முரசொலி தலையங்கம் (23-08-2025)
ரம்மியை ஆதரித்த ரவி எங்கே போனார்?
இணையவழி பண விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்ட மசோதா – 2025’ என்று இதற்குப் பெயர். பணம் வைத்து விளையாடும் ரம்மி, சூதாட்டம், போக்கர், லாட்டரி, பந்தயம் ஆகியவற்றை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
இந்தச் செய்தியைப் படிக்கும் போது, ‘இதையெல்லாம் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி எப்படி தாங்கிக் கொள்கிறார்?’ என்ற கவலைதான் நமக்கு ஏற்பட்டது. ஏனென்றால், தமிழ்நாட்டில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதற்கு அனுமதி தராமல் வைத்திருந்தவர்தான் இந்த ஆளுநர். ஆன்லைன் ரம்மியை ஆதரிப்பதுபோல அன்று நடந்து கொண்ட ஆளுநர் ரவி, இன்று மவுனமாக இருப்பது ஏன்? ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டாமா?
‘நான் நிறுத்தி வைத்தாலே, மறுக்கப்பட்டதாகத் தான் அர்த்தம்’ என்று நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு மட்டுமல்ல; ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கும்தான் சேர்த்துச் சொன்னார் ஆளுநர் ரவி. இப்போது மக்களவையில் அதே போன்றதொரு மசோதா, இந்தியா முழுமைக்கும் வந்து விட்டதே; ஆளுநர் ரவி பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?
இணையவழிச் சூதாட்டத்தைத் தடை செய்வதுகுறித்து ஆராய நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதியரசர் சந்துரு குழுவானது 27.06.2022 அன்று தனது அறிக்கையினை அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பள்ளி செல்லும் மாணவர்களுக்கிடையே இணையவழி விளையாட்டு எந்த விதப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்காக, பள்ளிக்கல்வித் துறை ஜூலை 2022–ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள 2,04,114 அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக் கோரப்பட்டது. மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 விழுக்காடு ஆசிரியர்கள் சொன்னார்கள்.
இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்களிடம் 7.8.2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. அதில், 10,708 மின்னஞ்சல்களில் இணையதள விளையாட்டையும், இணையதள ரம்மி விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டது. 27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
11.08.2022 மற்றும் 12.08.2022 ஆகிய நாட்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன. இவை அனைத்தையும் அடிப்படையாக வைத்துத்தான் ஒரு வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26.09.2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்பிறகுதான், தமிழ்நாடு இணையவழிச் சூதாட்டத்தை தடைசெய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம் 2022–ஐ மாண்புமிகு ஆளுநர் அவர்களால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் அரசிதழில் அக்டோபர் 3, 2022–ல் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு, மேற்கண்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டது. இந்தச் சட்டமானது கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக சட்டத்துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தரவில்லை.
பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. 2022 நவம்பர் 24–ஆம் தேதி கடிதம் எழுதினார். “நீங்கள் உருவாக்கி இருக்கும் மசோதா அரசியலமைப்புச் சட்டக் கூறு 19 (1) (g)–க்கு எதிரானதாகும்” என்று ஆளுநர் சொன்னார். “குறிப்பிடத்தக்க அளவு தடை (Proportional ban) மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை மீறி இந்தத் தடை அமைந்துள்ளது” என்றும் குற்றம் கண்டுபிடித்தார் ஆளுநர். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு அரசு விளக்கக் கடிதத்தை அனுப்பி வைத்தது. ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க அனுமதி கேட்டும், நேரம் ஒதுக்கப்படவில்லை.
ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆன்லைன் விளையாட்டுக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்ததாகக் கூறப்பட்டது. சந்தித்ததாக செய்தி வெளியானதை ஆளுநர் மாளிகை மறுக்கவில்லை.
2022 அக்டோபர் 19ஆம் நாள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்தை 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பினார். 139 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார் ஆளுநர். 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகும் அப்படியே கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ரவி.
உடனடியாக சட்டமன்றத்தில் இதனைக் கண்டித்துப் பேசினார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின். ‘இது போன்ற சட்டங்களுக்கு கையெழுத்துப் போட கால நிர்ணயம் வேண்டும்’ என்றார். முதலமைச்சர் உரையாற்றிய இரண்டு மணிநேரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார் ஆளுநர். உடனடியாக அன்றைய தினமே அரசிதழிலும் வெளியிட்டு விட்டார் முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசு அப்போதே நிறைவேற்றிவிட்ட மசோதாவைத் தான் பா.ஜ.க. அரசு இப்போது கொண்டு வந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத் தடை போட்டு, ஆளுநர் அனுமதி தராமல் இழுத்தடித்த கால இடைவெளியில் தமிழ்நாட்டில் 47 உயிர்கள் பறி போயின. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஆளுநர் ரவிதானே? ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு அனுமதி தராமல் ஆளுநர் ரவி இருந்தது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.