முரசொலி தலையங்கம் (30.6.2025)
விண்வெளிக்குள் இந்திய வீரர்!
விண்வெளிக்குள் இந்திய வீரர் நுழைந்துவிட்டார். சுபான்ஷு சுக்லாவின் சாதனை வரலாற்றில் பேசப்படும் சாதனையாக அமைந்து விட்டது.
'ஆக்ஸிசம் -4' என்ற திட்டத்தின் கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு, 'டிராகன்'விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நோக்கிய பயணத்தை கடந்த 25ஆம் தேதி மதியம் வெற்றிகரமாகத் தொடங்கியது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டார்கள். 26 ஆம் தேதி மாலையில் சென்றடைந்தார்கள். பூமியில் இருந்து 400 கி.மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் இருக்கிறது. பல்வேறு நாடுகள் இணைந்து இந்த மையத்தை உருவாக்கி இருக்கிறது. டிராகன் விண்கலம் புவி சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதும் அவர்கள் தங்கள் விண்கலத்துக்கு 'கிரேஸ்' என்ற பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். 14 நாட்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள்.
60 சோதனைகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். இதில் முக்கியமானது விண்வெளியில் தாவரங்கள் முளைக்குமா என்பதைப் பற்றியது ஆகும். இதற்காக விதைகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள். உடலின் இயக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் இவர்கள் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். 'ஆக்ஸிசம் ஸ்பேஸ்' என்பது அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவை நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தின் சார்பில் தான் இந்திய வீரர் சுக்லா சென்றுள்ளார். அவருடன் பெக்கி விட்சன் (அமெரிக்கா, நாசாவின் பெண் தளபதி), ஸ்லாவோஸ் (போலந்து), திபோர் கபு (ஹங்கேரி) ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்தப் பயணம் கடந்த மே மாதமே தொடங்குவதாக இருந்தது. ஆனால் தள்ளிப் போனது. சாதகமான வானிலையை வைத்து இந்தப் பயணம் திட்டமிடப்படுகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு ரஷிய விண்கலத்தில் பயணித்தார் இந்திய வீரர் ராகேஷ் சர்மா. விண்வெளியில் பயணித்த முதல் இந்திய வீரர் அவர்தான். ஏழு நாட்கள் அவர் தங்கி இருந்தார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இதே சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் சுபான்ஷு சுக்லா. விண்வெளிக்குப் பயணிக்கும் இரண்டாவது இந்திய வீரர் சுக்லா. அதேநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த சுக்லாவுக்கு இப்போது 39 வயது. 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்ந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு இஸ்ரோவின் 'சுகன்யான்' திட்டத்துக்காகத் தேர்வு ஆனார். உயர்ரக போர் விமானங்களில் 2000 மணி நேரத்துக்கும் அதிகமாக பயணம் செய்த அனுபவம் கொண்டவர் சுக்லா.
விண்வெளியில் இருந்து நாட்டு மக்களுக்குப் பேசிய சுக்லா, "41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாம் விண்வெளியை அடைந்துள்ளோம். இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்" என்று சொன்னார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் 'சுகன்யான்' திட்டத்துக்காகத் தேர்வான வீரர்களில் ஒருவர்தான் சுக்லா. தனது ஆர்வத்தின் காரணமாக முன்கூட்டியே இந்தப் பயணத்தோடும் தன்னை சுக்லா இணைத்துக் கொண்டுள்ளார். விண்வெளித் துறையில் இந்தியா தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. இஸ்ரோ இதில் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. ஆதித்யா எல்1, சுகன்யான் ஆகிய திட்டங்கள் இந்தியாவின் முக்கியமான எதிர்கால விண்வெளித் திட்டங்களாகக் கருதப்படுகிறது. விண்வெளித் துறை வளர்ச்சியானது அந்தத் துறைக்கு மட்டுமல்லாமல் மற்ற துறைகளுக்கும் தொழில் நுட்ப வளர்ச்- சிக்குத் துணை செய்கின்றன. தொலைத் தொடர்புக்கு இவை அடிப்படையாக அமைந்துள்ளன. காலநிலை மாற்றம் இன்று மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளது. அதனைக் கணிப்பதற்கும் இது போன்ற ஆய்வுகள் தேவையாக இருக்கின்றன.
செவ்வாய் கிரகத்தை அடைதல், நிலவை ஆய்வு செய்தல் என இந்தியாவின் முயற்சிகள் உலகநாடுகளால் உன்னிப்பாகப் பார்க்கப்படுகின்றன. நிலவுக்கு செயற்கைக் கோள் அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் 1999 ஆம் ஆண்டு இந்திய அறிவியலாளர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் 'சந்திராயன் 1' திட்டம் ஆகும். இந்தத் திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரை தலைவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. நிலவில் ஒரு பொருளை வைத்த நான்காவது நாடாக இந்தியா உயர்ந்தது.
செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பிய நாடு என்ற பெருமையை 2014 ஆம் ஆண்டு இந்தியா பெற்றது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்ட இயக்குனராக இருந்தபோது, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். இத்தகைய சாதனைகளின் தொடர்ச்சியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.
2027 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நேரடி விண்வெளிப் பயணம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, "இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தின் தொடக்கம்” என்று சுக்லா சொல்லி இருக்கிறார். நல்ல தொடக்கமாக அமையட்டும்.