்தையும் நேர்ந்திருக்காது!

மனிதம் வாழ, மக்களைப் பண்படுத்துவதில் மாநில அரசாங்கம் மனதுவைத்து செயல்படுமா?

Related Stories

Related Stories