இந்திய நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது, மிகமிக மோசமான சர்வாதிகாரத்தின் தொடக்கம் ஆகும். இதனை தேர்தல் ஆணையத்தின் மூலமாக சட்டப்படி செய்வது, சர்வாதி காரத்துக்கான சட்ட அங்கீகாரமும் ஆகும். பீகார் மாநிலத்துக்கு இப்போது நடப்பதுதான் இனி எல்லா மாநிலத்துக்கும் நடக்கும் என்றும் இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
“வாக்காளர்களை நீக்கும் பா.ஜ.க.வின் சதிகள்!” என தலைப்பில் முரசொலி நாளேடு தீட்டியுள்ள தலையங்கம் பின்வருமாறு : -
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த எச்சரிக்கையைச் செய்தாரோ அதை பீகாரில் செய்யத் தொடங்கிவிட்டது பா.ஜ.க.!
‘‘போலி வாக்காளர்களைப் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் வாக்குப்பதிவுஉயர்த்துதல், பா.ஜ.க. வெற்றிபெற வேண்டிய பகுதிகளில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், அதன்பிறகு அதற்கான ஆதாரங்களை மறைத்தல் போன்றவற்றை ‘மேட்ச் பிக்சிங்’ மாதிரி மாநில பா.ஜ.க.’’ என்று மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலை முன் வைத்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் ராகுல் காந்தி. அதனைத்தான் வெளிப்படையாக பீகாரில் செய்யத் தொடங்கி இருக்கிறது பா.ஜ.க.
எதிர்க்கட்சிகளின் வாக்குகளை முன்கூட்டியே நீக்கும் சதியை பீகாரில் தொடங்கி உள்ளனர். பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பீகாரில் ‘சார்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (சிறப்பு தீவிர திருத்தம்– -எஸ்ஐஆர்) பீகார் அரசு எடுத்து வருகிறது. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பொதுவாக தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் செய்யப்படும். பெயரைச் சேர்க்க வேண்டியவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். நீக்கம், திருத்தம் செய்பவர்கள் அதனைச் செய்யலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஆனால் இப்போது பீகாரில் நடப்பது திருத்தம் அல்ல; மாற்றம். முழுமையான மாற்றம் ஆகும்.
வீடு, வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகின்றனர். அப்போது வாக்காளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 2003-–ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்தின் இன்னொரு வடிவம் போல இதனை மாற்றி விட்டார்கள்.
இந்த ஆவணங்கள் இல்லை என்றால், அவர்களது பெற்றோர்களின் குடியிருப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அந்தப்பகுதி வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்வார்.
8 கோடி வாக்காளர்களுக்கும் புதிய படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘‘2003 பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 1987க்கு முன் பிறந்திருந்தால், பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4.76 கோடி வாக்காளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நிறுவனம் சொல்லி இருக்கிறது. பீகாரில் இருந்து பல லட்சம் பேர் வேலைக்காக, பல்வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டார்கள். இவர்கள் வாக்குரிமை பறிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது.
‘‘பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், பீகாரில் உள்ள 8 கோடி மக்கள் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் இருவரும் பீகாருக்கும், அரசியலமைப்புக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் எதிரானவர்கள். அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள்”என்று பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி,“பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். மாறிவிட்டது. வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவில்லை. இதில் நீதி எங்கே? தேர்தல் ஆணையம் தனது முடிவு ஒவ்வொரு மணி நேரமும் மாற்றிக் கொண்டிருக்கிறது’’என்று முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி குற்றம்சாட்டி இருக்கிறார்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் பீகாரில் இன்று (ஜூலை 9 ஆம் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி.யான மனோஜ் ஜா, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா, ஜனநாயக சீர்திருத்தத்துக் கான சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள். நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜாய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (10-ந் தேதி) விசாரிக்கிறது.
பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் தற்போது மேலும் வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, மிகக் குழப்பமான சூழல் உருவாக்குகிறது. 2003 ஆம் ஆண்டு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத சுமார் 2.93 கோடி வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்கவும், குறிப்பிடப்பட்டுள்ள 11 ஆவணங்களில் குறைந்தது ஒன்றையாவது தர வேண்டும். இதனை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் அனைவரையும் நீக்குவதற்கான சதியாக இதனை பார்க்க வேண்டி உள்ளது.
ஆதார் அட்டை இருந்தால் போதும், வாக்காளர் அட்டை இருந்தால் போதும் என்று இதுவரை சொல்லி வந்தார்கள். இதனை உரிய ஆவணமாக இப்போது ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அப்படியானால் இந்த அட்டைகளுக்கு என்ன மரியாதை? இதனை வழங்கியதும் ஒன்றிய அரசு தானே? தேர்தல் ஆணையம் தானே? ஒன்றிய அரசு தந்த, தேர்தல் ஆணையம் தந்த அட்டைகளையே செல்லாது என்று சொல்லும் அளவுக்கு தீவிரமான நடவடிக்கைகள் இப்போது ஏன் செய்யப்படுகின்றன?
இங்கேதான் பா.ஜ.க.வின் சதி இருக்கிறது. இதுவரை தேர்தலில் சதி செய்தவர்கள், இப்போது தேர்தலுக்கு முன்பாகவே சதிச் செயலைத் தொடங்கி விட்டார்கள். வாக்குரிமையைப் பறித்தலின் மூலமாக இதனைத் தொடங்குகிறார்கள். தீவிர திருத்தம் என்பதன் மூலமாக ‘தீவிர அழுத்தம்’ கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்திய நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது, மிகமிக மோசமான சர்வாதிகாரத்தின் தொடக்கம் ஆகும். இதனை தேர்தல் ஆணையத்தின் மூலமாக சட்டப்படி செய்வது, சர்வாதி காரத்துக்கான சட்ட அங்கீகாரமும் ஆகும். பீகார் மாநிலத்துக்கு இப்போது நடப்பதுதான் இனி எல்லா மாநிலத்துக்கும் நடக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
இது பீகார் பிரச்சினை அல்ல; இந்தியாவின் பிரச்சினை ஆகும்.