முரசொலி தலையங்கம்

“அன்றைய வாஜ்பாய் காலத்துக்கும், இன்றைய மோடி காலத்துக்கும் இதுதான் வித்தியாசம்!” : முரசொலி விளக்கம்!

“வாஜ்பாய் காலமும் - மோடி காலமும் -3” என தலைப்பிட்டு, வாஜ்பாய் காலத்து அரசியல் சூழலையும், தற்போதைய மோடி அரசியலையும் வேறுபிரித்து காட்டிய முரசொலி தலையங்கம்.

“அன்றைய வாஜ்பாய் காலத்துக்கும், இன்றைய மோடி காலத்துக்கும் இதுதான் வித்தியாசம்!” : முரசொலி விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க.வுடன் தி.மு.க. எதற்காக கூட்டணி வைத்துக் கொண்டது என்பது அன்றே தெளிவாக விளக்கப்பட்டது. குறிப்பாக சிறுபான்மையினர் உரிமையும், நலனும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்பதை தி.மு.க. வெளிப்படையாக அறிவித்தது.

2.6.1999ல் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு இக்கூட்டணி அமைவதற்கான காரணத்தை ஏற்றுக் கொண்டது. “தேசிய ஜனநாயகக் கூட்டணி முற்றிலும் மதச்சார்பற்று இயங்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். சிறுபான்மையினரின் தோழனாக - தொண்டனாக – பாதுகாவலனாக – தி.மு.கழகம் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை திமுகழகம் ஏற்றுக் கொண்டு – அவர்களுக்கு ஒரு தீங்கென்றால் கழகத்தின் ஒவ்வொரு செயல்வீரனும், பொங்கி எழுந்து – தன் உயிரைக் கொடுத்துப் போரிடுவான்.

சிறுபான்மையினருக்கு எப்பக்கம் இருந்து தீங்கு வந்தாலும் அதை தி.மு.க. பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆட்சிப் பொறுப்பைத் தூக்கி எறிந்து விட்டு அவர்களுக்குக் கவசமாக இருக்கும்” என்று தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் உறுதி அளித்தது. அத்தகைய நெஞ்சுரம் தி.மு.க.வுக்கு இருந்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கை 16.8.1999 அன்று டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் தலைவர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த அறிக்கையின் முகப்பே, தி.மு.க.வின் கொள்கையை கூட்டணியின் கொள்கையாக மாறியதை உணர்த்தியது.

1. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் நாட்டின் எதிர்காலம்.

2. அரசியல் சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது எங்கள் கடமையாகும்.

3. சாதி மத அடிப்படையில் யாரும் நடத்தப்பட மாட்டார்கள்.

4. நீதியும் நியாயமும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் வழங்கப்படும்.

5. யாருக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ நாங்கள் செயல்பட மாட்டோம்.

6. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே! நவீனமானதும் சீரமைக்கப்பட்டதுமான நல் இந்தியாவை உருவாக்கிட நாம் கரம்கோத்து இணைந்து நடை போடுவோம்.

“அன்றைய வாஜ்பாய் காலத்துக்கும், இன்றைய மோடி காலத்துக்கும் இதுதான் வித்தியாசம்!” : முரசொலி விளக்கம்!

7. பழைய தவறான புரிதல்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, மன வேற்றுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

8. மதச் சார்பின்மை, சமூக நீதி அடிப்படையில் அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பளித்து, நலிந்த பிரிவினர் அனைவருக்கும் உரிய உரிமைகள் வழங்க உறுதி மேற்கொள்ளப்படுகிறது.

9. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும்.

10. இந்திய நாட்டு மக்கள் அனைவரது உணர்வுக்கும் மதிப்பளிக்கப்படும்.

– என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. அதாவது தி.மு.க.வின் கொள்கையை, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் கொள்கையாக மாற்றி அறிவிக்க வைத்தார் தலைவர் கலைஞர் அவர்கள். இப்படி ஒரே ஒரு வாக்குறுதியை பழனிசாமியால், அமித்ஷாவிடம் இருந்து வாங்க முடியுமா? அன்றைய வாஜ்பாய் காலத்துக்கும் இன்றைய மோடி காலத்துக்கும் இதுதான் வித்தியாசம் ஆகும்.

சென்னையில் 21.8.1999ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வாஜ்பாய் அவர்கள், ஜெயலலிதா கொடுத்த நெருக்கடிகள் அனைத்தையும் பகிரங்கமாகச் சொன்னார். “ஜெயலலிதா தன் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க வேண்டும் என்று சொன்னார்.

தன்மீது மத்திய ஆட்சியினரால் தொடரப்பட்டுள்ள புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் இருக்கும் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார். இதை நாங்கள் செய்ய முடியாது என்றோம். அவரது பிளாக்மெயிலுக்கு நாங்கள் உடன்பட முடியாது என்று மறுத்துவிட்டோம்” என்று சொன்னார் வாஜ்பாய்.

அந்தத் தேர்தலில் ஒன்றியத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. இணைந்தது. அமைச்சரவையில் பங்கெடுத்தது.

குஜராத் சம்பவம் நடந்த போது அதனைக் கண்டித்து தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார். மதவெறி வன்முறையில் ஈடுபடும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் கலைஞர். குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை பதவி விலகச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய் என்பதும், அப்போது அவரைக் காப்பாற்றினார் உள்துறை அமைச்சர் அத்வானி என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.

காப்பாற்றிய பலனைத் தான் இன்று அத்வானி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

“சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இருக்காது” என்று 4.3.2002 அன்று தலைவர் கலைஞர் எச்சரிக்கை செய்தார். “குறைந்த பட்ச செயல் திட்டத்தை வகுத்து அதனை ஏற்றுக் கொண்ட பிறகுதான் கூட்டணியில் சேர்ந்தோம். அதில் இருந்து பா.ஜ.க. விலகினால் நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவோம்” என்று அறிவித்தார் கலைஞர். 2003 டிசம்பர் 20 பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது.

இந்த மாதிரியான நெஞ்சுரம் கொண்ட அரசியலை பழனிசாமியால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ‘நீங்கள் சேர்ந்தீர்கள், நாங்கள் சேர்ந்தால் மட்டும் குறை சொல்கிறீர்கள்’ என்று சொல்லும் பழனிசாமிக்கு, முதலில் கடந்த காலம் குறித்த புரிதல் வேண்டும்.

அன்று ஒன்றிய அரசை பிளாக்மெயில் செய்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. இன்று அ.தி.மு.க.வை பிளாக்மெயில் செய்து கொண்டிருக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க.வின் சாந்தமான முகம் வாஜ்பாய். அதனால்தான் தலைவர் கலைஞரே, ‘ரைட் மேன் – ராங்க் பார்ட்டி’ என்று சொன்னார். அப்படி பேர் வாங்கியவர் வாஜ்பாய். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் மனோபாவம் கொண்டவராக இருந்தார் அவர். ஆனால் இன்றைய பா.ஜ.க., பாசிசத்தின் உச்சமாக மாறி இருக்கிறது.

‘மாநிலங்களை மதிக்காத’ மோடி – ‘புலனாய்வு அமைப்புகளின் மூலமாக மிரட்டும்’ அமித்ஷா கூட்டணியானது இந்தியாவின் அனைத்துத் தன்மைகளையும், நெறிமுறைகளையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய மோடி, நேற்றைய வாஜ்பாயும் அல்ல. இன்றைய பழனிசாமி, நேற்றைய ஜெயலலிதாவும் அல்ல. வரலாற்றை வாய்ப்புக்கு வந்தபடி பழனிசாமி பேசக்கூடாது.

banner

Related Stories

Related Stories