முரசொலி தலையங்கம்

“வேட்டைக்காடாக மாறும் தமிழ்நாடு; தூய சக்தி ஆட்சி குற்றவாளிகளுக்கு மட்டுமே மகிழ்ச்சி” : முரசொலி தாக்கு!

தமிழகத்தில் போதைப் பொருள் தொடர்பாக 12 ஆயிரத்து 595 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சொல்கிறார்

“வேட்டைக்காடாக மாறும் தமிழ்நாடு; தூய சக்தி ஆட்சி குற்றவாளிகளுக்கு மட்டுமே மகிழ்ச்சி” : முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-10-2026)

போதை நாடாக்கும் த.வெ.க!

விலைவாசி உயர்வில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக ஆக்கினார் முதலமைச்சர் விஜய். பணவீக்கத்தில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக ஆக்கினார் முதலமைச்சர் விஜய். இந்த வரிசையில் போதை மருந்து நடமாட்டத்திலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கி வருகிறார் விஜய்.

அதுவும் போதை மருந்துகளை த.வெ.க. நிர்வாகிகளே துணிச்சலாகக் கடத்தி வருகிறார்கள். விற்கிறார்கள். அவர்களுக்கு என்ன துணிச்சல்? போதை மருந்தை வெளிப்படையாக பயன்படுத்தி, அதனை வீடியோவும் எடுத்து வைத்திருந்த ‘கில்லி’ சரத்குமார் என்பவர் அமைச்சராக இருக்கும் போது நாம் போதை மருந்து கடத்தினால் என்ன தவறு என்று த.வெ.க. நிர்வாகி நினைக்கிறார். பொதுவெளியில் போதை பவுடர் பயன்படுத்திய சரத்குமாரை இன்னமும் அமைச்சராக வைத்துள்ளார் விஜய். அதுதான் போதை மருந்து கடத்தல் துணிச்சலாக நடப்பதற்குக் காரணம்.

135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி பூபாலன் வைத்து இருந்ததாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கைப்பற்றி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.300 கோடியாக இருக்கலாம். போதை மருந்து தடுப்புக்காக தனிப்பிரிவு தொடங்கி இருப்பதாக பீற்றிக் கொண்டார் விஜய். அந்தப் பிரிவு என்ன செய்து கொண்டு இருக்கிறது? த.வெ.க. நிர்வாகிதானே விற்கிறார், விற்கட்டும் என்று விட்டு விட்டதா?

135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த வைத்திருந்தார் த.வெ.க. நிர்வாகி பூபாலன். இந்திய – இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமான கடத்தல் சம்பவத்தில் தொடர்புள்ளவராக இருந்துள்ளார் இந்த த.வெ.க. நிர்வாகி. ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்து, அவர்கள் நாகை த.வெ.க. நிர்வாகி பூபாலன் வீட்டில் வந்து குவிந்தார்கள். அவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். த.வெ.க. நிர்வாகி பூபாலன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சாதாரணமாக பயன்பாட்டுக்கு போதைப் பொருள் வைத்திருப்பது குற்றம். மிகச்சிறு அளவில் அடுத்தவருக்கு கொடுப்பதும் குற்றம். சிறு அளவில் விற்பனை செய்வதும் குற்றம். இவை அனைத்தையும் விட, மிகப்பெரிய அளவில் கடத்தல் செய்வது, கடத்தி வருவது மாபெரும் குற்றம் ஆகும். அதனைத்தான் செய்துள்ளார் விஜய் கட்சி நிர்வாகி.

சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலோடு த.வெ.க. நிர்வாகி தொடர்பு வைத்திருந்தார் என்பது ஒரு பக்கம் என்றால், சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பல் துணிச்சலாக தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வந்துள்ளது என்பதைத்தான் இதில் கவனிக்க வேண்டும். த.வெ.க. ஆட்சியை தனக்கான களமாக சர்வதேச கும்பல் நினைக்கிறது.

கொலை – கொள்ளை – வழிப்பறி – பாலியல் வன்கொடுமைகள் – அரிவாள் வெட்டுகள் – போதை மருந்து நடமாட்டம் – போதை விற்பனை – திருட்டு லாட்டரி விற்பனை – ஆகிய அனைத்து குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகின்றன. சட்டம் ஒழுங்கு கெட்டது என்பதை விட சமூக விரோதிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாறி வருவதுதான் இதுபோன்ற சர்வதேச போதை மருந்து கும்பலுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது.

“வேட்டைக்காடாக மாறும் தமிழ்நாடு; தூய சக்தி ஆட்சி குற்றவாளிகளுக்கு மட்டுமே மகிழ்ச்சி” : முரசொலி தாக்கு!

இதற்கான ஒப்புதல் வாக்குமூலத்தை தமிழ்நாடு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருள் தொடர்பாக 12 ஆயிரத்து 595 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சொல்கிறார். போதை நடமாட்டத்துக்கு இதுவே ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா?

போதை மருந்து விற்பனை செய்ததாக 18 ஆயிரம் பேரைக் கைது செய்துள்ளதாக அவர் சொல்கிறார். இதுவும் ஒப்புதல் வாக்குமூலம்தானே?

23 ஆயிரம் கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சொல்கிறார். இதுவும் ஒப்புதல் வாக்குமூலம்தானே?

10 லட்சத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொல்வதும் ஒப்புதல் வாக்குமூலம்தானே?

‘இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் என்பதை நமக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது’என்று அவர் சொல்லி இருப்பதும் ஒப்புதல் வாக்குமூலம்தானே?

‘கர்நாடகா மாநிலம் நார்த் ஈஸ்ட் மாநிலங்களிலிருந்து அதிகளவில் தமிழகத்திற்குள் நுழைகிறது’என்று அவர் சொல்லி இருப்பதும் ஒப்புதல் வாக்குமூலம்தானே?

‘கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது தற்பொழுது 12 மடங்கு அதிக அளவில் போதைப்பொருள் மாத்திரையை காவல்துறையால் பறிமுதல் செய்துள்ளோம்.’என்று டி.ஜி.பி. சொல்வது ஒப்புதல் வாக்குமூலம் தானே?

போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் ஆகி இருக்கிறது என்பதை டி.ஜி.பி.யே ஒப்புக் கொண்டுள்ளார். அதை த.வெ.க. நிர்வாகிகள் கடத்தி வருகிறார்கள், கடத்திச் செல்கிறார்கள், சர்வதேச போதைக் கும்பல் தமிழ்நாட்டை தங்களது மாநிலமாக்க முயற்சித்து வருகிறது என்பதை நாகை த.வெ.க. நிர்வாகி பூபாலன் கைது மூலமாகத் தெரிய வருகிறது.

தூய சக்தி ஆட்சி, குற்றவாளிகளுக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories