முரசொலி தலையங்கம்

“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!

தலைவர் கலைஞர் வரிகளில் சொல்ல வேண்டுமானால், ‘நீங்கள் நாடி வரும் கோழை உள்ளம் கொண்ட நாடு இது அல்ல' என்று முரசொலி தலையங்கம் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது.

“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

20.11.2025

தமிழ்நாட்டுக்கு ஏன் வருகிறார் மோடி?

தமிழ்நாட்டுக்கு ஏன் வருகிறார் மோடி? தேர்தல் வரப் போகிறது அல்லவா? அதனால் வருகிறார். இனி அடிக்கடி அவரை உள்நாட்டில் பார்க்கலாம்! தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை அவமானப்படுத்துவதுதான் பா.ஜ.க. வின் வழக்கம் ஆகும். சில வாரங்களுக்கு முன்னால் பீகாரில் என்ன பேசினார் பிரதமர் மோடி? ‘“கர்நாடகா, தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களைத் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் பீகார் மக்கள் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்தகைய தலைவர்களை அழைத்து வந்து பீகாரில் வாக்கு கேட்கிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார். இதனை விட வன்மம் கலந்த வார்த்தை இருக்க முடியுமா? இந்தியப் பிரதமர் பேசும் அழகா இது? அவர் வகிக்கும் பதவிக்கு இது தகுதியான பேச்சா? பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்தில், எப்போது தாக்கப்பட்டார்கள் என்று சொல்ல முடியுமா மோடியால்?

அங்கே அவரைக் கொல்கிறார்கள், இங்கே இவரை அடிக்கிறார்கள் என்று ஏதாவது பீதியைக் கிளப்பி ஓட்டுத் திருட்டு செய்ய வேண்டும் என்பதைத் தவிர இவர்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. 'தமிழ்நாட்டில் பீகாரிகளை அடிக்கிறார்கள். அந்த தமிழ்நாட்டுத் தலைவர்களோடு தேஜஸ்வீ சேர்ந்துள்ளார். எனவே தேஜஸ்வீக்கு வாக்களிக்காதீர்கள்' என்பதுதான் பிரதமர் நிலைநாட்ட நினைக்கும் கெட்ட எண்ணம் ஆகும்.

இதனை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை விட, பீகார் மக்களும் ஏற்க வில்லை என்பதன் அடையாளம்தான் பா.ஜ.க.வை விட தேஜஸ்வீ கட்சி அதிகமான வாக்குகளை வாங்கி இருப்பது ஆகும்.

பா.ஜ.க. கூட்டணியில் அதிகபட்சமாக பா.ஜ.க. 29.98 விழுக்காடு வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. ஆனால் 'மகாகத்பந்தன்' கூட்டணியில் அதிகபட்சமாக தேஜஸ்வீயின் ஆர்.ஜே.டி. கட்சி 22.96 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே மோடியின் வாதங்களை பீகார் மக்களே ஏற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டுக்கு வந்து சொல்வாரா பிரதமர் மோடி?” என்று கேட்டார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின். சொல்ல பிரதமருக்கு தைரியம் இருக்காது. இங்கு வந்ததும் திருக்குறள் சொல்வார்கள். தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுவார்கள். தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் அவமானப் படுத்துவார்கள்.

“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!

1. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘தமிழர்கள் நாகரிகமற்றவர்கள்' என்றார்.( - 2025 மார்ச்.) பின்னர் அவரே மன்னிப்புக் கேட்டார்.

2. ஒடிசா முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை பா.ஜ.க. மோசமாக விமர்சனம் செய்தது.

3. "தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” என்றார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. (- 2024 மே.)

4. "ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது” என சொல்லி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல வர்ணித்தார் பிரதமர் மோடி (- 2024 மே.)

5. பாண்டியனை போல ஒருவரைச் சித்தரித்து, தமிழரைப் போல வேட்டி சட்டை அணிவித்து, வாழை இலையில் பழைய சோறு வைப்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வீடியோ வெளியிட்டது.

6. தங்கள் மொழியில் டி.வி. பார்த்து கொண்டிருக்கும் வீட்டிற்குள் நுழையும் பாண்டியன் போன்ற தோற்றம் கொண்டவர், ரிமோட்டை பறித்து தமிழ் சேனலை மாற்றுவது போலவும் அவதூறு வீடியோ வெளியிட்டு தமிழர்களை பா.ஜ.க. கேவலப்படுத்தியது.

7. 2022 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியை புறந்தள்ளினார்கள். இந்த ஊர்திக்கு இடமில்லை என்று மறுத்தார்கள்.

8. "தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள்’” - என்று ஒன்றிய அமைச்சர் ஷோபா பேசினார். (-2024 மார்ச்.) பின்னர் மன்னிப்பு கேட்டார். என்றார் பொன்.ராதாகிருஷ்ணன் (- 2019 செப்டம்பர்.)

9. "தமிழர்கள் நன்றி மறந்தவர்கள். மோடி தமிழை புகழ்ந்தபோது அதைக்கொண்டாடவில்லை”

10. கொரோனா 2-ஆவது அலையின் போது தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல், சென்னையில் உற்பத்தி செய்யப்பட்ட 45 டன் ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் அனுப்பப்பட்டது. (2021 ஏப்ரல்).

11. தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்படுவது இல்லை.

12. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இருப்பது இல்லை.

13. மூன்று இயற்கைப் பேரிடருக்கும் நிவாரண நிதி இல்லை.

14. பள்ளிக் கல்விக்குத் தர வேண்டிய ரூ.2000 கோடியைத் தரவில்லை.

15. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கச் சதி.

16. பிரதமர் சொல்ல முடியாததை ஆளுநர் ரவி மூலமாகச் சொல்ல வைப்பது.

இதுதான் தமிழுக்கு, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர்களும், ஒன்றிய பா.ஜ.க. அரசும், பா.ஜ.க. கட்சியும் செய்யும் தொடர் தாக்குதல்கள் ஆகும்.

இதை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தலைவர் கலைஞர் வரிகளில் சொல்ல வேண்டுமானால், ‘நீங்கள் நாடி வரும் கோழை உள்ளம் கொண்ட நாடு இது அல்ல'.

banner

Related Stories

Related Stories