உணர்வோசை

குடியுரிமை மறுக்கப்படும் தேசத்தில் பெண்கள் சொத்துரிமைக்காக போராடும் பழங்குடியின போராளி!

இந்தியாவின் மலை தேசமான இமாச்சலப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்கள் சொத்துரிமைக்காக இன்னமும் போராடி வருகின்றனர்.

குடியுரிமை மறுக்கப்படும் தேசத்தில் பெண்கள் சொத்துரிமைக்காக போராடும் பழங்குடியின போராளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

"கண்ணுக்குள் பாவைபோல் உருண்டிருக்கும் உள்ளம் - கைம் பெண்ணுக்கு இருப்பதையும் உணர்ந்திடுவாய்" என்று அவர்களின் வலியை உணர்த்தினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதோடு வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் அவர்களை விதவை என்ற சொல்லால் அழைக்கும்போது அந்தச் சொல்லில் கூட பொட்டு இல்லை எனக் கருதி அந்த சொல்லுக்கு மாற்றாக இரு திலகங்கள் இடம்பெறும் வகையில் கைம்பெண் என்று அழைக்கத் தொடங்கினார்.

ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு என்பதை உணர்த்திய அவர் பெண்களின் மறுமணத்திற்கு பெரிதும் ஆதரவளித்தார். இதற்காக அவர் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் இந்தியாவில் தமிழகத்தில் முதன்முதலாக பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆண்களுக்கு இணையான உரிமையை குடும்பத்திலும் பெண்களால் பெற முடிந்தது.

ஆனால், இமாச்சலப் பிரதேச பழங்குடி பெண்களுக்கு சொத்துரிமை இன்றுவரை இல்லை. இதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள ரிப்பா என்ற மலை கிராமத்தில் 67 வயதான மஞ்சரி, சொத்துரிமை போராட்டத்தில் பழங்குடிப் பெண்களின் குரலாக மாறியுள்ளார்.

பழங்குடியின பெண்களுக்கு ‘தா ஜிண்டகி’ முறையின்படி சொத்துரிமை உண்டு. ஆனால், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் பயன்படுத்தலாம், இருப்பினும் அதை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ உரிமை இல்லை.

குடியுரிமை மறுக்கப்படும் தேசத்தில் பெண்கள் சொத்துரிமைக்காக போராடும் பழங்குடியின போராளி!

கின்னார், சம்பா மற்றும் லஹால் ஸ்பிட்டி மாவட்டங்களில் குடும்பச் சொத்துக்களுக்கு பழங்குடியின பெண்கள் உரிமை கோர முடியாது. இது 93 ஆண்டு பழமையான வாஜிப் உல் உர்ஜ் என்ற வழக்கமான சட்டத்தின் மரபு ஆகும், இது ஆண்களுக்கு மட்டுமே மூதாதையரின் சொத்தை பெற அனுமதிக்கிறது. மேலும் விதவைகளை ஓரங்கட்டவும் செய்கிறது.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்களுக்கு இன்னும் சொத்துரிமையைப் பெற உரிமை இல்லை. இதற்காக குரல் கொடுக்கத் தொடங்கியவர்தான் மஞ்சரி.

1952ம் ஆண்டு பிறந்த மஞ்சரி, தாயாரால் வளர்க்கப்பட்டவர். அவரது சமூகப்பணிகள் குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார். “ஆரம்பத்திலிருந்தே, என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். அந்த நாளில், இருந்தவர்களில் அவர் சிறந்த படிப்பாளி. டாங்க்ரி மற்றும் உருது மொழி தெரிந்தவர். அவரால்தான் சமூகப் பணிகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன்,” என்கிறார்.

தொலைதூரக் கல்வி மூலம் கல்லூரிப் பட்டம் பெற்ற மஞ்சரி, இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியை பார்த்து சமூக பணிக்கு வந்ததாக கூறுகிறார்.

மஞ்சரிக்கு 23 வயதாக இருந்தபோது, ​​தனது கிராமத்திலும், இமாச்சலப் பிரதேசத்திலும் முதல் பெண் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். "நிறைய ஆண்கள் இருந்தபோது ஒரு பெண்ணை ஏன் தேர்வு செய்யவேண்டும் என்று மக்கள் சொன்னார்கள்? நான் வென்றபோது அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்” என்கிறார் மஞ்சரி.

தன்னுடைய சமூகப்பணி குறித்து அவர் மேலும் கூறுகையில், கின்னாரில் பெண்களின் நிலை எப்போதும் சமமற்றது. பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக 1989ல் மஹிலா கல்யாண் பரிஷத்தை (எம்.கே.பி) நிறுவினேன். எல்லா பெண்களும் நிதி ரீதியாக நலமாக இல்லை. குடும்பச் சொத்துக்களை வைத்திருப்பது தங்களின் பிறப்புரிமை என்று ஆண்கள் நினைக்கிறார்கள்.

குடியுரிமை மறுக்கப்படும் தேசத்தில் பெண்கள் சொத்துரிமைக்காக போராடும் பழங்குடியின போராளி!

இன்று, “அரசாங்கம் கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குகிறது, ஆனால் இவை பெயரளவு மற்றும் உயிர்வாழ்வதற்கு போதுமானதாக இல்லை. இந்த நாட்களில், எங்கள் அமைப்பு மூலம் நாங்கள் பெண்களுக்கு உதவுகிறோம். விதவைத் தாய்மார்கள் முதுமையில், அவர்கள் ஒரு சுமையாகக் கருதப்படும்போது அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், அவர்கள் கவனிக்கப்படுவதில்லை. ”

மாவட்டம் முழுதும் பரவியுள்ள எங்கள் அமைப்பினர், பெண்களின் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுகிறார்கள். சொத்துரிமைக்காக கடந்த காலங்களில் கையெழுத்து இயக்கங்கள் நடத்தியுள்ளோம். இதுதொடர்பான மனுக்களை ஆட்சியாளர்களிடம் வழங்கியுள்ளோம்.

உள்ளூர் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையிலிருந்து விலகிவிட்டனர், மேலும் பெண்களின் சொத்து உரிமைகளுக்கு ஆதரவாக ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்கிறார்.

பழங்குடி மக்களுக்காக உழைக்கும் மஞ்சரிக்கு ஆதரவாக அவருடைய குடும்பத்தினர், அவருடைய சகோதரர்கள் எப்போதும் உதவியாக இருக்கின்றனர். உள்ளூர் ஆண்கள் மஞ்சரிக்கு பயப்படுகிறார்கள். "ஆண்கள் தங்கள் சொத்துகளை பெண்களுக்கு இழக்க நேரிடும்”என்பதால் அப்பகுதி ஆண்களுக்கு மஞ்சரி சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார்.

banner

Related Stories

Related Stories