முரசொலி தலையங்கம்

“திடீரென்று தைரியசாலியாக ஆகிவிட்டாரே என்று பார்த்தால் அடுத்த நாளே...” - பழனிசாமியை பங்கம் செய்த முரசொலி!

தகுதியால் முதலமைச்சர் ஆனவர் அல்ல பழனிசாமி. சசிகலா தயவால் முதலமைச்சர் ஆனவர் பழனிசாமி என்று முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

“திடீரென்று தைரியசாலியாக ஆகிவிட்டாரே என்று பார்த்தால் அடுத்த நாளே...” - பழனிசாமியை பங்கம் செய்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

23.07.2025

நிலை தடுமாறும் பழனிசாமி !

திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது ஆட்சியில் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே அடுத்தும் தொடரப் போகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இது பழனிசாமிக்கு நன்கு தெரியும். ஆனால் அதனை மறைக்க தினந்தோறும் ஏதாவது சவால்களை, சவடால்களாக விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. தன்னை பலவான் போல அவர் காட்டிக் கொள்ள இப்படி பேசுகிறார். ஆனால் அவரது பலவீனத்தையே இந்தப் பேச்சுகள் காட்டுகிறது.

பழனிசாமியை மிரட்டிப் பணிய வைத்தது பா.ஜ.க. என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், பா.ஜ.க. சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி இருக்கிறார் பழனிசாமி என்பதும் அனைவர்க்கும் தெரியும். 'இதனை நாங்கள் மறைக்க விரும்பவில்லை' என்பதைத்தான் உள்துறை அமைச்சர்அமித்ஷா அளித்த நான்கு பேட்டிகளும் நாட்டுக்குச் சொன்னது. 'அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும்’என்று அமித்ஷா சொன்னார். ‘முதலமைச்சர் பதவிக்கு அ.தி.மு.க.வில் இருந்து ஒருவர் வருவார்' என்று அமித்ஷா சொன்னாரே தவிர, பழனிசாமி என்று அவரது பெயரைச் சொல்லவில்லை. ஏனென்றால் பா.ஜ.க. தலைமை தனக்கு அடக்கமான ஒருவரை பா.ஜ.க.வில் இருந்து உருவாக்கிவிட்டது. அதுதான் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆவார்.

கோவையில் ஜக்கி வாசுதேவ் விழாவில் அமித்ஷாவுக்கு இணையாக வேலுமணி அமர வைக்கப்பட்டதும், கோவைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்ட விழாவில் வேலுமணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டதும் சாதாரணமாக நடந்தவை அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டவை ஆகும். இதுவும் பழனிசாமிக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. அதனால்தான் தனது ‘சுந்தரா டிராவல்ஸ்' பயணத்தை வேலுமணி ஊரில் இருந்து தொடங்கினார் பழனிசாமி.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக பேட்டிகள் அளித்து,‘அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சிதான்'என்பதை வலியுறுத்திச் சொல்லி வந்தார். அது போன்ற பேட்டிகளை தொடர்ச்சியாக வர வைத்தார்கள். இவை அனைத்தும் பழனிசாமியை நிலை குலைய வைத்துள்ளன.

அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை என்று பழனிசாமி விளக்கம் அளித்தார்,“அமித்ஷா அவர்கள், 'எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்கும்... என்றுதான் சொன்னார்” என்று சொற்களைப் பிரித்து நிருபர்களுக்கு வகுப்பு எடுத்தார் பழனிசாமி. இவர் சொற்களைப் பிரித்து விளக்கம் அளிக்க, அமித்ஷா தமிழிலா பேட்டி அளித்தார்? அவரிடம் ஆங்கிலத்தில் “If you win, will you join the government” என்று கேட்டபோது, “Yes” என்று தான் அமித்ஷா சொன்னார்.

“திடீரென்று தைரியசாலியாக ஆகிவிட்டாரே என்று பார்த்தால் அடுத்த நாளே...” - பழனிசாமியை பங்கம் செய்த முரசொலி!

“சட்டசபைத் தேர்தலுக்குபின் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். அதில் பா.ஜ.க.வும் ஒரு அங்கமாக இருக்கும்”என்பது 'தினமலர்' நாளிதழுக்கு (27.6.2025) அமித்ஷா அளித்த பேட்டி ஆகும். 'ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்’ என்றும் பதில் அளித்தார் அமித்ஷா. (இந்தியன் எக்ஸ்பிரஸ் 12.07.2025) -இவை இரண்டுமே, பா.ஜ.க.வுக்கு பழனிசாமி அடிமைச்சாசனம் எழுதித் தந்துவிட்டார் என்பதற்கான சாட்சியங்கள்.

‘மக்களுடன் நல்லது செய்யும் கட்சியுடன்தான் கூட்டணி வைக்கிறோம்' என்று சொல்லி பா.ஜ.க. கூட்டணியை நியாயப்படுத்தினார் பழனிசாமி.'நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வுக்கு என்ன?' என்று கேட்டார் பழனிசாமி.'மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டுக்கு நிறைய திட்டங்களைக் கொண்டுவருவோம்' என்றும் சொன்னார் பழனிசாமி. இது அ.தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பழனிசாமி இப்படி பேச வேண்டாம்' என்று முன்னாள் அமைச்சர்கள் சிலரே அவருக்குச் சொல்லி இருக்கிறார்கள். எனவே, பா.ஜ.க.வை ஆதரித்து பேசுவதைக் குறைத்தார்.

இந்த நிலையில், திருத்துறைப்பூண்டியில் கடந்த 19 ஆம் தேதியன்று பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும், ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல' என்று குறிப்பிட்டார். “பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாமா என்று கேட்கிறார்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இது எங்கள் கட்சி. அதிமுக ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்கு இருக்கும் என்று சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று சொல்லி இருக்கிறார். இது பச்சோந்தித் தனத்தின் அடுத்த கட்டம் ஆகும்.

கூட்டணி ஆட்சி என்று சொன்னது அமித்ஷா. எனவே, பழனிசாமி பதில் சொல்ல வேண்டியது பா.ஜ.க. பக்கம் திரும்பித் தானே தவிர, தி.மு.க. பக்கமாக அல்ல.

பழனிசாமி திடீரென்று தைரியசாலியாக ஆகிவிட்டாரே என்று பார்த்தால் அடுத்த நாளே இன்னொரு பச்சோந்தி பல்டியை அடித்தார்.“கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.க. விழுங்குவதாக தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டு பரப்புரை செய்வதாலேயே அப்படிச் சொன்னேன்” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. அடுத்தடுத்த நாட்களில் அவர் என்ன சொல்ல இருக்கிறாரோ என்று அ.தி.மு.க. தொண்டர்கள்தான் பயத்தில் இருக்கிறார்கள்.

தகுதியால் முதலமைச்சர் ஆனவர் அல்ல பழனிசாமி. சசிகலா தயவால் முதலமைச்சர் ஆனவர் பழனிசாமி. இப்போது அதேபோல ‘யாராவது’ தன்னை முதலமைச்சர் ஆக்கிவிட மாட்டார்களா என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. அவரது நிலை தடுமாற்றத்துக்கு அதுதான் காரணம். அவர் தகுதியைச் சொல்ல ஒரே ஒரு உருப்படியான காரணத்தை அவரால் சொல்ல முடியவில்லை. அவரது உளறல்கள் இதன் வெளிப்பாடுகள்தான்.

banner

Related Stories

Related Stories