முரசொலி தலையங்கம்
05.04.2025
சட்ட நெறிமுறைகள் மீதான தாக்குதல்!
இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பது பா.ஜ.க.வின் அப்பட்டமான எதேச்சதிகாரத் தன்மை ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், அந்தச் சட்டம் வலியுறுத்தும் நெறிமுறைகளின் மீதும் நடத்தப்பட்ட மாபெரும் தாக்குதல் இது. எது தாக்கப்பட்டால் என்ன, ‘நமது அஜெண்டா நிறைவேறினால் போதும்’ என்று நினைக்கும் நபர்களின் கையில் இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம் சிக்கி இருப்பது மிக மோசமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
நள்ளிரவில் நிறைவேறி இருக்கிறது வக்பு திருத்தச் சட்டம். நள்ளிரவில் நிறைவேறி இருப்பதே இதன் இருள் தன்மையை உணர்த்துகிறது. இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க.வுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறதா என்றால் இல்லை. அந்தக் கட்சி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களைக் கைப்பற்ற முடியாத கட்சியாகும். ஆந்திராவில் சந்திரபாபு, பீகாரில் நிதிஷ்குமார் ஆகியோர் தயவோடுதான் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார் மோடி.
400 வெல்வோம், 370 வெல்வோம் என்று சொன்ன மோடி, 240 தான் வென்றார். என்ற அடிப்படையில் பா.ஜ.க. ‘மைனாரிட்டி ஆட்சி’யைத் தான் நடத்தி வருகிறது. இதை வைத்துத்தான் இந்த ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏப்ரல் 2 நள்ளிரவில் “ஒற்றுமை வக்ஃப் மேலாண்மை, திறன் மற்றும் மேம்பாடு (UMEED)” என்ற புதிய மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி விட்டார்கள். 288 உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள். 232 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளார்கள். இரண்டுக்கும் வேறுபாடு 56 வாக்குகள் தான். ஒரு வாக்கு கூடுதல் என்றாலும் வெற்றிதான். ஆனால் தார்மீக அடிப்படையில் பார்த்தால் இந்திய நாடாளு மன்றத்தில் பாதிக்கும் சற்று குறைவான எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்டுள்ளது – நிராகரிக்கப் பட்டுள்ளது – ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது.
ஆந்திர சந்திரபாபுவும், பீகார் நிதிஷ்குமாரும் ‘வக்பு சட்டம் நல்லது’ என்பதற்காக ஆதரிக்கவில்லை. பா.ஜ.க.வை ஆதரிப்பதால், வக்பு சட்டத்தையும் ஆதரித்து வாக்களித்துள்ளார்கள்.
இதே போல் மாநிலங்களவையில் ஏப்ரல் 3 நள்ளிரவில் நிறைவேற்றி இருக்கிறார்கள். மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகள் பதிவாகி உள்ளன. மசோதாவுக்கு எதிராக 95 வாக்குகள் பதிவாகி உள்ளன. வேறுபாடு 33 வாக்குகள்தான். 95 உறுப்பினர்களால் இந்த மசோதா எதிர்க்கப்பட்டுள்ளது – நிராகரிக்கப்பட்டுள்ளது – ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது.
சில பத்து வாக்குகள் கூடுதலாக இருக்கிறது என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்துவீர்களா? அரசியலமைப்புச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்வீர்களா? மத நல்லிணக்கத்தைச் சிதைப்பீர்களா? சிறுபான்மையினரை இழிவுபடுத்துவீர்களா? சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிப்பீர்களா?
இந்தச் சட்டம் குறித்து சிறுபான்மை அமைப்புகளுடன் விவாதங்கள் நடத்தப்பட்டதா? 1955ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் போது இத்தனை ஆண்டுகாலச் செயல்பாடுகள் மீது விசாரணை நடத்தப்பட்டதா? சிறுபான்மையினருடன் கருத்து கேட்கப்பட்டதா?
2023 ஆம் ஆண்டு சிறுபான்மையின ஆணையக் கூட்டம் நான்கு முறை நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் ஒருமுறையாவது இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதா என்றால் இல்லை? அதனால்தான் இதனை, ‘கருப்புச் சட்டம்’ என்கிறது அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கான மத, கல்வி, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கிறது. ஆனால் வக்பு சட்டம் அதனைச் சிதைக்கிறது.
வக்பு சட்டம் எந்த நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தைச் சிதைப்பதற்காகத்தான் இப்போதைய திருத்தச் சட்டம் வந்துள்ளது. வக்பு ஆணையத்துக்கு வழங்கப்பட்ட தனி அதிகாரத்தை ஒழித்து, அந்தச் சட்டத்தையே காலப்போக்கில் இல்லாமல் ஆக்குவதற்காகத்தான் இந்தச் சட்டம் வந்துள்ளது. இசுலாமியர்களின் சொத்துக்களைக் குறிவைத்துப் பறிக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ‘முஸ்லிம் சமுதாயத்தின் சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிதான் இந்தச் சட்டம்’ என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சொல்லி இருக்கிறது.
இந்தச் சட்டம் தொடர்பாக பதில் அளித்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘பாதுகாப்புத் துறை, ரயில்வே துறைக்கு அடுத்து வக்பு சட்டத்தில்தான் அதிகமான சொத்து இருக்கிறது’ என்பதை திரும்பத் திரும்பச் சொல்கிறார். அவரது உண்மையான நோக்கம் இதன் மூலம் தெரிகிறது. ‘எதற்காக இவ்வளவு சொத்தை வைத்திருக்கிறீர்கள்?’ என்பதுதான் அவரது வஞ்சக எண்ணமாக உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் இருந்து, இருந்துவரும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறது பா.ஜ.க. ஏனென்றால் பா.ஜ.க., சிறுபான்மையினருக்கு எதிரானது. சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் கட்சி பா.ஜ.க. அந்தக் கட்சியின் இருப்பு என்பதே இசுலாமிய வெறுப்புதான். அது மட்டும்தான்.
“அரசியலமைப்பு உயர்வாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பு மிக மோசமானதாக ஆகிவிடும். மோசமான அரசியலமைப்பைச் செயல்படுத்துவபர்கள் நல்லவர்களாக இருந்தால் மோசமான அரசியலமைப்பும் நல்லதாகிவிடும். நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றினால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும். இன்னல்கள் நேருமானால் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை நமது சுதந்திரத்தைக் காப்போம் என்ற உறுதிமொழியை மேற்கொள்ள வேண்டும்” என்று அன்றே சொன்னார் அண்ணல் அம்பேத்கர்.
அத்தகைய உறுதிமொழிக்கு ஏற்பவே, ஒன்றிய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இன்றைய வக்பு சட்டமாக இருந்தாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டமாக இருந்தாலும் இதன் நோக்கம் இசுலாமியர்களைக் குறி வைப்பதுதான். CAA, NRC, மதரஸா சட்டம், ஒரே குடியியல் சட்டம் (UCC), காஷ்மீரைப் பிரித்தது, 370 நீக்கம், பாபர் மசூதி இடிப்பு போன்றவை அனைத்தும் பா.ஜ.க.வின் செயல்முறைத் திட்டத்தின் வெளிப்பாடுகள்தான். இவை குறிப்பிட்ட மத மக்களுக்கு எதிரான தாக்குதலாகச் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்தியாவின் மீதான தாக்குதலாகத்தான் இவை அமைந்துள்ளன. இவை அனைத்துக்குள்ளும் அச்சுறுத்தல் மட்டுமே அடங்கி இருக்கிறது.