தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் கொட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். அவருக்கு உறைக்குமா எனத் தெரியவில்லை.
பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் நியமனத் திருத்த மசோதா உட்பட தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முரண்டு பிடித்து வருகிறார் ஆளுநர் ரவி. 2020 -23 காலக்கட்டத்தில் 14 மசோதாக்கள் தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் 2 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டு, 12 மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் ஆளுநர் ரவி. இந்த மசோதாக்களை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி மாநில அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாவது முறையும் அனுப்பினால் ஒப்புதல் தர வேண்டும். உடனே ஆளுநர், அந்த 12 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார்.
அங்கு கிடப்பில் கிடக்கிறது. இது மாநில அரசை, பல்கலைக் கழகங்களை முடக்கும் செயல் ஆகும்.இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு முன் விசா- ரணைக்கு வந்தது.
•தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைப்பதற்கான காரணம் என்ன?
•இரண்டு மசோதாக்களை ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்?
•10 மசோதாக்கள் மீது முடிவு எடுக்க மறுத்ததற்கான காரணம் என்ன?
•அரசு மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமா?
•இவ்வளவு காலமாக ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை?
•மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தார் என்றால் அது எந்த பிரிவின் படி? அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா? என்று முதல் நாள் விசாரணையில் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார்.
எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
′10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை நாளை தெரிவிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோர் வாதிட்டனர். 2023 பஞ்சாப் வழக்கில் நியாயமான காலத்திற்குள் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இவர்கள் வாதிட்டனர். அரசியல் சாசனம் பிரிவு 200 இன் படி மாநில அமைச்சரவை ஆலோசனைபடிதான் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்,
அதற்கு மாறாக ஆளுநர் வேறு முடிவை எடுக்க இயலாது சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் கூட, மாநில அமைச்சரவை ஒப்புதலை பெற்றுதான் அனுப்பமுடியும், தன்னிச்சையாக அனுப்ப இயலாது, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம், விதிமுறைகளுக்கு எதிரானது, மசோதாக்களுக்கு அனுமதி தராமல் தாமதம் செய்வது என்பது ஜனநாயக விரோத செயல், அரசியல்சாசன பதவி வகிக்கும் ஒருவர் அரசியல்சாசன விதிகளுக்கு மாறாக ஒரு மாநிலத்தின் மக்களை அவமதிப்பது, மாநிலத்தை செயல்பட விடாமல் தடுப்பது என்பது ஜனநாயகத்தின் தோல்வி ஆகும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதங்களை வைத்தார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் தங்களது கேள்விக் கணைகளை ஆளுநர் தரப்புக்கு எதிராகத் தொடுத்தார்கள்.
•மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்தால் அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் மாநில அரசுக்கு எப்படி தெரியும்?
•மசோதாக்கள் மீது முடிவு எதுவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன நடவடிக்கை?
•மசோதாவை நிறுத்தி வைப்பது குறித்து அரசியல் சாசனம் 200 ஆவது பிரிவு எதையும் கூறவில்லை. அப்படியானால் அடுத்த நிலை என்ன?
•பல்கலைக்கழக மசோதா ஒன்றிய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன?
•மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்?
•மசோதாக்களை கிடப்பில் போட்டு, மாநில அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது.
•மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்போது குறிப்பு ஏதும் இல்லாமல் அனுப்புவது ஏன்?
•நாட்டின் குடியரசுத் தலைவர், அவராகவே ஆளுநரிடம் கேட்டு தெரிந்து கொள்வாரா?
•தமிழ்நாடு அரசின் மசோதா விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எப்போது முடிவை அறிவிப்பார்?
- இப்படி சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மசோதாவை நிராகரிக்க ஆளுநர் காரணம் தெரிவிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர். ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரலிடம், 'அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதை வைத்து மட்டும் வாதிடவும்” என்றும் நீதிபதிகள் கண்டிப்போடு சொல்லி இருக்கிறார்கள்.
இந்த வாதங்கள் அனைத்தும் பிப்ரவரி 6,7 ஆகிய நாட்களில் நடைபெற்றவை ஆகும். பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வழக்கறிஞர்கள் தான் வாதங்களை வைப்பார்கள். ஆளுநர் ரவி விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அவருக்கு எதிராக வாதங்களை வைத்துள்ளார்கள். அந்தளவுக்கு சட்டமுரணாக அவர் நடந்து வருகிறார். அது உச்சநீதிமன்ற நீதிபதிகளையே கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இதன்பிறகாவது ஆளுநர் திருந்துவாரா எனத் தெரியவில்லை.