
முரசொலி தலையங்கம் (23-10-2026)
முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்!
பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான – 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த த.வெ.க. நிர்வாகி பூபாலனை மத்திய வருவாய் புலனாய்வு காவல் துறை கைது செய்துள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது முதலமைச்சர் விஜய்யின் கடமை ஆகும்.
கைது செய்யப்பட்டு இருப்பவர் த.வெ.க.வைச் சேர்ந்த நிர்வாகி. எனவே கட்சித் தலைவர் என்ற முறையில் விளக்கம் அளிக்க வேண்டும்.
மாநிலத்தில் காவல் துறையைக் கையில் வைத்திருப்பவர் விஜய். உள்துறை அவர் கையில்தான் இருக்கிறது. அவரது காவல் துறையால் இதுவரை பூபாலனைக் கைது செய்யாதது ஏன்? இதற்கும் விஜய் பொறுப்பேற்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் தடுப்புக்காக அதைச் செய்து விட்டேன், இதைச் செய்து விட்டேன் என்று பீற்றிக் கொண்டு இருந்தாரே விஜய்? அவரது போதைத் தடுப்புக் காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? பூபாலன் த.வெ.க. நிர்வாகி என்பதற்காக அவரைக் காப்பாற்றிக் கொண்டு இருந்ததா? இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டாமா?
பூபாலனை த.வெ.க.வில் சேர்த்து அவருக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியை வாங்கித் தந்தவர் த.வெ.க.வின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன்தான் என்று ஊடகங்கள் எழுதி வருகின்றன. அந்த சுகுமாறன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? தூயசக்தி விஜய் ஏன் மெளனமாக இருக்கிறார்?
25.10.2026 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில், ‘’கடந்த சட்டமன்றத் தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார் பூபாலன். தேர்தலுக்குப் பயன் படுத்துவதற்காகவே புதிதாக உயர்ரக கார் ஒன்றையும் வாங்கினார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் நாகை தொகுதியில் போட்டியிட்ட சுகுமாறனுக்குத் தேர்தல் வேலை பார்த்தவர். குறிப்பிட்ட அளவு செலவுகளையும் கவனித்துக் கொண்டார்’’ என்று த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் சொன்னதாக எழுதி இருக்கிறது. தூயசக்தி கட்சியின் தேர்தல் வேலைகளுக்கு என்ன மாதிரியான பணம் நடமாடி இருக்கிறது என்று தெரிகிறது அல்லவா? இதற்கு விஜய் விளக்கம் அளிக்க வேண்டாமா?
ஆளும் கட்சியின் த.வெ.க. நிர்வாகியாக இருப்பதால் காவல் துறை அதிகாரிகள் பூபாலனுக்கு உதவியாக இருந்திருப்பதும் அம்பலம் ஆகி இருக்கிறது. வேளாங்கண்ணி டி.எஸ்.பி.யின் கார் ஓட்டுநர் சிவா, வேளாங்கண்ணி காவல் நிலைய பெண் காவலர் சங்கீதா ஆகிய இருவரும் இதில் தொடர்புடையவர்கள் என்று ஊடகங்கள் செய்தி போட்ட பிறகு அவர்கள் இருவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளது விஜய்யின் உள்துறை. பணியிட மாற்றம் செய்தால் போதுமா? அதுதான் அவர்களுக்கான தண்டனையா? பணியிட மாற்றம் செய்து, தண்டனை வழங்கிவிட்டதாகக் காட்டி காப்பாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

இலங்கையைச் சேர்ந்தவர் கனடாவில் இருந்து வந்து நாகையில் தங்கி, இங்கிருந்து த.வெ.க. நிர்வாகியிடம் போதைப் பொருளை வாங்கி நாகை வழியாக இலங்கைக்கு கடத்தப் பார்த்துள்ளார். தமிழ்நாட்டின் பாதுகாப்பு எந்தளவுக்கு கேள்விக் குறி ஆகி இருக்கிறது பார்த்தீர்களா?
இராமநாதபுரத்தில் சில மாதங்களுக்கு முன் பிடிபட்ட போதைப் பொருள், இவரால் விற்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் போதை எந்தளவு பரவி இருக்கிறது பார்த்தீர்களா?
போதைக் கும்பலுக்கு இத்தகைய துணிச்சலைக் கொடுத்தது யார்? த.வெ.க. ஆட்சி தானே?
பூபாலனுடன் சேர்ந்து போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய சுகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சுகனின் உறவினர்தான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கார் ஓட்டுநர் சிவா. அப்படியானால் இந்த போதைப் பொருள் கடத்தலே இவர்களுடைய பாதுகாப்புடன்தான் நடந்துள்ளது என்றுதானே சொல்ல முடியும்? காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு பதில் அளிக்க வேண்டாமா?
பூபாலன் நடத்தி வந்த லாட்ஜ் முழுக்க முழுக்க கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விஜய்யின் போதை தடுப்பு போலீசுக்குத் தெரியாதா? மத்திய வருவாய் புலனாய்வு போலீஸாருக்குத் தெரிந்தது, விஜய் போலீசுக்குத் தெரியாமல் போனதா? அல்லது தெரிந்தும் மறைக்கப்பட்டதா? த.வெ.க. நிர்வாகி என்பதற்காக விட்டுவிட்டார்களா?
முதலமைச்சர் விஜய்யுடன் போதைப் பொருள் கடத்தல் மாஃபியா பூபாலன் இருக்கும் படங்கள் வெளியாகி வருகிறதே. இதற்கு விஜய் விளக்கம் அளிக்க வேண்டாமா? அவரைக் கட்சியை விட்டு நீக்கியதால் எல்லாம் சரியாகப் போய்விடுமா?
விஜய் ஆட்சிக்கு வந்த மே மாதம் முதல் இதுவரை எவ்வளவு போதைப் பொருட்கள் இவர்களால் தமிழ்நாட்டுக்குள் வந்ததோ? எவ்வளவு போதைப் பொருள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதோ? த.வெ.க. அரசால் விளக்கம் அளிக்க முடியுமா? ‘எதுவுமே நடக்கவில்லை’ என்று சொல்ல முடியுமா?
நாகை மாவட்டம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? நாகை துறைமுகப் பாதுகாப்பு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? இரண்டுமே த.வெ.க. அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பது உண்மையானால் 135 கிலோ மெத்தபெட்டமைனுக்கு பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டியது முதலமைச்சர் விஜய் தானே?
போதை மருந்தை வெளிப்படையாகப் பயன்படுத்தி, அதனை வீடியோவும் எடுத்து வைத்திருந்த ‘கில்லி’ சரத்குமார் என்பவர் அமைச்சராக இருக்கும் போது நாம் போதை மருந்து கடத்தினால் என்ன தவறு என்று த.வெ.க. நிர்வாகிகள் நினைக்கிறார்களா?
‘சிங்கப் பெண்’ அதிரடிப்படை ஆரம்பித்தார் விஜய். அது முதல் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ஆனது. போதைப் பொருள் தடுப்பு அதிரடிப்படை தொடங்கினார். அது முதல் போதை மருந்து நடமாட்டம் அதிகம் ஆகி உள்ளது. எல்லாமே விளம்பர மாயை. விளம்பர மாஃபியாவாக மட்டுமே இருக்கிறது.






