'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது வள்ளுவம். இரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பது பெரியாரியம். இதற்காகவே இயக்கம் தொடங்கினார் தந்தை பெரியார். இழிவுபடுத்துதல் என்பது சொற்களில் இருந்து தொடங்குவதாக அவர் கருதினார். சூத்திரச் சொல்லுக்கு எதிரான போராட்டத்தை தனது இறுதிநாளில் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டும் உழைத்தார்.
நீதிக்கட்சி ஆட்சி அதற்கும் முன் வரலாற்றுச் சிறப்புமிக்க சில அரசாணைகளைப் பிறப்பித்தது. பஞ்சமர், பறையர் என்ற சொற்களை நீக்கும் ஆணையை வெளியிட்டது நீதிக்கட்சி ஆட்சி. அரசு ஆணை எண் 817 சட்டம் (பொது) நாள் 25.3.1922 மூலம் பஞ்சமர், பறையர் என்று தொல் திராவிடர் குடியினரை அழைக்கும், எழுதும் மரபை நிறுத்திற்று. தமிழில் 'ஆதி திராவிடர்' என்றும் தெலுங்கில் 'ஆதி ஆந்திரர்' என்றும் அவர்களைக் குறிப்பிடவேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
At the meeting of the Legislative Council held on the 20th January 1922, the followingresolution was passed. "That this council recommended to the government that the terms 'Panchamas' or 'Paraya' used to designate the ancient dravidian community in Southern India should be deleted from Government records c., and the term 'Adi-Dravida' in the Tamiland 'Adi-Andhra' in Telugu districts e substitute instead" என்பது அந்த அரசாணையாகும்.
சொற்களை நீக்குதல் மட்டுமல்ல; அனைத்தையும் அனைவர்க்கு- மான ஆக்கும் பல்வேறு அரசாணைகளை நீதிக்கட்சி ஆட்சி பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக இயங்கினார் தந்தை பெரியார்.தந்தை பெரியாரும், அவர் தம் நண்பர் கைவல்யமும் ஒரு திருமண வீட்டில் உணவு உண்டு கொண்டிருந்தபோது, 'சூத்திரன் குடித்த குவளையைத் தொடாதே' என்று ஒருவன் சொன்னான்.
சோத்துக் கையால் அவன் முகத்தில் அறைந்தார் கைவல்யம். 'சூத்திரன் என்று சொன்னால் ஆத்திரம் கொண்டு அடி' என்ற முழக்கம் அதில் இருந்துதான் வந்தது.1927 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு விளம்பரத்தில் 'சூத்திராள்' என்ற சொல் இருந்தது. இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியார். மாநாடுகளில் தீர்மானம் போடப்பட்டது.
'சூத்திராள்' என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் சில இடங்களில் நீக்கப்பட்டு வரு வதாக 'குடிஅரசு' (16.10.1927) இதழில் செய்தி வெளியாகி உள்ளது. இதன்பிறகு நீதிக்- கட்சி ஆட்சி சூத்திரன் என்ற சொல்லை நீக்கி உத்தரவிட்டது. அதன்பிறகு ஆவணங்களில் சூத்திரன் என்ற சொல்லை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.
1957 ஜூலை 11 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முத்தமிழறிஞர் கலைஞர், “சாணான், வண்ணான் என 'ன்' போட்டு அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனை நீக்கி 'ர்' போட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கக்கன், "மத்திய அரசில் அப்படித்தான் இருக்கிறது. 'ன்' போடுவதால் இழிவு ஏற்பட்டு விடாது" என்று பதில் அளித்தார்.
தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதலமைச்சர் கலைஞர். 10.12.1975 அன்று முதலமைச்சர் கலைஞர் ஒரு அரசாணை வெளியிட்டார். சாதிப் பெயர்களில் இருந்த 'ன்' நீக்கப்பட்டு, 'ர்' என மாற்றப்பட்டது. "சாத்திரத்தின் பேர்களிலும் சரித்திரம் படைக்க முடியும் என்பதை நிரூபித்தோம்" என்று முதலமைச்சர் கலைஞர் குறிப்பிட்டார்.
இதோ இப்போதும் இழிவு நீக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 29.04.2025 அன்று உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாகக் காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.
ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால் இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காக (1/5) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் உள்ளனர், தமிழ்நாட்டின் சாதிப் பெயர் பட்டியலில் 76 ஆதிதிராவிடர் சாதிப் பெயர்களும், 37 வகையான பழங்குடியினர் சாதிப் பெயர்களும், அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மை யான மக்கள் தங்கள் சாதிப் பெயரில் இறுதி எழுத்து 'N' மற்றும் 'A' என முடிவதால், சாதிப் பெயரை ஒருமையுடன் குறிப்பிடுவதாக இருப்பதாகவும் எனவே சமூகத்தில் உரித்த பெருமை கிடைக்கப் பெறவில்லை என கூறி 'N' மற்றும் 'A' என்பதற்குப் பதிலாக 'R' என பெயர் மாற்றம் செய்து தங்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு மேற்காணும் சாதிகளில் உரிய பெயர் மாற்றம் செய்ய சட்டமியற்றுமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் 'N' மற்றும் 'A' என்பதற்குப் பதிலாக ‘R' என பெயர் மாற்றம் செய்து மக்களுக்கு உரிய மரியாதையை கிடைக்க வழி செய்யும் வண்ணம் உரிய சட்டம் இயற்ற, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்பதுதான் முதலமைச்சர் அவர்கள் வைத்த கோரிக்கையாகும்.
டெல்லிப் பயணம் என்பது நிதி கேட்கும் பயணம் மட்டுமல்ல; நீதி கேட்கும் பயணம் ஆகும். 'திராவிட மாடல்' ஆட்சி என்று ஏன் சொல்கிறோம் என்றால் இதனால்தான். 'திராவிட' என்று சொன்னால் சிலருக்கு ஏன் எரிகிறது என்றால் இதனால்தான். இதையெல்லாம் பேசுவதற்கு இந்த இயக்கம்தான் இருக்கிறது என்ற கோபம்தான் காரணம். இவர்கள் இதனைத் திரும்பத் திரும்ப பேசுகிறார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.