முரசொலி தலையங்கம்

வெற்றி’ தப்பி ஓடும் திட்டம் : “ஜோசியர் சொல்லி கைதிகளை தப்ப விடுகிறார்களா?” - முரசொலி தாக்கு!

முதலமைச்சர் விஜய், தொடங்கி வைக்காமல் பல திட்டங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. அதில் ஒன்று ‘வெற்றி’ தப்பி ஓடும் திட்டம் என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

வெற்றி’ தப்பி ஓடும் திட்டம் : “ஜோசியர் சொல்லி கைதிகளை தப்ப விடுகிறார்களா?” - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

29.10.2026

வெற்றி தப்பி ஓடும் திட்டம்!

முதலமைச்சர் விஜய், தொடங்கி வைக்காமல் பல திட்டங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. அதில் ஒன்று ‘வெற்றி’ தப்பி ஓடும் திட்டம் ஆகும். மத்திய சிறையில் இருந்து கிளை சிறைகள் வரைக்கும் கைதிகள் சர்வசாதாரணமாகத் தப்பி ஓடுகிறார்கள்.

இதனை ஒரு திட்டமாக அமல் செய்துள்ளார்களா? அல்லது பரிகாரம் என்ற அடிப்படையில் ஆஸ்தான ஜோசியர் சொல்லி தப்ப விடுகிறார்களா? என இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

‘நாம் நமது படங்களின் மூலமாக பல்வேறு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சொன்னார் முதலமைச்சர் விஜய். ஆமாம், அவை பாடத் திட்டத்தில் வைக்க வேண்டிய கருத்துக்கள் தான். ஒரு படத்தில் சிறையில் இருக்கும் விஜய், வலிப்பு வந்ததைப் போல நடிப்பார். காவலர்கள் கதவைத் திறப்பார்கள். அதில் இருந்து விஜய் தப்பிப்பார். இதனால் விழிப்புணர்வு பெற்ற கைதிகள் சிலர் அதே போல தப்பி இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நல்வழி காட்டி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்!

தேனி மாவட்டச் சிறைச்சாலையானது தேக்கம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. 200 கைதிகள் வரை இங்கு வைக்கப்படலாம். ஆனால் 334 கைதிகள் இருக்கிறார்கள். கடந்த 26 ஆம் தேதி இரவு 10.00 மணி அளவில், மூன்றாவது பிளாக்கில் உள்ள ஒரு கைதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சில கைதிகள் கூச்சலிட்டனர். அந்த பிளாக்கில் பாரா காவலராகப் பணியாற்றிய ஸ்டாலின் பிரபு உள்ளே போய் பார்த்துள்ளார். அப்போது அவரைக் கைதிகள் தாக்கி இருக்கிறார்கள். முன் வாசலுக்கு வந்து அங்கு இருந்த காவலர்களையும் தாக்கி சாவியைப் பறித்து கதவைத் திறந்து தப்பித்துவிட்டார்கள். மொத்தம் 17 கைதிகள் தப்பி விட்டார்கள்.

வெற்றி’ தப்பி ஓடும் திட்டம் : “ஜோசியர் சொல்லி கைதிகளை தப்ப விடுகிறார்களா?” - முரசொலி தாக்கு!

சிறைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய சம்பவமாக இதைச் சொல்லலாம். அ.தி.மு.க ஆட்சியில் 1995 ஆகஸ்ட் 15 அன்று 43 கைதிகள் தப்பிச் சென்ற நிகழ்வுதான் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய சிறை நிகழ்வு. வேலூர் கோட்டையில் இருந்த திப்பு மஹால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 43 கைதிகள், 153 அடி நீளமுள்ள சுரங்கப் பாதையைத் தோண்டித் தப்பித்தார்கள். தப்பி ஓடியவர்களில் 21 பேர் மட்டுமே பிடிபட்டனர்.

இந்த சம்பவம் நடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 விசாரணைக் கைதிகள், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக, தேனி மாவட்டச் சிறைச்சாலையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். கைதிகளைப் பிடித்து வருகிறார்கள்.

3-வது பிளாக்கில் உள்ள ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடி உள்ளார். இதை உண்மை என நம்பி சிறப்பு எஸ்.ஐ. மதன்மோகன் மற்றும் சிறைக் காவலர் தங்கபாண்டி ஆகியோர் அறையைத் திறந்து வலிப்பு நிற்பதற்காக சாவிக் கொத்தை மொத்தமாக கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. சிறைகள் எவ்வளவு மெத்தனமாகக் கையாளப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.

கைதிகள் தாக்கியதில் காவலர் தங்கபாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு நான்கு காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தது கைதிகள் எளிதில் தப்பிக்க உதவியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தப்பிச் செல்லும் போது பணியில் இருந்த காவலர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கைதிகள் பறித்துச் சென்றுள்ளனர்.

வெற்றி’ தப்பி ஓடும் திட்டம் : “ஜோசியர் சொல்லி கைதிகளை தப்ப விடுகிறார்களா?” - முரசொலி தாக்கு!

த.வெ.க. ஆட்சியில் கைதிகள் தப்பிப்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. கடந்த ஐந்து மாதத்தில் 50 கைதிகள் பல்வேறு சிறைகளில் இருந்து தப்பி இருக்கிறார்கள்.

* ஜூன் 21 - செங்கல்பட்டு சிறார் கூர் நோக்கு இல்லம் - 5 பேர் தப்பியோட்டம்.

* ஜூலை 1 - தேனி காவல் நிலையம் - ஒருவர் தப்பியோட்டம்

* ஜூலை 2 - பாளையங்கோட்டை மத்திய சிறை - ஒருவர் தப்பியோட்டம்

* ஜூலை 12 - செங்கல்பட்டு சிறார் கூர் நோக்கு இல்லம் - 12 பேர் தப்பி யோட்டம்

* ஜூலை 13, 14 - செங்கல்பட்டு சிறார் கூர் நோக்கு இல்லம் - 11 பேர் தப்பியோட்டம் •ஆகஸ்ட் 10 -கன்னியாகுமரி அரசு மருத்துவமனை - ஒருவர் தப்பியோட்டம்.

* அக்டோபர் 20 - புழல் சிறை - ஒருவர் தப்பியோட்டம்

* அக்டோபர் 21 - புழல் சிறை - ஒருவர் தப்பியோட்டம்

* அக்டோபர் 26 - தேனி மாவட்ட சிறை - 17 பேர் தப்பியோட்டம்

திருவாளர் விஜய் அவர்கள் ஆட்சியின் சிறை சரித்திரம் இது. போதை சரித்திரம் தனி. பாலியல் சரித்திரம் தனி. காவல் நிலையங்களில் ‘சரித்திர பதிவேடு குற்றவாளிகள்' என்று பட்டியல் வைத்திருப்பார்கள். அத்தகைய குற்றவாளிகள் துள்ளிக் குதிக்கும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் தப்பினார்கள் என்ற செய்தி வந்த அன்று சேலம் ஆட்டையாம் பட்டி காவல் நிலையத்தில் இருந்து ரவுடிகள் தப்பி ஓட்டம் என்ற செய்தி வெளியானது. விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட 2 பேர் தப்பி ஓடி இருக்கிறார்கள்.

குழந்தைகள் கடத்தல், - குழந்தைகள் காணாமல் போதல், - சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுதல், - போதைப் பொருட்கள் எளிதில் கிடைத்தல், - செயின் பறித்தல், - பகலில் வெட்டுதல், கைதிகள் தப்பித்தல் - இவை எல்லாம்ஒரு மாநிலம் எந்தளவுக்கு சட்டம் ஒழுங்கில் மிகமிக மோசமாக இருக்கிறது என்பதற்கான அளவுகோல்கள் ஆகும். இந்த அளவுகோல்கள் அனைத்திலும் விஜய் அரசு முன்னணியில் இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு முதலமைச்சர் விஜய் கையில் இருக்கிறது. அவர் காவல் துறை விழாக்களில் கலந்து கொண்டு சல்யூட் வைப்பதுதான் தனது கடமை என்று நினைக்கிறார் போலும்!

சிறைத்துறையைக் கையில் வைத்துள்ளார் மின்வெட்டுத் துறை அமைச்சர் நிர்மல்குமார். அடுத்தவர் துறைக்கு எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு துரை பதில் சொல்வார். ஆனால் தன் கைவசம் இருக்கும் அனைத்துத் துறைகளிலும் ஓட்டை. உதவாக்கரைகளின் ஆட்சியில் நாடே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறிக் கொண்டு இருக்கிறது.

banner

Related Stories

Related Stories