உணர்வோசை

பிப்ரவரி - 21 : ‘உலக தாய்மொழி நாள்’ - ஏன் இந்நாளைக் கொண்டாட வேண்டும்?

நம் தாய்மொழி என்பது நம்முடைய கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்ல, அது நம் பண்பாட்டு அடையாளம்.

பிப்ரவரி - 21 : ‘உலக தாய்மொழி நாள்’ - ஏன் இந்நாளைக் கொண்டாட வேண்டும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தாயின் வழியாக உலகை அறியும் குழந்தை தாயின் குரலை வைத்தே மொழியைக் கற்கிறது. அதுவே முதல்மொழி. அதுவே குழந்தையின் தாய்மொழி. முதிர்ச்சியான நல்லறிவு பெற தாய்மொழியில் சிந்தித்தலே சிறந்தது என ஆய்வுகளும், அறிஞர்களும் தேர்ந்து தெளிந்த உண்மையை உலகிற்கு உரைத்துள்ளனர். அந்த வகையில் நம் தாய்மொழி நம் சிந்தனைக்கும், சிறப்பியல்புகளுக்கும் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது.

உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியே உள்ளது. ரஷ்யா, ஜெர்மனி, பின்லாந்து, கியூபா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தாய்மொழிக் கல்வியில் சிறந்து விளங்குகின்றன. இந்த நாடுகளில் இருந்து சிறந்த இலக்கியங்கள் தோன்றியிருப்பதே அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

உலகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அதில் வெறும் 4 சதவீத மொழிகளைத்தான் உலக மக்கள் தொகையில் 97 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். மீதம் 96 சதவீத மொழிகளை வெறும் 3 சதவீத மக்களே பேசுகின்றனர். பழங்குடியின மக்கள் பேசும் மொழிக்கு வரிவடிவம் கிடையாது.

மரியே ஸ்மித் ஜோனெஸ்
மரியே ஸ்மித் ஜோனெஸ்

அலாஸ்கா பழங்குடி மொழிகளுள் ஒன்றான 'ஏயக்' மொழியைப் பேசத்தெரிந்த உலகின் கடைசி நபராக இருந்த மரியே ஸ்மித் ஜோனெஸ் என்ற 89 வயது மூதாட்டி கடந்த 2008 ம் ஆண்டு ஜனவரி 21 ம் தேதி காலமானார். அலாஸ்கா பழங்குடியின மக்கள் கதறித் துடித்தனர். மரியாவுடன் ‘ஏய்க்’ மொழியும் இன்று மறைந்துவிட்டது. இப்போது ‘ஏய்க்’ மொழி பேச உலகில் யாரும் இல்லை.

சரி. உலக தாய்மொழி நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது? ஏன் கொண்டாடப்படுகிறது என்று பார்த்தால் இதன் பின்னணியில் உன்னதமான தியாகமும், மெய்சிலிர்க்க வைக்கும் தாய்மொழியின் மீதான பற்றும் உள்ளதை அறியலாம்.

மொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் (ஷாகித் மினார்)
மொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் (ஷாகித் மினார்)

கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசம், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டம் அது. அப்போது இருநாட்டுக்கும் இடையே மொழி பிரச்னை உருவானது. இதனால் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கிழக்கு பாகிஸ்தானில் மாணவர்கள் புரட்சி வெடித்தது. புரட்சியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. இதனால் பல மாணவர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான்-வங்கதேசம் என்ற இரு நாடுகள் பிரிய இந்த மொழிப்போரே முக்கியக் காரணமாக அமைந்தது.

அதன்பின்னர் கனடா நாட்டில் வசித்து வந்த வங்காளி ரஃபிகுல் இஸ்லாம் என்பவர் 1998ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் கோஃபி அன்னானுக்கு எழுதிய கடிதத்தின் விளைவாகவே தாய்மொழி தினம் உருவாக்கப்பட்டது.

வங்கதேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலும் மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பன்மொழிவழிக் கல்விக்காகவும் ஐ.நா-வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பிப்ரவரி 21-ஐ சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது. இதன்தொடர்ச்சியாக ஒவ்வொரு பிப்ரவரி 21ஆம் தேதியும் உலகநாடுகளால் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுதான் உலக தாய்மொழி நாள் வரலாறு.

பிப்ரவரி - 21 : ‘உலக தாய்மொழி நாள்’ - ஏன் இந்நாளைக் கொண்டாட வேண்டும்?

இந்த நேரத்தில் தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான தகவல் இணையவெளியில் உலா வருகிறது. உலக மொழிகளில் இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழி சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதே அது.

சமீபத்தில் சர்வதேச அமைப்பான கூகிள் மற்றும் விக்கிப்பீடியாவின் கூட்டு முயற்சியில் இந்திய அளவில் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த அனைத்து மொழி விக்கிப்பீடியக் கட்டுரைப்போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது நம் தாய்மொழியின் வளமையைக் காட்டுகிறது.

பிப்ரவரி - 21 : ‘உலக தாய்மொழி நாள்’ - ஏன் இந்நாளைக் கொண்டாட வேண்டும்?

தமிழகத்தில் நம் தாய்மொழிக்கு எத்தனையோ முறை இன்னல் வந்த போதும், இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும் நாம் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாகவும், சிந்திய ரத்தத்தின், உயிர்த் தியாகத்தின் விளைவாகவும் இன்றளவும் நம் தாய்மொழியாம் தமிழ் செம்மொழியாக பீடு நடை போடுகிறது.

“தமிழை இகழ்ந்தவனை தாய்தடுத்தாலும் விடேன்...” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தாய்மொழி காக்க கொண்ட உறுதியும், “தேடி வந்த இந்திப் பெண்ணே.. கேள்!. நீ நாடி வந்த வந்த கோழை நாடு இதுவல்லவே” என்றுரைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் சங்கநாதமும் நம் தாய்மொழியை காத்ததை மறக்க முடியுமா?!

1937-ல் சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவிவகித்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையை 1938 ஏப்ரல் 21 அன்று பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இந்த ஆணைக்கு எதிராகவும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். 1939-ல் இந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடராஜன், தாளமுத்து ஆகிய இருவர் உயிரை இழந்தனர். பலர், தாக்குதலுக்குள்ளாகினர். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

நமது தாய்மொழியாம் தமிழைக் காக்க அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ல் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே விளங்கும் என்பதை எதிர்த்தது. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலம் இருக்கும் என்றும், அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதையொட்டியே 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதேபோல், மயிலாடுதுறை கல்லூரி மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். இதுபோக, இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி - 21 : ‘உலக தாய்மொழி நாள்’ - ஏன் இந்நாளைக் கொண்டாட வேண்டும்?

1968-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது, “இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படும்” என உறுதியளித்தார். இதனாலேயே அடுத்து 1969-ல் முதல்வர் பொறுப்புக்கு வந்த முத்தமிழறிஞர் கலைஞர், “கல்லூரிக் கல்விவரை பயிற்று மொழி தமிழ்" என்று அறிவித்தார். கோவை அரசுக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ்ப் பயிற்று மொழி என்பது முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது.

ஆக, தாய்மொழியை காக்க வீரம்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த நம் முன்னோர்கள் வழியில் மொழிகாக்க முன்நிற்பது நம் கடமைதானே!

நம் தாய்மொழி என்பது நம்முடைய கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்ல, அது நம் பண்பாட்டு அடையாளம். நம் கலாச்சாரத்தின் குறியீடு. உலக தாய்மொழி நாளில் இதனை உணர்வோம்!

Related Stories

Related Stories