முரசொலி தலையங்கம் (11-09-2025)
இப்போதுதான் உ.பி உணர்கிறது!
100 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் சிந்தித்ததை, 35 ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர் கலைஞர் சட்டம் ஆக்கியதை இப்போதுதான் உத்தரப்பிரதேச மாநிலம் உணர்கிறது. பின்பற்றலாமா எனச் சிந்திக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறதாம். எவ்வளவு பின் தங்கி இருக்கிறது அந்த மாநிலம் என்பதற்கு உதாரணம் இது.
‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் அதன் டெல்லி தலைமைச் செய்தியாளர் ஆர்.ஷபி முன்னா ஒரு செய்தியை எழுதி இருக்கிறார். அதைப் படிக்கும் போது தமிழ்நாட்டை, திராவிட இயக்கத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.
“உத்தரப்பிரதேசத்தில் வருவாய் சட்டம்–2006–ன் பிரிவு 108 (2)–ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற்றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது வருகிறது.
இந்நிலையில், “திருமணமான மகள்களுக்கு அவர்களின் தந்தையின் விவசாய நிலம் உள்ளிட்ட சொத்தில் சம பங்கு வழங்குவதற்கான திட்டத்தை மாநில அரசின் வருவாய் கவுன்சில் தயாரித்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘முன்மொழியப்பட உள்ள திருத்தத்தில், திருமணமானவர் மற்றும் திருமணமாகாதவர் போன்ற வார்த்தைகள் பிரிவு 108–லிருந்து நீக்கப்படும். அதன் பிறகு, திருமணமான மகள்களும் மகன்களும் அல்லது திருமணமாகாத மகள்களைப் போலவே சம உரிமையைப் பெறுவார்கள். இதன்படி, வாரிசுரிமையைப் பதிவு செய்யும்போது திருமணத்தின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் இருக்காது.’ என்றனர். உ.பி. அரசின் இந்த நடவடிக்கையும் மிகப்பெரிய சமூகப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் சம உரிமை மீதான முதல்வர் யோகியின் இந்த சட்டத்துக்கு உயர் சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு செய்ய நினைப்பதை 1989 ஆம் ஆண்டே சட்டம் ஆக்கியவர் தமிழினத் தலைவர் கலைஞர். இத்தகைய உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று 1929 ஆம் ஆண்டே தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு முன்பே அதைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டார் பெரியார்.
‘பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்’ என்ற தீர்மானம் 1927 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண பார்ப்பனரல்லாத இளைஞர் முதலாவதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ‘இந்துக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் போல் சமமான சொத்துரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று அம்மாநாடு கோரிக்கை வைத்தது.
1928 ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் தலைமையில் நடைபெற்றது சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் ஆண்களைப் போல சம உரிமை அளிக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரிய அளவில் செங்கல்பட்டு மாநாடு நடைபெற்றது. பெண்கள் அதிகமாக வர வேண்டும், விதவைகள் வர வேண்டும் என்று பெரியார் அழைப்பு விடுத்தார். இதைப் பார்த்து ஏராளமான பெண்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். “பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாக சொத்துரிமையும் வாரிசு பாத்தியதையும் கொடுக்க வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்களும், ஆண்களைப் போலவே அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி ஆசிரியர் வேலைகளுக்குப் பெரும்பாலும் பெண்களே நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றியவர் முதலமைச்சர் கலைஞர்.
1989 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆன தலைவர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோதுதான் ‘பெண்களுக்கும் சொந்த உரிமை’ என்ற சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவரப் போவதாக அறிவித்தார்கள்.
7.5.1989 ஆம் நாள் சட்டமன்றத்தில் பெண்களுக்கும் சம பங்கு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியோடு முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்துக்கு வந்திருந்தார்கள். அவர் வரும் போது தன் கையில் ஆங்கிலப் புத்தகம் ஒன்றை எடுத்து வந்தார். அது நீதிக்கட்சிக் காலத்து வரலாற்று நூல். அந்த நூலில் இருக்கும் 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டு நிகழ்ச்சிகளை முதல்வர் கலைஞர் அவர்கள் வாசித்தார்கள்.
“இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது எனக்கு 5 வயது தான். 60 ஆண்டுகள் கழித்து எனது 65வது வயதில் இதனை சட்டமாகக் கொண்டு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அத்தகைய சுயமரியாதை மாநாட்டிற்கும் அடிகோலிய பெரியார் வாழ்க! அவரது வழித்தோன்றல் அண்ணா வாழ்க! என்று சொல்லி இந்தச் சட்டத்தை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும்” என்று பேசினார் முதலமைச்சர் கலைஞர்.
1929 ஆம் ஆண்டு தீர்மானம் போட்டதற்காக பெரியாருக்கு தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரும் இணைந்து 1938 இல் ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கியது போல– ‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’ என்ற பட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முதலமைச்சர் கலைஞருக்கு வழங்கினார்கள்.
1950 ஆம் ஆண்டு இந்த முற்போக்குச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்தார். ஆனால் அது பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாகத் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதனை 1989ஆம் ஆண்டு செயல்படுத்திக் காட்டினார் முதலமைச்சர் கலைஞர்.
பெண்களுக்கு சொத்து பங்கு உண்டு என்ற தீர்ப்பை 2020 ஆகஸ்ட் 11 அன்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக இப்போதாவது உத்தரப்பிரதேசம் முற்போக்காக சிந்திக்கத் தொடங்கி இருப்பதை வரவேற்போம். பழமைவாதத்தில் ஊறிப் போனவர்கள் இதனை நிச்சயம் எதிர்ப்பார்கள். எதிர்ப்பை மீறி, பெண்களுக்கான உரிமையை உ.பி.அரசு வழங்க வேண்டும்.