உணர்வோசை

மே தின வரலாறு நமக்கு சொல்வது என்ன? : தொழிலாளர் தின சிறப்பு பகிர்வு !

‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்கிற வாசகம் சொல்லப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த தினம் குறித்து மார்க்ஸ், பெரியார், அம்பேத்கரின் பார்வை என்னவாக இருந்தது ?

மே தின வரலாறு நமக்கு சொல்வது என்ன? : தொழிலாளர் தின சிறப்பு பகிர்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பிற உயிர்களை போலல்லாமல், நவீன மனிதனாக இன்று நீங்களும் நானும் ஏனையோரும் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வதற்கு அடிப்படையான காரணம் மனித உழைப்பு. இதுவரையிலுமான மனிதக்கூட்டம் அவை சார்ந்திருந்த சமூகங்களுக்கு அளித்திருக்கும் உழைப்பின் விளைவுகளே நாமனைவரும். ஆனால் அவர்கள் அளித்த உழைப்புக்கான பிரதிபலனை அச்சமூகங்கள் அவர்களுக்கு இயற்கை நியாயப்படி எல்லா காலங்களிலும் வழங்கி வந்திருக்கிறதா என கேட்டால், வரலாறு இல்லை என்றே பதிலளிக்கிறது. அந்த பதிலின் அடையாளமாகவே மே தினம் என்ற ‘சர்வதேச தொழிலாளர்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச தொழிலாளர் தினம் உருவாவதற்கான காரணம் முதலில் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. ஒரு நாளுக்கு பதினைந்து மணி நேரம் வரை ஈவிரக்கமின்றி வேலை வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய தொழிலாளிகள் எட்டு மணி நேர வேலை கேட்டு 1856ம் ஆண்டின் ஏப்ரல் 21ம் தேதி போராட்டம் நடத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் எழுந்த கோரிக்கை அடுத்ததாக அமெரிக்காவிலும் எழுந்தது. 1886ம் ஆண்டில் மே 1ம் தேதி போராட்டம் நடத்த சிகாகோ தொழிலாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இரண்டு நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மக்கள் திரட்சிக்கு அஞ்சுபவைதானே அரசுகள்? வழக்கம் போல் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. 200க்கும் மேலான காவலர்கள் வந்திறங்கி துப்பாக்கிச்சூடும் தடியடியும் நடத்தினர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.

தொழிலாளர்கள் ஓய்ந்துவிடவில்லை. அரச வன்முறையை கண்டித்து மே 4ம் தேதி Hay Market சதுக்கத்தில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்றைய நாள் போராட்டம் அமைதியாகவே நடந்தது. பேச்சுகள் அனைத்தையும் ஒழுங்கு குலையாமல் மக்கள் கவனித்தனர். மேயராக இருந்த கார்டன் ஹேரிசன், ‘வன்முறைக்கு வாய்ப்பேதும் இருக்காது’ என சொல்லி காவல்துறையின் ஒரு பகுதியை வீட்டுக்கு அனுப்ப காவல் தலைமை அதிகாரியிடம் கூறுமளவுக்கு அமைதி இருந்தது. இரவு பத்து மணிக்கு போராட்டம் முடியும் நேரத்தில் மழை பெய்தது. 200 பேர் மழை நிற்பதற்காக சதுக்கத்தில் காத்திருந்தனர். திடீரென 180 காவலர்கள் சதுக்கத்தை சூழ்ந்தனர். மக்கள் அங்கிருந்து கலைய உத்தரவிட்டனர். ‘மழை அடங்கவே காத்திருக்கிறோம்’ என தலைவர்கள் கூறியதற்கு காது கொடுக்கவில்லை. அடுத்த அரச பயங்கரவாதமோ என லேசான பதட்டம் படர்ந்தது. ஆனால் வேறு உத்தி பயன்படுத்தப்பட்டது.

மே தின வரலாறு நமக்கு சொல்வது என்ன? : தொழிலாளர் தின சிறப்பு பகிர்வு !

திடுமென எங்கிருந்தோ ஒரு குண்டு காவலர்கள் பக்கம் வந்து விழுந்து வெடித்தது. ஒரு காவலர் பலியானார். எங்கிருந்து குண்டு வந்தது என்றெல்லாம் ஆராயாமல் காவலர்கள் சுடத் தொடங்கினார்கள். பதினைந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கான விசாரணைக்குழுவில் முதலாளிகளும், நிறுவன மேலதிகாரிகளும் இறந்த காவலரின் உறவினர்களும் இருந்தனர். கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சர்வதேச எதிர்ப்புக்கு பிறகு நான்கு பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். இறுதிவரை குண்டு வீசியதற்கான சாட்சி எதுவும் அரசு தரப்பில் அளிக்கப்படவே இல்லை.

எட்டு மணி நேர உழைப்பு நேரம் வேண்டியதற்கு பதிலாக தொழிலாளர்களுக்கு கிடைத்தது தடியடி, காயங்கள், வேலை இழப்பு, மரணம்! 

1891ம் ஆண்டு கூடிய சர்வதேச கம்யூனிச அகிலம் சிகாகோ சம்பவத்தை முன்னிட்டு மே முதல் நாளை சர்வதேச உழைப்பாளிகள் தினமாக அனுசரிக்க முடிவெடுத்தது. சோவியத் யூனியனில் அக்டோபர் புரட்சி முடிந்து, 1917ம் ஆண்டு பாட்டாளி வர்க்க ஆட்சி அமைந்த நான்காவது நாளில் 8 மணி நேர உழைப்பு நேரம் தொழிலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் மே தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது தமிழகத்தில். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923ம் ஆண்டு சென்னையில் மே தின கொண்டாட்டத்தை நடத்தினார். மே தினம் முதன்முதலில் விடுமுறை கண்டது 1957ம் ஆண்டு கேரளாவில்.

மே தின வரலாறு நமக்கு சொல்வது என்ன? : தொழிலாளர் தின சிறப்பு பகிர்வு !

இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், மேம்பாட்டுக்கும் மிக முக்கிய பங்காற்றியவர் அண்ணல் அம்பேத்கர்.

முதல்முறையாக எட்டு மணி நேர உழைப்பு நேரத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது 1942ம் ஆண்டில் அண்ணல்தான். நிறுவனங்களில் கொடுக்கப்படும் மருத்துவ காப்பீடு உங்களுக்கு உதவுகிறதா? காரணம் அண்ணல் அம்பேத்கர்! உங்களுக்கான விடுமுறைகள், அடிப்படை ஊதிய உயர்வு, தொழிலாளர் காப்பு நிதி, தொழிலாளர் சங்கங்கள், பெண்களுக்கான பேறுகால விடுமுறை என பலவற்றுக்கும் அம்பேத்கரே காரணம். அலுவலகங்களில் உங்களுக்கான உரிமை மறுக்கப்பட்டால், போராடும் உரிமை கிடைத்ததும் அம்பேத்கராலேயே !

ஆஸ்திரேலியாவில் தொடங்கிய கோஷம் உலகம் முழுக்க பரவியதற்கு பின் இருக்கும் ஒரே அர்த்தம் உலகம் முழுமையும் தொழிலாளிகள் சுரண்டப்படுகிறார்கள் என்பதும் தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளிகள் உலகளவில் ஒரேவிதமாக கைகோர்த்திருக்கிறார்கள் என்பதும்தான்.

1938ம் ஆண்டு நாசிக்கில் நடந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாட்டில் அம்பேத்கர் பேசுகையில் பின்வரும் விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார்.

மே தின வரலாறு நமக்கு சொல்வது என்ன? : தொழிலாளர் தின சிறப்பு பகிர்வு !

“தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை கொண்டு வருவதற்கு ஒரே வழிதான் உள்ளது. ஒரு தொழிலாளியை இன்னொரு தொழிலாளிக்கு எதிராக நிறுத்தும் சாதியும் மதமும் நீடிக்கும் வழிகளை ஒழிக்க வேண்டும். ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்கு மறுக்கும் உரிமைகளை பெற முடியாது என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். இத்தகைய சமூக வேறுபாடுகள் களையப்பட்டால் மட்டுமே ஒன்றுபட முடியும் என்ற உண்மை தொழிலாளர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.”

தொழிலாளர்களின் விடுதலைக்கு இந்தியாவில் உள்ள தடைகளை பற்றி பேசுகையில் அம்பேத்கர், “இந்த நாட்டின் தொழிலாளர்களுக்கு இரண்டு எதிரிகள் இருக்கின்றன. பார்ப்பனியம், முதலாளித்துவம். பார்ப்பனீயம் என நான் சொல்வது பார்ப்பனர்களை மட்டும் குறிப்பதற்கல்ல. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் மூன்றையும் மறுக்கும் எவருமே பார்ப்பனீய சிந்தை கொண்டவர்கள்தான். பார்ப்பனீயம் குறிப்பிட்ட வர்க்கத்துக்கு மட்டும் உயர்ந்த நிலையை கொடுக்கிறது. பிற வர்க்கங்களுக்கு சமவாய்ப்புகளை மறுக்கிறது. சமூகநீதி மறுப்பதோடு மட்டும் பார்ப்பனீயம் முடிந்துவிடவில்லை. தனி நபர் உரிமைகளையும் அது மறுக்கிறது” என்கிறார்.

மே தின வரலாறு நமக்கு சொல்வது என்ன? : தொழிலாளர் தின சிறப்பு பகிர்வு !

குடிஅரசு பத்திரிகையில் 1935ம் ஆண்டு, பெரியார் எழுதிய மே தின தலையங்கத்தில் முக்கியமான புரிதலை நமக்கு அளிக்கிறார்.

‘இந்தியாவில் தொழிலாளி முதலாளி அல்லது எஜமான் அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான் சூத்திரன் பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கிற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்’

‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற மார்க்ஸ் குரலை இந்திய தொழிலாளர்களும் பெற தடையாக இருப்பவை எவை என பெரியாரும் அம்பேத்கரும் சொல்லியிருக்கும் விஷயங்களையும் சேர்த்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. 

உழைப்பால் உயர்த்தப்பட்ட இவ்வுலகம் உயர்த்தியவர்களுக்கு என்ன செய்திருக்கிறது என கேட்கும் இந்நாளில், நம் உழைப்பாளிகளை இங்கு ஒடுக்கி வைத்திருப்பது எது என்பதை சிந்திக்க நாமும் தொடங்குவோம்.

சர்வதேச தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் !

நன்றி :

ஓவியம் :ஹாசிப் கான், விகடன்

Related Stories

Related Stories