வாய்ப்பு இருப்பவர்கள் முன்னேறி வந்தார்கள் இதுவரை. ஆனால் இன்றைய முதலமைச்சர் வாய்ப்பை உருவாக்கி வருகிறார்கள். உருவாக்கித் தருகிறார்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு தரப்படுகிறது. இதுதான் உண்மையான சமநீதி ஆகும். உண்மையான சமூகநீதி ஆகும் என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முரசொலி நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!!
திராவிட மாடல் அரசு இளையோர் அரசாக இருக்கிறது. அறிவின் அரசாக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்படும் முத்திரைத் திட்டங்கள் அனைத்தும் இதைத்தான் சொல்கிறது.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், கல்லூரிக் கனவு, அனைவர்க்கும் ஐ.ஐ.டி போன்ற ஒவ்வொரு திட்டமும் பல ஆண்டுகள் கழித்து அல்ல, சில மாதங்களிலேயே அதற்கான பலனையும், பயன்பாட்டையும் அடைந்து வருகின்றன.
நான் முதல்வன் திட்டமானது, முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டம் ஆகும். இன்றைக்குத் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஏராளமான நிறுவனங்கள் வரும் போது அதில் பணியாற்றத் தேவையான திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் நினைத்தார்கள். அதற்காக அவரால் உருவாக்கப்பட்டதுதான் 'நான் முதல்வன்' திட்டம் ஆகும்.
மாணவ, மாணவியர் அனைவரும், இளைஞர்கள் அனைவரும் அனைத்துத் திறமைகளையும் கொண்டவர்களாக வளர வேண்டும் என்று அவர் நினைத்தார். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தேவையான தனித்திறமைப் பயிற்சியைப் பெற்றார்கள். உலகளாவிய நிறுவனங்கள் இந்தப் பயிற்சியை வழங்கியது. இதுவரை தமிழ்நாட்டில் 41 இலட்சம் இளைஞர்கள் இந்தப் பயிற்சியைப் பெற்றுள்ளார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தால் பயன்பெற்ற 3,28,393 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
கலைக்கல்லூரிகளில் படித்தவர்கள், பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர்கள் என அனைவரும் இதில் இருக்கிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இவர்களுக்குப் பயிற்சி அளித்ததால், இந்த மாணவர்கள் வெளிநாடுகளிலேயே பணி நியமனம் பெறுவதற்கும் இத்திட்டம் உறுதுணையாக உள்ளது.
இதேபோல் போட்டித் தேர்வு பயிற்சிகளும் தரப்பட்டது. இந்த ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் வென்ற 57 பேரில் 50 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தால் பயன்பெற்றவர்கள். ஒன்றிய அரசுப் பணிக்கும் பயிற்சி தரப்பட்டது. இந்த ஆண்டு 58 பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். மாணவர்களுக்கு மட்டுமல்ல; பேராசிரியர்களுக்கும் பயிற்சி தரப்பட்டு வருகிறது. நகரங்களில் மட்டுமல்ல; கிராமப் புறங்களிலும் இப்பயிற்சி தரப்படுகிறது.
'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த திருவிழாவும் நடை பெற்றுள்ளது.
இந்த வரிசையில், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள். தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் இலவசமாக இளைஞர்களுக்கு கிடைக்கப் போகிறது. உலகத் தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் இதனைத் தரப்போகின்றன. 18 வயது முதல் 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திறன் பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாதம் 12 ஆயிரம் ஊக்கத்தொகையாகக் கிடைக்கும். இந்த பயிற்சி பெற்றவர்கள் 'Skill Wallet' கைபேசி செயலி (Mobile App) மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். பணியாளர்களைத் தேடுவோர், இந்த செயலியைப் பயன்படுத்தி பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இப்படி பல்வேறு வகையான வழிமுறைகளைச் செய்து தந்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
"நல்லா படிச்சா வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் தொழில்நுட்பத்தின் திறமை இருந்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்பதை 'நான் முதல்வன்' திட்டம்தான் எனக்கு உணர்த்தியது. கிராமப்புறத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்த எனக்கு இன்று ஆண்டுக்கு 28 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது என்றால் அதற்கு 'நான் முதல்வன்' திட்டம்தான் காரணம்" என்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினீத் என்ற மாணவர் சொல்லி இருக்கிறார்.
"படித்தால் வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு நான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் இன்று இன்போசிஸ், டெக் மகேந்திரா ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களின் அழைப்பு என் கையில் இருக்கிறது. 'நான் முதல்வன்' திட்டம் அளித்த பயிற்சியே இதற்குக் காரணம்" என்று சொல்லி இருக்கிறார் லயோலா கல்லூரி மாணவி லினோட்.
வாய்ப்பு இருப்பவர்கள் முன்னேறி வந்தார்கள் இதுவரை. ஆனால் இன்றைய முதலமைச்சர் வாய்ப்பை உருவாக்கி வருகிறார்கள். உருவாக்கித் தருகிறார்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு தரப்படுகிறது. இதுதான் உண்மையான சமநீதி ஆகும். உண்மையான சமூகநீதி ஆகும்.
"வெற்றி நிச்சயம் திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும்" என்று பெருமிதத்துடன் சொல்லி இருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள். அவரது துல்லியமான முன்னெடுப்புகளால்தான் இத்தகைய அறிவு வளர்ச்சியை தமிழ்நாடு பெற்று வருகிறது.
"உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். திறமை இருந்தால் வெற்றி நிச்சயம். உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம்,வெற்றி நிச்சயம்” என்ற முதலமைச்சரின் முழக்கமானது இளைஞர்கள், மாணவர்களுக்கானது மட்டுமல்ல. இதுபோன்ற திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு வெற்றி நிச்சயம். முதலமைச்சருக்கு வெற்றி நிச்சயம்.