
திருக்குறள் பரப்பும் முயற்சியை முழுமூச்சோடு செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
குறள் வாரம் நிகழ்ச்சிகள் 2026 ஜனவரி திங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு இட்டுள்ளார்.
‘குறள் வாரம்’ என்ற தமிழ் முன்னெடுப்பின் போது திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சி, குறள் சார்ந்த ஓவியப் போட்டி, குறள் ஒப்புவித்தல் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், படத் தொகுப்பு, ஒளிப்படப் போட்டி, திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா, ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இவை நடைபெற இருக்கின்றன. திருக்குறள் சார்ந்த முதல்நிலைத் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு குறள் நாடு ஆக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள். திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் குறள் பரப்பும் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

2021 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக ‘தீராக்காதல் திருக்குறள்’ என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்திட சிறப்பு நிதியாக ரூ.2.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் நிகழ்வாகமாநில அளவில் உள்ள 12 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென திருக்குறள் ‘குறளோவியப் போட்டி’ நடத்தப்பட்டு, 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 356 ஓவியங்கள் தினசரி நாட்காட்டியாக அச்சிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் வரைந்த ஓவியங்களைப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடும் வண்ணம் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சித்திரைப் பொருட்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், ‘குறள் இனிது’ என்ற பெயரில் திருக்குறள் நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளது.
திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முழுமையாக முற்றோதல் செய்யும் மாணவர், மாணவியர்களின் திறமையை ஊக்குவித்துப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு குறள் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 598 பள்ளி மாணாக்கர்களுக்கு குறள் பரிசுத்தொகையாக ரூ.78 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் – தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் மாணவர் ‘திருக்குறள் மாநாடு’ நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 800 மாணவர்கள் பங்கேற்றனர். 200 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அறம்,பொருள், இன்பம் ஆகிய முப்பாலுக்கு தனித்தனியாக மாணவர்களால் வரையப்பட்ட குறள் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. திருப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞரின் ‘குறளோவிய நாட்டிய நாடகம்’ நடைபெற்றது.

2024 டிசம்பர் 31– 2025 சனவரி 1 ஆகிய இருநாட்களும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முதலமைச்சர் அவர்கள் கொண்டாடினார்கள். அதில் உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள்,‘’வள்ளுவம் – என்பது வாழ்வியல் நெறியாக மாற வேண்டும். சமுதாயம் – குறள் சமுதாயமாக மலர வேண்டும். வேற்றுமையின் வேர்களைக் கிள்ளியெறிய வள்ளுவ மருந்தே பொது மருந்தாக ஆகுதல் வேண்டும்.’’– என்று சொன்னார்கள்.
தலைநகர் சென்னையில் வள்ளுவருக்கு மாபெரும் கோட்டம் எழுப்பினார் கலைஞர். அதனை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் சிதைத்தார்கள். அக்கோட்டத்தை மீண்டும் சீரமைத்து எழுப்பி இருக்கிறார் இன்றைய முதலமைச்சர். தினந்தோறும் பல்வேறு விழாக்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில்தான் குறள் வாரம் குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ என்ற நூலை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள்,திருக்குறளை தேசிய நூலாக ஆக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இதனை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றை தலைநகர் டெல்லியில் அமைக்க வேண்டும்என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
‘’குறளை பொறுத்தவரை என்னுடைய கருத்து – ஆரியக் கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும் அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும்”என்றார் தந்தை பெரியார்.‘நமது மதம், குறள் மதம்’என்றார் பெரியார்.
“குறள் வகுப்பறையில் மட்டுமல்லாமல் – உங்கள் இல்லங்களில் மட்டுமல்லாமல் – உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”என்றார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய குறள் அறிவுத் திருவிளக்கை, திக்கெட்டும் பரப்பிடும் பணியை தம் ஒப்பற்றக் கடமையாய்க் கருதிச் செயற்பட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். குறள் பரப்பும் ஆசானாக வலம் வந்தார் கலைஞர். அதனையே தொடர்கிறார் இன்றைய முதலமைச்சர் அவர்கள்.
குறளோவியம் தீட்டிய கலைஞர் வழி ஆட்சியானது, குறளோவிய நாடாக மாநிலத்தை மாற்ற அயராது பாடுபடுகிறது.






