உணர்வோசை

“ஒரே தத்துவம்! ஒரே தலைவர்! ஒரே பேராசிரியர்!” - ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

திராவிட இயக்கத்துக்கு நான்கு தூண்கள். சுயமரியாதைக்கு அடையாளம் தந்தை பெரியார்; இன எழுச்சிக்கு பேரறிஞர் அண்ணா; மொழி உணர்ச்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர்; தலைமைக்கு உண்மையாக இருப்பதற்கு பேராசிரியர்!

“ஒரே தத்துவம்! ஒரே தலைவர்! ஒரே பேராசிரியர்!” - ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

‘’நான் எதையும் விரும்பியதில்லை, ஆனால் எல்லாமே எனக்கு வாய்த்திருக்கிறது” என்று பற்றற்று வாழ்ந்த பேராசிரியப் பெருந்தகை படுக்க வைக்கப்பட்டு இருக்கிறார். அப்படிப் படுக்கவைக்கப்பட்டு இருப்பவர் சிலரது பார்வைக்கு அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர். சிலரது பார்வைக்கு அவர், சிறந்த பேச்சாளர். சிலரது பார்வைக்கு அவர், சிறந்த எழுத்தாளர். சிலரது பார்வைக்கு அவர், கல்லூரிப் பேராசிரியர். சிலரது பார்வைக்கு அவர், அரசியல்வாதி. சிலரது பார்வைக்கு அவர் முன்னாள் அமைச்சர். சிலருக்கு அவர் 98 வயதுப் பெரியவர். சிலர் பார்வைக்கு நிறைந்த வாழ்வு வாழ்ந்தவர்!

ஆனால் இவை எதிலும் முழுமையான ‘பேராசிரியர்’ இல்லை. அவரை முழுமையாகச் சொல்ல வேண்டுமானால், ஒரே தத்துவத்துக்காக ஒரே தலைவரின் காலடித்தடத்தில் நடந்த ஒரு மனிதர்!

‘என்னைப் படைத்தனன், உனக்குத் தொண்டாற்றுமாறே’ என்று வாழ்ந்த வாழ்க்கைக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அவரது புகைப்படத்தைக் காட்டலாம். மரணித்துப் படுக்க வைக்கப்பட்டு இருக்கும்போதும் வெற்றிலை சிவந்த உதட்டின் ஓரத்தில் சிந்திய புன்னகை ஒரே ஒரு கருத்தைச் சொல்லிச் சென்றுள்ளது, ‘ ஏற்றுக் கொண்ட தத்துவத்துக்காக இறுதிவரை பேசு. அந்த தத்துவத்துக்காகப் போராடும் தலைமைக்கு உண்மையாக உன்னை ஒப்படை” என்பதுதான் அது!

“ஒரே தத்துவம்! ஒரே தலைவர்! ஒரே பேராசிரியர்!” - ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

பதினேழு வயதில் புவனகிரியில் ‘இராமையா’வாக பேசியதற்கும் 96 வயதில் ஈரோட்டில் பேராசிரியராகப் பேசியதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி வருவதற்கு தாமதம் ஆனதால் மேடை ஏற்றப்பட்ட இராமையாவானவர் அக்கினியாய்ப் பொழிந்தார் அன்று. கேட்டுக் கொண்டே மேடையேறி வந்த அழகிரி, இவரையே தொடரச் சொன்னார். அன்று பெரியாரின் திராவிடக் கொள்கைகளை முழங்கினார் ‘இராமையா’.

2018ல் அந்தப் பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் நடந்த மாநாட்டில், ''தளபதி ஸ்டாலினால் தான் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் காப்பாற்ற முடியும், போராட்டங்களை முன்னெடுக்க முடியும்'' என்று முழங்கினார் பேராசிரியர்.

1938க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் 10 முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சட்டமேலவை உறுப்பினர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர். நான்கு முறை அமைச்சர். 43 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளர்... என்று அதிகாரமிக்க பதவிகள் அனைத்தையும் அலங்கரித்த பிறகும் அன்று தூக்கிய ஆரிய எதிர்ப்பையும் திராவிட துதிப்பையும் விடாமல் தொடர்ந்ததில்தான் பேராசிரியரின் பெருமை அடங்கி இருக்கிறது.

1944ல் ஈரோட்டில் நடந்த மாணவர் கலந்துரையாடலில் ‘தமிழா கேள்’ என்ற தலைப்பில் அன்றைய ‘அன்பழகன்’ பேசுகிறார் : ‘’தன்னுணர்வு வளரத் தமிழ்க்களனி திருத்தப்பட வேண்டும். இலக்கியப் பூங்காவானாலும் இலக்கண விளைநிலமானாலும் ஆரியக் கள்ளி முளைத்து வளர்ந்திருப்பின் அதன் தீமையை உணர்ந்த திராவிடர் அதனைத் தீ வைத்தேனும் ஒழித்திடத் தயங்கார்” என்றார்!

2018 ஈரோடு மாநாட்டில் பேசுகிறார் பேராசிரியராக : ‘’கலைஞரால் இந்த மேடைக்கு வர இயலவில்லை. அவரைப் போலச் சிந்தித்து,செயல்பட்டு, இயக்கம் நடத்தி, அனைவரையும் அரவணைத்து அன்பு பாரட்டி வரக்கூடிய இளந்தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். அவர் தலைமையில் திராவிடக் கொள்கைகள் வெற்றி பெறும். ஆரியம் இன்று தலைதூக்கி வருகிறது. அதனை அவர் வீழ்த்துவார்” என்று முடித்தார்.

ஒரே தத்துவம் தான். அந்த தத்துவத்தை முன்னெடுக்கும் தலைமை எதுவோ அதற்குத் தன்னை ஒப்புவித்துக் கொண்டு வாழ்ந்ததில்தான் பேராசிரியரின் பெருமை அடங்கி இருக்கிறது.

“ஒரே தத்துவம்! ஒரே தலைவர்! ஒரே பேராசிரியர்!” - ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

பேராசிரியரின் வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். அவர் ‘யாரிடமும்’ தலையாட்டும் மனநிலை கொண்டவர் அல்ல. ஆரம்ப காலத்தில் பெரியாரது பேச்சையே அவரது மேடையிலேயே மறுத்துப் பேசியவர். பேரறிஞர் அண்ணா சொன்னதாகவே இருந்தாலும் அதில் விமர்சனம் இருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர்.

ஏதாவது ஒரு விவகாரத்தில் கூடுதல் தெளிவு பெற வேண்டுமானால் பேராசிரியருடன்தான் அண்ணா விவாதிப்பார். அவர்தான் கூச்சப்படாமல் மறுத்துப் பேசுவார் என்பதால். ‘நான் மாணவன், அதுவும் அடங்காத மாணவன்’ என்று தன்னை ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்து கொண்டவர் பேராசிரியர்.

'வேறு எவரையும் விடக் கலைஞரே இயக்கம் காப்பார்’ என்று முன்கூட்டிக் கணித்த தீர்க்கதரிசனத்தில் தான் பேராசிரியரின் பெருமை அடங்கி இருக்கிறது.

1975 டிசம்பர் தி.மு.கவின் ஐந்தாவது மாநில மாநாடு கோவையில். அன்றைய முதல்வர் கலைஞரை வழிமொழிந்து பேசுகிறார் பேராசிரியர். ‘’கலைஞர் கருணாநிதி அவர்கள், இந்த நாட்டிலே தோன்றிய பல்வேறு தலைவர்களுக்கு எந்தெந்தப் புகழ், சிறப்புகள் இருந்தனவோ அதையெல்லாம் ஒருங்கே பெற்றவர்’’ என்று சொன்னது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தலைவரையும் சொல்லி அவர்களுக்கும் கலைஞருக்குமான ஒற்றுமையைப் பட்டியலிடுவார் பேராசிரியர். அப்போது கலைஞர் முதல்வர். பேராசிரியர் அமைச்சர். எந்த சூழ்நிலையில் இப்படிப் பேசுகிறார் என்பதுதான் முக்கியமானது!

அவசர நிலைப்பிரகடனத்தை எதிர்த்ததற்காக எந்த நேரமும் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற சூழலில், ‘கலைஞர்தான் தலைவர்களின் தலைவர்’ என்று பேராசிரியர் பேசுகிறார். அதுதான் முக்கியம்.

‘’இன்று டிசம்பர் 25. டிசம்பர் 28 ஆட்சி கலைக்கப்படலாம் என்கிறார்கள். 28 என்ன? நான் பேசிவிட்டு இறங்கியதும் கலையுங்கள். அதைவிட பரசவம் எனக்கு இல்லை. நான் கிரீடத்தைப் பற்றி கவலைப்படுபவன் அல்ல. அந்த கிரீடத்தைத் தாங்கும் தலையைப் பற்றி கவலைப்படுபவன். கிரீடம் போய்விடலாம். தலை இருக்கவேண்டும். கிரீடம் தான் அமைச்சரவை. தலைதான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று அந்த மாநாட்டில் தான் முதல்வர் கலைஞர் குறிப்பிட்டார்.

முப்பது நாளில் ஆட்சி பறிக்கப்பட்டது. அத்தகைய சூழலில், ‘கலைஞர் தான் தலைவர்களின் தலைவர்’ என்று அச்சமின்றிச் சொன்னதில் தான் பேராசிரியரின் கம்பீரம் இருக்கிறது.

“ஒரே தத்துவம்! ஒரே தலைவர்! ஒரே பேராசிரியர்!” - ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

இரண்டு முறை மேயர், ஆறு முறை சட்டமன்ற உறுப்பினர், துணை முதல்வர், அமைச்சர் என்று வளர்ந்த பிறகு, ‘மு.க.ஸ்டாலின் தான் தலைமைக்கான தகுதி உள்ளவர்’ என்று சொல்வது பெரிதல்ல. இந்த எந்தப் பதவியும் வருவதற்கு முன்னரே, அவர் இளைஞரணிச் செயலாளராக இருக்கும்போதே, ‘அன்பகத்தை’ ஒப்படைத்துவிட்டு, ‘’தமிழ்நாட்டைப்பற்றி எண்ணி எண்ணி, பல நேரங்களில் வேதனை அடைகின்ற எனக்கோ கலைஞருக்கோ அடுத்த தலைமுறைக்கு ஸ்டாலினைப் போல் நூற்றுக்கணக்கானவர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

கலைஞருடைய ஆற்றல் ஸ்டாலினுடைய செயலிலே அரும்பி நிற்பதை இன்றைய தினம் பார்க்கிறேன்” என்று 30 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னார் பேராசிரியர். தளபதி ஸ்டாலின், முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆனது 2018ல். ஆனால் 1988ல் அதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் பேராசிரியர். இந்த தீர்க்கதரிசனத்தில் தான் பேராசிரியரின் பெருமை அடங்கி இருக்கிறது.

“ஒரே தத்துவம்! ஒரே தலைவர்! ஒரே பேராசிரியர்!” - ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

ஒரே ஒரு தத்துவம், அதுதான் திராவிட அரசியல். அந்த திராவிட அரசியலை முன்னெடுக்கும் தலைவர். அது யாரென்று முன்கூட்டியே கணித்து தன்னை ஒப்புவித்துக் கொண்டது மட்டுமல்லாமல், அதனை உள்ளன்போடு ஏற்றுக் கொண்டவர் பேராசிரியர். தத்துவத்திலும், தலைமையிடத்திலும் சந்தேகம் இல்லை. சலனமும் இல்லை, சஞ்சலமும் இல்லை. கலைஞரை விட பேராசிரியர் சீனியர் தான். ஆனால், தலைமைக்கான தகுதி தன்னை விட கலைஞருக்குத் தான் உண்டு என்பதை வெளிப்படையாகச் சொன்னவர் பேராசிரியர்.

''கலைஞர் மீது முழு நம்பிக்கை வைத்து அவரை டிரைவர் இருக்கையில் உட்கார வைத்தபிறகு, நாம் நிம்மதியாகப் பயணம் செய்ய வேண்டுமே தவிர, ஆள் ஆளுக்கு ஸ்டீரிங்கை திருப்பக் கூடாது" என்று பேராசிரியர் சொன்னதாகச் சொல்வார்கள். உண்மையான தலைமைக்கு உண்மையாக இருந்த உருவம் பேராசிரியர்.

கடந்த ஒருநூறு ஆண்டு திராவிட இயக்கத்துக்கு நான்கு தூண்கள். சுயமரியாதை என்ற தத்துவத்தின் அடையாளம் தந்தை பெரியார் என்றால், இன எழுச்சிக்கு பேரறிஞர் அண்ணா என்றால், மொழி உணர்ச்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் என்றால், தலைமைக்கு உண்மையாக இருப்பதற்கு உதாரணமாக பேராசிரியரைச் சொல்லலாம்.

ஏனென்றால் அவர் பிறக்கும் போதே திராவிட இயக்கச் சாதியில் பிறந்தவர். அவரால் சாதி மாற முடியாது!

- ப.திருமாவேலன்

நன்றி: முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories