முரசொலி தலையங்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!

தேர்தலை நியாயமாக நடத்திக் காட்ட வேண்டிய தேர்தல் ஆணையம், மிரட்டிக் காட்டிக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது. - முரசொலி தலையங்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

13.09.2025

மிரட்டுகிறதா தேர்தல் ஆணையம்?

தேர்தலை நியாயமாக நடத்திக் காட்ட வேண்டிய தேர்தல் ஆணையம், மிரட்டிக் காட்டிக் கொண்டு இருக்கிறது. “தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம்” என்று சொல்லி மிரட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது.

தேர்தல் ஆணையம், அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். ஆனால் அதனை பா.ஜ.க. தனது கிளை அமைப்பாக மாற்றி விட்டது. தேர்தல் ஆணையர் தேர்வில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியை எப்போது நீக்கினார்களோ அப்போதே தேர்தல் ஆணையம் தனது சுதந்திர எண்ணத்தை இழந்துவிட்டது. பா.ஜ.க.வால் நினைக்கப்படுகிறவர் தேர்தல் ஆணையராக ஆக முடியும் என்ற சூழ்நிலையானது, தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. அதிலும் குறிப்பாக தேர்தல் ஆணையர்களாக வருகிறவர்கள், ஆளும் பா.ஜ.க. அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் ‘முன்பு நடந்து கொண்டதைப் போலவே' இப்போதும் நடந்து காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ்குமார், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்க மானவர். அதனால்தான் தேர்தல் ஆணையர் ஆனார். பின்னர் தலைமை தேர்தல் ஆணையராகவே கடந்த பிப்ரவரி மாதம் ஆக்கப்பட்டார். இவர், அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் தேர்தல் ஆணையம் இயங்க வேண்டும் என்ற நினைப்பிலேயே செயல்பட்டு வருகிறார்.

பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் எடுத்து வைத்து அங்கு வாக்குத் திருட்டு எப்படி நடந்துள்ளது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். இவை இரண்டுக்கும் இதுவரை தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பான பதிலை இன்னமும் அளிக்கவில்லை.

“வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் தனது கையெழுத்துடன் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று உறுதி செய்யப்படும். அதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” - இதுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அளிக்கும் பதில்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!

ராகுல் காந்தி எந்தத் தொகுதியைச் சொல்கிறாரோ, அதில் முறைகேடு நடக்கவில்லை என்றால் ராகுலைப் போலவே செய்தியாளர் கூட்டம் நடத்தி, அவர் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் செய்து காட்டியதைப் போல தலைமைத் தேர்தல் ஆணையரும் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் நடத்தி இருக்க வேண்டாமா? அப்படி நடத்தி இருந்தால் ஞானேஷ்குமாரை நியாயவான் எனப் பாராட்டலாம். அதைச் செய்யாமல் மிரட்டினால்...? இவர் என்ன அமித்ஷாவா?

ஞானேஷ்குமார் நியமனத்தை ‘பண்பற்ற நியமனம்' என்று அப்போதே கண்டித்தார் ராகுல் காந்தி. “புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அந்தப் பதவிக்குப் புதியவரைத் தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் மேற்கொண்ட முடிவு பண்பற்ற நடவடிக்கை” என்று குற்றம் சாட்டி இருந்தார் ராகுல் காந்தி. ‘பண்பற்ற நியமனத்தால்' வந்தவர் நெறியற்ற பேச்சைத் தானே பேசுவார்?

அத்தகைய ஞானேஷ்குமார் தலைமையில் டெல்லியில் நேற்றைய தினம் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நடந்ததைப் போல மற்ற மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தொடங்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சொல்லி இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இப்பணிகளைத் தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போது, அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் ஆணையம் செயல்படுவது சரியல்ல.

ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் சொன்னபிறகும், அதனை ஏற்காமல் தேர்தல் ஆணையம் அடம்பிடிக்கிறது. ஆதார் அட்டையை குடிமைக்கான சான்றாக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் சொல்வதும் ஏன் என்று தெரியவில்லை. அப்படியானால் ஆதார் அட்டையின் பயன் என்ன? மரியாதை என்ன? அந்த அட்டைக்கு மதிப்பு இருக்கிறதா இல்லையா?

பீகாரில் நீக்கப்பட்டவர்களுக்கான காரணத்தை உச்சநீதிமன்றத்தில் சொல்வதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் சொன்ன பிறகுதான் நீக்கப்பட்டவர்கள் பட்டியலையே தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

உண்மையான, நேர்மையான தேர்தலை நடத்தினால் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப்போவது இல்லை. ஆனால் தேர்தல் ஆணையமானது தனது நடவடிக்கைகளை குடியுரிமைச் சட்ட இயக்ககம் போல மாற்றிக் கொண்டே போவது கடும் கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை, ஒன்றிய அரசால் தரப்பட்ட ஆதார் அட்டை ஆகியவற்றைக் கூட தேர்தல் ஆணையம் மதிக்காமல் இருப்பதுதான் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தகுதியான அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வேலை?

banner

Related Stories

Related Stories