முரசொலி தலையங்கம்

ஆளுநர் விவகாரம் : “குடியரசுத் தலைவர் மூலமாக ஆழம் பார்ப்பவர்கள், முதலில்...” - முரசொலி தாக்கு!

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று முரசொலி தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர் விவகாரம் : “குடியரசுத் தலைவர் மூலமாக ஆழம் பார்ப்பவர்கள், முதலில்...” - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு செய்து வரும் அட்டூழியங்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை பர்த்திவாலா, மாண்பமை மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பில், மகத்தான தீர்வைச் சொன்னார்கள். சட்டமன்றங்களால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுத்திருக்க வேண்டும் என்று சொன்னது நீதிமன்றம்.

ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு வைத்தது மிகப்பெரிய வெற்றியாகும். அரசியல் சாசனப் பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றும், இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல, “இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்றுத்தந்த மாபெரும் விடுதலை” என்றே சொல்ல வேண்டும்.

இது இங்கிருக்கும் ஆளுநருக்கு மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் நெருக்கடியைக் கொடுத்த தீர்ப்பு ஆகும். ஆளுநர்கள் மூலமாகத்தான் பாதி குடைச்சலைக் கொடுத்து வருகிறது பா.ஜ.க. தலைமை. எனவே இந்தத் தீர்ப்புக்கு முட்டுக்கட்டை போட நினைத்தார்கள்.

தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தால் உரிய பலன் கிடைக்காது என்று நினைத்தார்கள். எனவே, குடியரசுத் தலைவரை விட்டு ஆழம் பார்க்கிறார்கள். குடியரசுத் தலைவர் மூலமாக விளக்கம் கேட்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது.

ஆளுநர் விவகாரம் : “குடியரசுத் தலைவர் மூலமாக ஆழம் பார்ப்பவர்கள், முதலில்...” - முரசொலி தாக்கு!

கடந்த 15 ஆம் தேதியன்று 14 கேள்விகளைக் கேட்டு உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அவர் கேட்டுள்ள முக்கியமான கேள்வி என்பது, “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் காலக்கெடு இல்லாத போது நீதிமன்ற உத்தரவுகள் மூலமாக காலக்கெடு விதிக்க முடியுமா?” என்பதுதான்.

அரசமைப்புச் சட்டத்தில் காலக்கெடு இல்லை என்பது உண்மைதான். அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட காலத்தில், 'ரவி மாதிரியான ஆட்கள் ஒரு காலத்தில் ஆளுநர்களாக வந்து அட்டூழியங்கள் செய்வார்கள்' என்று கருதி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அது தேவையானதாக இருக்கிறது.

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது, அவரால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மசோதாவுக்கு அன்றைய ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த போது மோடி கொந்தளிக்கவில்லையா? அதே கேள்வியைத்தான் இன்றைய முதலமைச்சர் அவர்களும் கேட்டுள்ளார்கள்.

இன்றைக்கு உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்கிறார் குடியரசுத் தலைவர். எதை வைத்து காலக்கெடு போடுகிறீர்கள் என்று கேட்கிறார் குடியரசுத் தலைவர்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பர்த்திவாலா- மகாதேவன் அமர்வு அளித்த தீர்ப்பிலேயே அது இருக்கிறது. மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்க உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படிதான். இது அந்த தீர்ப்பிலேயே இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இரண்டு வழிகாட்டுதல் களை ஏற்றுக்கொண்டு இந்த கால நிர்ணயம் செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

“2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 நான்காம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒரு அலுவலகக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட மசோதாக்கள் மீது மூன்று மாதத்துக்குள் கண்டிப்பாக முடிவு எடுக்க வேண்டும்” என்பது உள்பட 5 வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது மூன்று வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் விவகாரம் : “குடியரசுத் தலைவர் மூலமாக ஆழம் பார்ப்பவர்கள், முதலில்...” - முரசொலி தாக்கு!

அதே தேதியில் மாநில அரசுகளுக்கும் அலுவலகக் குறிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் மசோதாக்கள் மீது அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு இடையே ஆலோசனை பெற அதிகபட்சமாக ஒரு மாதமும், ஒன்றிய அமைச்சகங்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு மாநில அரசுகள் ஒருமாதத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி விளக்கம் அளிக்காவிட்டால் அரசு எழுப்பிய சந்தேகத்தை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வதாக கருதப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மாநில அரசுகளின் நலனின் அக்கறை கொண்டு மாநில அரசின் சட்டங்கள் மீது காலக்கெடுவுடன் முடிவு எடுக்க அரசு அக்கறை கொண்டிருக்கிறது” என்று மாநிலங்களுக்கு அனுப்பிய அந்த அலுவலகக் குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அலுவலகக் குறிப்பையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பகிர்ந்துள்ளது. இவற்றை மேற்கோள் காட்டியே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

“உள்துறை அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை ஏற்றுக் கொள்வது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். அத்தகைய பரிந்துரை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆளுநரால் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்” என்று தீர்ப்பில் மிகத்தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்வது அரசியல் சாசனம் 201க்கு முரணானது அல்ல. அரசின் அலுவலகக் குறிப்புகள் இரண்டும் அரசியல் சாசனப் பிரிவு 201ன் நோக்கத்துக்கு எதிரானது அல்ல. அதனுடன் ஒத்துப் போகிறது என்பதை வெளிப்படுத்துகிறது” என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குடியரசுத் தலைவர் மூலமாக ஆழம் பார்ப்பவர்கள், முதலில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் ஆழ அகலங்களைப் பார்க்க வேண்டும்.

- முரசொலி தலையங்கம்

19.05.2025

banner

Related Stories

Related Stories