முரசொலி தலையங்கம்
24.07.2025
தன்கர் விலகலின் பின்னணி!
ஜெகதீப் தன்கர் என்ற தனிமனிதருக்காக வருத்தப்பட ஏதுமில்லை. ஆனால் குடியரசுத் துணைத்தலைவருக்கே இந்தக் கதி தானா? என்பது வேதனை தரத்தக்கது ஆகும்.
இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக 2022 ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார். மூன்று ஆண்டுகளாக குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த நிலையில், திடீரென அவர் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார். '2027 வரை நான் பதவியில் இருப்பேன்' என்று சில நாட்களுக்கு முன்னால் சொன்னவர் அவர். ஆனால் திடீரென்று பதவி விலகல் கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, ஜெகதீப் தன்கர் அனுப்பினார். மருத்துவக் காரணங்களுக்காக குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர்தான், நாடாளுமன்ற மாநிலங்களவையை வழிநடத்தும் அவையின் தலைவராவார். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாநிலங்களவையை ஜெகதீப்தன்கர்தான் வழிநடத்தினார். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க நோட்டீஸ் தீர்மானம் தொடர்பான மனுக்களை அவரிடம் அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் வழங்கினர். இந்தச் சூழலில் பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் முடிந்ததும் 21 ஆம் தேதியன்று அவர் பதவி விலகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
“அரசியல் அழுத்தம் காரணமாகவே ஜெகதீப் தன்கர் பதவி விலகியுள்ளார்” என்று மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
“தன்கரின் திடீர் விலகல் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அன்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்ற நிலையில், மாலையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்கவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? 22 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தை ஜெகதீப் தன்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் இன்று வெளியிடப்போவதாக தன்கர் கூறியிருந்தார். ஆனால், இரவோடு இரவாக ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்திருப்பது புரியாத புதிராக உள்ளது” என்று கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நெருக்கடியால் ஜெகதீப் தன்கர் பதவி விலகினாரா? என்பதே எதிர்க்கட்சிகள்எழுப்பும் சந்தேகம் ஆகும்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது. இது உண்மை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையும் உறுதி செய்தது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க 208 எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். நீதிபதி பதவியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டுமானால் 100 மக்களவை உறுப்பினர்களும், 50 மாநிலங்களவை உறுப்பினர்களும் அந்த நோட்டீஸில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்.
145 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்ட நோட்டீஸ் மக்களவை தலைவர் ஓம்பிர்லாவிடம் தரப்பட்டது. 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்ட நோட்டீஸ் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவை அவைத் தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தைப் பெற்றதாக தன்கர் ஒப்புக்கொண்டார், அவர்களின் கையொப்பங்களைச் சரிபார்ப்பதாகவும் கூறினார். டெல்லி நீதிபதியை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த தீர்மானத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார். விதிகளின்படி செல்வதைத் தவிர தன்கருக்கு வேறு வழிகள் இல்லை. ஆனால் இதனை பா.ஜ.க. தலைமை விரும்பவில்லை. இதுதான் தன்கர் பதவி விலகலுக்கு காரணமாக அமைந்து விட்டது.
பா.ஜ.க.வின் பவர் பாலிடிக்ஸும் இதற்குப் பின்னணியாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. 75 வயதை அடைந்தவர்கள் அரசியலில் இருந்தும் பதவியிலிருந்தும் ஓய்வு பெற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் அண்மையில் பொதுவெளியில் பேசியிருந்தார். விரைவில் 75 வயதை நெருங்க உள்ள பிரதமர் மோடியை குறிப்பிட்டே மோகன் பகவத் பேசியதாக சர்ச்சை எழுந்தது. மோகன் பகவத்தின் பேச்சுக்கும், தற்போது ஜெகதீப் தன்கரின் பதவி விலகலுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன.
ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இருந்தாலும், தற்போது அவருக்கு 74 வயதாகிறது. விரைவில் 75 வயதை எட்ட உள்ள பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கவே, ஜெகதீப் தன்கரை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது நாக்பூர் மேலிடம் என்றும் சொல்கிறார்கள்.
எப்படிப் பார்த்தாலும் பா.ஜ.க. பூதம், ஜெகதீப் தன்கரை விழுங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குடியரசுத் துணைத் தலைவரையே அவர்கள் எந்தளவுக்கு மதித்துள்ளார்கள் என்பதும், எந்த வகையில் நடத்துகிறார்கள் என்பதும் இதன் மூலமாகத் தெரிகிறது. இந்திய மக்களாட்சி நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து நசுக்கும் காட்சியாகவே தன்கரை துரத்தியதைப் பார்க்க வேண்டும்.