முரசொலி தலையங்கம்

தேர்தல் சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு : “தவறு செய்யவில்லை என்றால் தருவதில் என்ன தயக்கம்?” -முரசொலி கறார்!

தேர்தல் சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு : “தவறு செய்யவில்லை என்றால் தருவதில் என்ன தயக்கம்?” -முரசொலி கறார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!

பிரதமராக மோடி வந்தது முதல் சட்டபூர்வமான - ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்புகளை தனது எதிரிகள் மீது பாய்ச்சும் பா.ஜ.க. அரசு, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளைத் தன் வசப்படுத்தும் காரியங்களைச் செய்து வருகிறது.

தேர்தல் ஆணையர்களின் நியமனங்களில் இருந்தே இதனைத் தொடங்கினார்கள்.

மிகச் சந்தேகத்துக்கு உரிய வகையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் என்பவரது நியமனம் நடந்தது. இவர் பஞ்சாப் மாநில அதிகாரி ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் திடீரென அவராக பதவி விலகினார். மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதாவது தேர்தல் ஆணையராக இவரை நியமிப்பதற்காகவே பதவி விலக வைத்துள்ளார்கள் என்பது வெளிப்படையான செய்தி ஆகும். அருண் கோயல் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தாக்கல் செய்தார்கள்.

தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பான வழக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் வந்தது. நீதியரசர் கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதனை விசாரித்தது. அருண் கோயலின் நியமனத்தில் சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் சொன்னார்கள்.

"பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்றால், தனிப் பெரும்பான்மையுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், இந்த குழுவில் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்.

ஜனநாயகத்தில் தேர்தல் எந்தவித சந்தேகமும் இன்றி நியாயமாக நடைபெற வேண்டும். புனிதத்தன்மை காக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்" என்று கூறியது உச்சநீதிமன்றம்.

உடனே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக பிரதமர் விரும்பும் அமைச்சரை நியமிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு ஒன்றிய அமைச்சரை நியமிப்பதன் மூலமாக தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக ஆக்கிக் கொண்டார்கள்.

தேர்தல் சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு : “தவறு செய்யவில்லை என்றால் தருவதில் என்ன தயக்கம்?” -முரசொலி கறார்!

தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்கள் என்பதே இதன் நம்பிக்கைத்தன்மையை சிதைத்து விட்டது.

அமைச்சரவை செயலர் மற்றும் அரசுச் செயலர் பதவிக்குக் குறையாத இரண்டு அதிகாரிகள் கொண்ட தேடல் குழுவானது 5 பேரைத் தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த ஐந்து பேரில் உள்ளவர்களையோ அல்லது அவர்களைத் தாண்டிய வேறு யாரையுமோ பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவானது தேர்வு செய்யலாம் என்பது இப்போதைய நடைமுறையாக இருக்கிறது. இத்தகைய குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இப்போது தேர்தல் ஆணையர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றிய அரசின் அனைத்து உத்தரவுகளுக்கும் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தகைய சூழலில் தேர்தல் நடத்தை விதிகளில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை மக்கள் பார்வைக்குத் தரக் கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்.

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்குமே அதிக வித்தியாசம் சில தொகுதிகளில் இருக்கிறது. எனவே சி.சி.டி.வி. காட்சிகளைத் தருமாறு பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மஹமூத் பிரச்சா என்பவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அவர் கேட்கும் ஆவணங்களைக் கொடுக்கலாம் என்று டிசம்பர் 9 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடனே இது தொடர்பாக ஒரு சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். காகித ஆவணங்களை மட்டும் தான் தர முடியும், சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையோ காட்சிகளையோ தர முடியாது என்று தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டு வந்து விட்டார்கள். தவறு செய்யவில்லை என்றால் தருவதில் என்ன தயக்கம்?

"வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது. இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான - நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலத் தேர்வுகள் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. திடீரென இரண்டு மணி நேரம் அறிவிப்புகளை நிறுத்துகிறார்கள். பின்னர் திடீரென பா.ஜ.க. முன்னிலை என்று பரப்புகிறார்கள். அவசர அவசரமாக அறிவிக்கிறார்கள். வாக்குப் பதிவும், எண்ணிய வாக்கும் நேர் செய்யப்படாமல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முழுமையாக வாக்குகளை எண்ணாமல் பாதியில் நிறுத்தி வெற்றியை அறிவித்தார்கள். இவை வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் சி.சி.டி.வி. காட்சிகளைத் தர மறுக்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சொன்ன எச்சரிக்கையைத் தான் இப்போது நடைமுறையில் பார்க்கிறோம். "ஜனநாயகத்தில் தேர்தல் எந்தவித சந்தேகமும் இன்றி நியாயமாக நடைபெற வேண்டும். புனிதத்தன்மை காக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்" என்று கூறியது உச்சநீதிமன்றம். அதைத் தான் இப்போது பார்க்கிறோம். மர்மத் தேர்தல் முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories