முரசொலி தலையங்கம்

ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!

நேரடியாக மக்கள் செல்வாக்கைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத பாஜக, குறுக்கு வழியைப் பின்பற்றி வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது - முரசொலி தலையங்கம் விமர்சனம்

ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

29.08.2025

பீகாரில் பீறிடும் மக்கள் சக்தி!

பீகார் மாநிலத்தில் மாபெரும் மக்கள் பிரளயத்தையே உருவாக்கி வருகிறார்கள் ராகுல் காந்தியும், தேஜஸ்வீயும். மக்கள் சக்தியின் மகத்தான எழுச்சியை நேரில் சென்றுபார்த்து வாழ்த்திவிட்டு வந்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன். கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பீகார் மக்களின் பலம்! ராகுல் காந்தியின் பலம்! தேஜஸ்வீயின் பலம்” என்று முதலமைச்சர் அவர்கள் சொன்ன போது கூட்டத்தில் இருந்து கைதட்டல் எழுந்தது.

“பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது! நீங்கள் இரண்டு பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழாக் கூட்டத்திலும் நிச்சயமாக - உறுதியாக நானும் பங்கேற்பேன்” என்று சொல்லி விட்டு வந்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது பீகார் மாநிலம். அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பல்வேறு போக்குக் காட்டி அடக்கி வைத்திருக்கிறது பா.ஜ.க. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை எட்ட முடியாத பா.ஜ.க., நிதிஷ்குமாரின் ஆதரவை வைத்து இப்போது ஆட்சியில் இருக்கிறது. நிதிஷ்குமாரும் - பா.ஜ.க.வும் ஒருவருக்கொருவர் கையை விட்டால் கீழே விழுந்துவிடுவார்கள் என்ற நிலைமையில்தான் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வீக்கான ஆதரவு அதிகமாகி வருகிறது. அவரோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து செல்வதால் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. நேரடியாக மக்கள் செல்வாக்கைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று நினைக்கும் பா.ஜ.க., குறுக்கு வழியைப் பின்பற்றி வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.

ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!

‘வாக்காளர் அட்டை சீரமைப்பு' என்ற பெயரால் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். இதற்கு எதிராக 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். லாலுபிரசாத், ராகுல்காந்தி, தேஜஸ்வீ, பிரியங்கா ஆகியோர் பீகாரில் மக்கள் திரளை திரட்டி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க. எத்தகைய வாக்குத் திருட்டை நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தினார் ராகுல் காந்தி. ஒரே ஒரு தொகுதியில் போலி வாக்காளர்கள், இல்லாத முகவரிகள், ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள், செல்லாத புகைப்படங்கள், படிவம் 6-இன் தவறான பயன்பாடு ஆகியவற்றால் நடந்துள்ள மோசடிகளை ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார். இதற்கு முறையான ஒரு பதிலைக் கூட தேர்தல் ஆணையத்தால் சொல்ல முடியவில்லை. பதிலளிக்கத் தயாராக இல்லாத தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. 30 நாள் சிறையில் இருந்தால் பதவி போய்விடும் என்று சட்டம் போட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இவை அனைத்துக்கும் எதிராக மாபெரும் மக்கள் சக்தியைத் திரட்டி வருகிறார் ராகுல் காந்தி. 'வாக்காளர் அதிகாரப் பயணம்' என்ற பயணத்தை பீகாரில் தொடங்கி உள்ளார்கள் ராகுல் காந்தியும், தேஜஸ்வீயும். இவர்கள் இருவரும் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கிறார்கள். ‘நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்' என்று சொல்லத்தக்க வகையில் தினந்தோறும் காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. தேஜஸ்வீ ஜீப் ஓட்ட அதில் ஏறி வலம் வந்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி - தேஜஸ்வீ பைக் பயணம் போனார்கள். ராகுல் பின்னால் பைக்கில் பிரியங்காவும் அமர்ந்து சென்றார். இவர்களுக்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பைக்கில் சென்றார்கள். புர்னியா நகரில் வலம் வந்த போது தான் பயணித்த திறந்த வேனில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, திடீரென ஹெல்மெட் அணிந்துகொண்டு, பைக்கில் ஏறினார். அவருக்குப் பின்னால் பீகார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராஜேஷ் குமார் ஏறிக்கொள்ள, தேஜஸ்வீ யாதவ் தனது பாதுகாப்பாளருடன் மற்றொரு பைக்கை ஓட்டினார். இவை இரண்டு கட்சித் தொண்டர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது. இரண்டு மாபெரும் கட்சிகளின் கூட்டு, மக்களுக்கான பெரிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.

ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!

“தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஏழைகளின் வாக்குகளைத் திருட பா.ஜ.க. விரும்புகிறது. பீகாரில் இது நடக்க, 'இந்தியா' கூட்டணி அனுமதிக்காது. அரசியலமைப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனாலும் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது. சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று பேசி வருகிறார் ராகுல்.

“உங்கள் வாக்குகளை மட்டும் பறிக்க நினைப்பதாகக் கருதாதீர்கள். உங்கள் இருப்பையே பறிக்க நினைக்கிறார்கள்” என்று தேஜஸ்வீ சொல்லி வருகிறார். ஜனநாயகமும், தேர்தல் முறையும் பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது இவர்கள் இருவரது உரையும்.

“ராகுலின் பயணம் இத்தனை ஈர்ப்புக்குரியதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது பா.ஜ.க.வின் பலவீனத்தையே காட்டுகிறது” என்று பா.ஜ.க.வினர் சிலர் இந்தி ஊடகங்களில் பேட்டி அளித்ததாகச் செய்தி வெளியாகி உள்ளது.

16 நாட்கள் நடைபெறும் இந்தப் பயணம், 20 மாவட்டங்களில் 1,300 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து பாட்னாவில் நிறைவடைய உள்ளது. இந்தியாவின் மிக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். பீகாருக்கான எழுச்சியாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சியாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories