டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. கடந்த 40 மாதங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தான் இதற்குக் காரணம்.
ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளை அதிகரிப்பதுதான் ஒரு ஆட்சியின் உண்மையான மக்கள் அக்கறையாகும்.
100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.359 கோடியில் மேல் கூரையுடன் நெல் சேமிப்புத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபையினால் அறிவிக்கப்பட்டது. இதை சிறுதானிய உணவுத் திருவிழாவாக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் கொண்டாடியது.
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை இடைத்தரகர்கள் தலையீடின்றியும் கால தாமதமின்றியும் உடனடியாக விற்பனை செய்யும் பொருட்டு ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விருப்பப்படி அரிசிக்குப் பதில் கோதுமை வழங்கப்படுகிறது.
இந்திய அளவில் உணவுக் கழகம் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் இந்திய உணவுக் கழகத்தைப் போல, தமிழ் நாட்டிலும் ஒரு உணவுக் கழகத்தை உருவாக்கினார்கள். இதன் மூலமாக உணவுப் பொருள்கள் மக்களைச் சென்று அடைவதற்காக நுகர்பொருள் வாணிபக் கழகம், பொது விநியோக திட்டம் ஆகிய இரண்டையும் பலப்படுத்தினார்.
அனைவருக்கும் குடும்ப அட்டை தரப்படுகிறது. அதற்கு முன்பு நகர் பகுதிகளில் தான் ரேசன் கடைகள் இருந்தது. கிராமப் பகுதிகளுக்கும் ரேசன் கடைகளை உருவாக்கினார் கலைஞர். விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கினார். இதனால் நெல் உற்பத்தியும் அதிகம் ஆனது. நெல்லை மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தமிழகத்தை மாற்றினார் முதல்வர் கலைஞர் அவர்கள்.
1 கிலோ மீட்டருக்குள் ரேசன் கடைகளை அமைத்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுத்தார். கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்தார். உழவர் சந்தைகளை உருவாக்கினார். 2006 ஆம் ஆண்டு ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று அறிவித்தார் கலைஞர் அவர்கள். ஆட்சிக்கு வந்ததும் ஒரு ரூபாய் ஆக்கினார். ரேசன் அரிசி வாங்குபவர்கள் தொகை அதிகம் ஆனது அதனால் தான்.
1974 ஆம் ஆண்டே ஆதார விலைக்கும் கூடுதலான விலையை தமிழக விவசாயிகளுக்குக் கொடுத்தார் கலைஞர். இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. குவிண்டால் ஒன்றுக்கு கொள்முதல் விலையையும் சேர்த்து 15 ரூபாயை ஊக்கத்தொகையாக முதல்வர் கலைஞர் வழங்கினார்கள்.
அதற்கு போனஸ் – ஊக்கத்தொகை – போக்குவரத்து தொகை என்று சொல்லி வழங்கினார்கள். இது எமர்ஜென்சி காலக்கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. 1977 – தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதலுக்கு கழக அரசு விவசாயிகளுக்கு அளித்து வந்த போனஸ் திரும்பவும் தர ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று அறிவித்தது. 1990 ஆம் ஆண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் அவர்கள், விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்கினார்.
குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம், தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்குதல்,விவசாய தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம், நகர்ப்புற தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம், விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தம் ஆக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம், இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது, மாணவர்க்கு இலவச பேருந்துபாஸ், அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியங்கள், உழவர் சந்தைகள், சமத்துவபுரங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை முதலமைச்சர் கலைஞர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த வழித்தடத்தில் இன்றைய முதலமைச்சர் அவர்கள் 1.17 கோடி மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத் தொகையாக வழங்கி வருகிறார்கள். கோடிக்கணக்கான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் வாயிலாக 9 லட்சம் மாணவ மாணவியர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
18 லட்சம் பள்ளிச் சிறுவர்கள் தினந்தோறும் காலையில் சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள். கோடிக்கணக்கான தொகை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
இவை அனைத்தும் தமிழ் மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் வறுமைக் குறைவான மாநிலங்களாக கேரளா முதலிடத்தையும், தமிழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்று இருந்தது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றியாகும்.