
போலி நூல்களை நுழைத்த போலி அரசு!
ஒரு குற்றச்சாட்டு பொதுவெளியில் வைக்கப்படும் போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர் தன் முன் உள்ள கோப்புகளைப் பார்த்து அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை முதலில் ஆராய வேண்டும். முதலமைச்சர் பதவியில் இப்போது இருப்பவருக்கு அது மாதிரியான நடைமுறை எதுவும் தெரியாது. புரியவும் புரியாது என்பதால் வழக்கம் போல் வாய்க்கு வந்ததை அறிக்கை வாந்தி எடுத்தார்.
'பெரியார் அறிவுலகத்தில் ஊழல்' என்பதை நிறுவுவதன் மூலமாக பெரியாரையும், திராவிட மாடல் ஆட்சியையும், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களையும் கொச்சைப்படுத்திவிட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
கோவை பெரியார் அறிவுலகத்தை அக்டோபர் 16 ஆம் தேதியன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்துவிட்டு ஓடி விட்டார் முதலமைச்சர் விஜய். அதன்பிறகு சமூக வலைதளங்களில் இளைஞர்கள், ‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் பாரீர்' என்று பதிவுகள் போடத் தொடங்கினார்கள். ‘இதுதான் திராவிட மாடல், இதுபோன்ற ஒன்றை விஜய் ஆட்சியால் அமைக்க முடியுமா?' என்று கேட்டார்கள்.
நவம்பர் 4 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் பாராட்டு விழா திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எடுக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவாக அது அமைந்தது. அன்றைய தினம் கோவை சென்ற திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியார் அறிவுலகம் சென்று பார்வையிட்டார்.

அப்போது அங்கு கூடியிருந்த மாணவ, மாணவியரும், இளைஞர்களும் அவருக்கு கொடுத்த வரவேற்பு என்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. உற்சாக மிகுதியால் மாணவ, மாணவிகள் பலத்த கையொலி எழுப்பினார்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அனைவரிடமும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடினார். அப்போது நூலகத்தில் படிக்க வந்திருந்த பலரும், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பேட்டிகள் கொடுத்தார்கள். இவற்றை எல்லாம் விஜய்யால் தாங்கிக் கொள்ள முடியுமா?
பழிவாங்கக் காத்திருந்தவருக்கு, இந்த செய்தி வாய்ப்பாக அமைந்தது.
கழக ஆட்சியில் கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்களை வாங்க தேர்வுக் குழு மிகமிகத் தகுதி வாய்ந்தவர்களால் அமைக்கப்பட்டது. 5.11.2025 அரசாணையை பார்த்தாலே தெரியும். அந்த அரசாணையே 34 பக்கம் கொண்டது. எவ்வளவு கவனத்தோடு நூல் தேர்வுக்குழுவை திராவிட மாடல் ஆட்சி அமைத்தது என்பதை அறியலாம்.
இப்போது நூலகத்தில் போலியான நூல்கள் இருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு வந்ததும் இந்தத் துறையைக் கவனிப்பவர் கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்குச் சென்றிருக்க வேண்டும். அங்குள்ள நூல்களில் போலியானவை எவை எனக் கணக்கெடுத்து பிரிக்க வேண்டும். இந்த நூல்களை வழங்கியவர் யார்? தயாரித்தவர் யார்? எழுதியவர் யார்? எனப் பார்த்து முதலில் கைது செய்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட நூலகத்தின் மீது நடவடிக்கையை எடுத்துவிட்டு, வாய் பேச வேண்டும். இது எதையும் முதலமைச்சர் விஜய்யோ, அமைச்சரோ செய்யவில்லை. உடனடியாக, 'அறிவுலகத்தில் ஊழல்' என்று உளறத் தொடங்கி விட்டார்கள். ஏதாவது ஒன்று என்றால் 'தி.மு.க.வின் தவறு' என்று முதலில் சொல்லிவிட வேண்டும்.
இவர்கள் அளவுக்கு மீறி கூவியதற்கு இன்னும் சில காரணங்கள் இருக்கிறது. முந்தைய நாள் 5 ஆம் தேதியன்று ஒரு திருமணத்துக்கு முதலமைச்சர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாகப் போனார். இதை விஜய் ரசிகர்களே சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றினார்கள். அவர்கள் எழுதி இருப்பது அனைத்தையும் இங்கு சொல்ல முடியாது. விஜய் ரசிகர்கள், ரசிகைகள் எழுதியவை அனைத்தும் அப்படி 'புகழ்பெற்ற' வார்த்தைகள். இதை மடைமாற்றம் செய்ய வேண்டும் என்பதும் த.வெ.க.வின் நோக்கம்.
புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு என்ற செய்தி வெளியான அன்று நடிகர் தனுஷின் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா. இதை அமுக்க வேண்டும். இதற்காகத்தான் விஜய் அறிக்கை வெளியிட்டதும். ராஜ்மோகன் கூவியதும். 'திசை திருப்புகிறார்களாம்'. திசை திருப்பி மாட்டிக் கொண்டார்கள் என்பதே உண்மை.
யோக்கியமான அரசாங்கம், போலிப்புத்தகங்களை உருவாக்கிய அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பக உரிமையாளரை கைது செய்திருக்க வேண்டாமா? 5 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இதில் இருந்தே இந்த யோக்கிய சிகாமணிகளின் லீலைகள் தெரியவில்லையா?
‘திராவிட மாடல்’ ஆட்சியில் பரிந்துரைக் குழுவில் இருந்த பலரும், ‘நாங்கள் பரிந்துரைத்த பட்டியலில் இந்த நூல்கள் இல்லை' என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியானால் சர்ச்சைக்குரிய புத்தகங்களை பட்டியலில் இணைத்தது யார்?
'தங்கள் மீது தவறு இல்லை' என்று சொல்லிவிட்டு நூலகத்துறைக்கு பொறுப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரியை எதற்காக இடம் மாற்றம் செய்ய வேண்டும்?
2026 மார்ச்சுக்குப் பிறகு தேர்தல் நடத்தைகள் தொடங்கிவிட்டது. மே 10 ஆம் தேதி முதலமைச்சராக விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டார். இன்று வைக்கப்பட்டுள்ள நூல்களில் தி.மு.க. ஆட்சியில் பிப்ரவரிக்கு முன் வாங்கப்பட்டவை எவை? அதன் பிறகு வாங்கப்பட்டவை எவை? இதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். வெள்ளைப் பேப்பரைக் காட்டிவிட்டு, இதுதான் ஆதாரம் என்றால் நம்புவதற்கு நாடே தற்குறி தேசமாக மாறிவிட்டதா?
தவறான புத்தகம், போலியான தயாரிப்புகளை நீக்கி நடவடிக்கை எடுக்க யாரும் தடுக்கவில்லை. அதைச் செய்யுங்கள். அப்போதுதான் அந்த தவறைச் செய்தவர் யார் என்று தெரியும்.
'திரிஷா விஜய்' என்ற எழுத்தாளர் புத்தகத்தை யார் தேர்ந்தெடுப்பார்கள்? விஜய் பாலு, விஜய ஆதித்தன் என்றெல்லாம் போலி பெயர்களை யார் வைத்து, அரசாங்கத்தின் லாபத்தைப் பெறுவார்கள்? விஜய் பற்றிய ஆங்கில நூலை யார் எழுதி, உள்ளே நுழைப்பார்கள்? சாதாரண தற்குறியே இதற்கான விடையைச் சொல்லி விடும்.
தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்கிறீர்கள். நடைபெற்ற அனைத்தையும் ரத்து செய்கிறீர்கள். துருவித் துருவி ஆராய்ச்சி செய்கிறீர்கள். இந்த ஆறு மாத காலத்தில் அமைச்சர்கள் பலமுறை கோவை நூலகத்தை ஆய்வு செய்துள்ளார்கள். போலியான நூல்களை ஏன் த.வெ.க. ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை? ஏனென்றால் போலியான நூல்களை நுழைத்தவர்களே இவர்கள்தான்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் தி.மு.க. சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. அதனை முறையாக விசாரிக்க இந்த அரசுக்கு யோக்கியதை இருக்கிறதா?






