உணர்வோசை

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

மகாத்மா காந்தி தமிழ்நாட்டிற்கு இருபது முறை வருகை புரிந்துள்ளார். தமிழகத்தில்தான் அவர் அரைநிர்வாண பக்கிரியானார். தமிழ்நாட்டிற்கும் காந்திக்கும் உள்ள தொடர்புக்கு எல்லையே இல்லை.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் மீது கொண்ட மரியாதை காரணமாக 120 நாடுகளில் அவரது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. 70 நாடுகளில் காந்திக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் 40 இடங்களில் காந்திக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய தேசத்தின் தந்தையாக காந்தி இருந்தாலும், அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் நேசித்தார். ‘நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே’ என்று வருந்தியவர். தமிழ் மொழியின் இலக்கியங்களையும் திருக்குறளையும் படிப்பதற்காக தமிழ் மொழி ஞானம் தனக்கு இல்லையே என்று ஏங்கியவர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழைக் கற்றவர்.

தமிழ் கற்றுத்தர ஒருவரை தனது ஆசிரமத்தில் வைத்திருந்தவர். காந்தி இத்தகைய பற்று, பாசத்தை வேறு எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழி மீதும் வைத்திருந்ததில்லை. தமிழ்நாட்டையும், தமிழையும் அவர் அத்தனை நேசித்தார்.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டில் காந்தி தடம் பதித்துள்ளார். அவர் ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் அவரை மகானாக தரிசித்தார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். வாழ்த்து மடல்கள் குவிந்தன. கதருக்காகவா, தீண்டாமைக்கு எதிராகவா... எதற்கு நிதி கேட்டாலும் மறுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் தமிழர்கள்.

அவர் சென்னை வந்தபோது, மாணவர்கள் அளித்த பெரும் திரளான வரவேற்பில் கலந்துகொண்டு, அவர்களிடம் “வெறும் பேச்சில் முழுகிவிடாமல், செயலிலும் ஈடுபடுங்கள், தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபடுங்கள்”என்று கேட்டுக்கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில். “தீண்டாமை ஒழிப்பை எதிர்க்கும் வைதீகர்கள், சாஸ்திரங்களின் உண்மைக் கருத்தை உணர்ந்தவர்கள் அல்லர். பொதுமக்களின் சார்பாகப் பேசவும் அவர்களுக்கு உரிமை கிடையாது” என்று அழுத்தமாகக் கூறினார்.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

மைலாப்பூர் அருகேயுள்ள பல்லாக்கு மணியம், பூந்தோட்டம், தேனாம்பேட்டை, கண்ணப்பர் வாசகசாலை, செம்பியம், வரதராஜபுரம் என்கிற நரியங்காடு, ஜார்ஜ்டவுன், பெரியமேடு, அருந்தவபுரம் என்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அரிசன சேவா நிதியை பெற்று வந்தார். பெண்களிடம் தங்க வளையல்களை கேட்டுப் பெற்றார்.

ரெங்கையா நாயுடு என்பவர் ஒரு வைர மோதிரத்தை அளித்தார். பணம், தங்க வளையல்கள், வைர மோதிரங்கள் - இவைகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார். ரெங்கையா நாயுடு வைர மோதிரம் கொடுத்தபிறகு, அவருடைய சிறிய பெண், மகாத்மா காந்தியிடம் தன்னுடைய தங்க வளையல்களைக் கழட்டிக் கொடுத்தார்.

உடனே காந்தி, “உன்னுடைய தங்க சங்கிலியையும் தருவாயா?”என்று கேட்டு அதனையும் பெற்றுக் கொண்டார். இவ்வாறு பெற்ற அத்தனை நகைகளையும் அங்கேயே ஏலத்தில் விட்டு அவற்றைப் பணமாகவும் மாற்றிக் கொண்டார்.

1921-ல் மதுரைக்கு ரயிலில் வந்தபோது சோழவந்தான் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை ஜன்னல் வழியாகப் பார்த்தார் காந்தி. நாட்டின் சாதாரண மக்கள் முழு உடை அணிய வசதியில்லாதபோது, தான் மட்டும் எப்படி முழு உடை அணியலாம் என்ற கேள்வி காந்திக்கு எழுந்தது.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

அதன் காரணமாக இனி சாதாரண மக்களைப் போலவே உடை அணிவது என்ற முடிவை காந்தி எடுத்தார். மதுரையில் தங்கியிருந்த காலத்திலேயே இந்த முடிவை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அப்படி மாறிய அவருடைய உடை அணியும் வழக்கம் அவருடைய வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்தது. இது காந்திஜி தமிழ்நாட்டில் இருந்து பெற்றுக் கொண்ட பெரிய பாடம்.

திருச்சி நகரின் முக்கிய அடையாளம் ‘காந்தி மார்கெட்’. 1927-ல் இந்தச் சந்தை விரிவுபடுத்தப்பட்டபோது, திருச்சி நகராட்சித் தலைவராக இருந்தவர் ரத்னவேல். அவருடைய அழைப்பின் பேரில் இந்தச் சந்தையைத் திறந்து வைத்தவர் மகாத்மா காந்திதான்.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

இந்தச் சந்தையின் முகப்புப் பகுதியில் உள்ள காந்தியின் சிலையைப் பிற்காலத்தில் ராஜாஜி திறந்து வைத்தார். திருச்சி மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியச் சந்தைகள், திடல்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு எல்லாம் காந்தி சென்றிருக்கிறார்.

தலித் மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி 1934-ல் தமிழகத்தில் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது திண்டுக்கல் கோட்டைக்குளம் சாலையில் உள்ள திடலில் காந்தி பேசினார். பிற்காலத்தில் ‘காந்தி மைதானம்’ என அழைக்கப்படத் தொடங்கிய அந்த இடத்தில் நகராட்சி காய்கறிச் சந்தை உருவானது. காந்தி பேசிய மேடையும் அந்தக் காய்கறிச் சந்தையின் ஒரு பகுதியாகிவிட்டது.

அதே ஆண்டில் குன்னூர் நடுவட்டம் பகுதிக்கு காந்தி வந்து பேசிச் சென்றார். அந்தப் பகுதியிலேயே நடுவட்டம் பேருந்து நிலையம் தற்போது அமைந்துள்ளது. இப்படித் தமிழகத்தின் பல்வேறு ஊர்களும் காந்தி கால்தடம் பட்ட இடங்களும் அவருடைய நினைவை இன்றும் போற்றி வருகின்றன.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

1937ம் ஆண்டு சென்னையிலுள்ள இந்தி பிரச்சார சபாவிற்கு வருகை புரிந்த மகாத்மா காந்தி, ‘‘எனக்கு தென்னிந்திய மொழிகள் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதில்லை. தென்னாப்ரிக்க சிறை வாழ்க்கையின்போது, தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஜி.யு.போப்பினுடைய தமிழ் கையேடு என்னை மிகவும் கவர்ந்தது. சிறையில் இருந்து விடுதலை பெற்றதும் தமிழ் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது’’ எனத் தமிழ் மொழி மீது தமக்கிருந்த ஆசையை வெளியிட்டார்.

தென்னாப்ரிக்காவில், ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கிய காந்தியடிகள் அதை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட்டார். தமிழ் மீதும், தமிழர் மீதும் காந்திக்கு மிகுந்த மதிப்பும், அன்பும் இருந்ததை இது காட்டுகிறது.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

சென்னையில் 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு காந்தியடிகள் விடுத்த செய்தியில், ‘எனது தமிழறிவு சொற்பமே. ஆயினும் நான் தமிழின் அழகையும் வளத்தையும் அந்த அறிவிலும் உணருகிறேன். தமிழை அலட்சியம் செய்வது ஒரு பெருங்குற்றம் என்பது என்னுடைய அபிப்பிராயம்’ என்று தமிழ் மீதான தமது ஈடுபாட்டைக் குறிப்பிட்டார் (மணிக்கொடி 24.12.1933).

திருக்குறள், கம்ப ராமாயணம் போன்றவற்றின் உயர்வை உணர்ந்திருந்த அவர் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஓய்வு கிடைத்தால் தமிழ்த் தாத்தா உ.வே.சா-விடம் தமிழ் படிக்க ஆசை என ஒருமுறை காந்தி கூறியிருக்கிறார். தம்மைச் சந்தித்த பாரதி விடைபெற்றதும், ‘இவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்று ராஜாஜி உள்ளிட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்ல, காந்தி தமிழ்நாட்டின் சம்பந்தி என்பது உங்களுக்குத் தெரியுமா? . காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி, ராஜாஜியின் மகள் லட்சுமியை காதலித்து மணந்தவர். இப்படித்தான் காந்தி தமிழ்நாட்டின் சம்பந்தி ஆனார்.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

அண்ணல் காந்தியின் தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவுச் சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.

“சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம்” : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

ஈரோட்டிலுள்ள வ.உ.சி. பூங்கா அமைந்துள்ள இடத்திற்குக் காந்தி வருகை புரிந்ததன் அடையாளமாக அங்கு காந்தியின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 1927ஆம் ஆண்டு காந்தி உயிரோடு இருக்கும்போது அமைக்கப்பட்ட அந்தச் சிலையை வைஸ்கவுண்ட் கோஷன் என்ற வெள்ளைக்கார ஆளுநர் திறந்து வைத்தார்.

இப்படியாக, மகாத்மாகாந்தி தமிழகத்தில் இருந்து கற்றதும், பெற்றதும் ஏராளம்.

banner

Related Stories

Related Stories