முரசொலி தலையங்கம்
11.12.2024
வைக்கம் வீரருக்கு பிறந்தநாள் !
வைக்கத்து வீரர் என யாரைச் சொன்னோம்?
'வை கத்தி ! ' தீண்டாமைக் கழுத்தில் என்று
வரிப்புலியாய்க் களம் சென்று வாகை சூடி
வைத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர் !
- என்று எழுதினார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகையபெருமை மிகு பெரியாருக்கு வைக்கத்தின் மாபெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பி 12 ஆம் தேதியன்று திறந்து வைக்க இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
வைக்கத்தில் ஏற்கனவே இருந்த நினைவகமானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அறிவாசான் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்அவர்களும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.
வைக்கம் போராட்டம் என்பது 1924 ஆம் ஆண்டு நடைபெற்றது. இது நூற்றாண்டு விழா ஆண்டு. நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக்கொண்டாடிய தமிழ்நாடு அரசு, வைக்கத்தில் உள்ள நினைவுச் சின்னத்தைமறுசீரமைப்பு செய்யவும் திட்டமிட்டது. எட்டு கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று திறப்பு விழாக் காண்கிறது வைக்கம். வெற்றி விழா காணப்போகிறது பெரியாரின் போராட்டம்.
30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் 'வைக்கம் போராட்டம்' ஆகும்.
குன்னப்பி (புலையர்), பாஹூலயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்நோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மறுநாள், ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்செய்தியானது அண்ணல் காந்தியடிகளுக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தைச் சிறிது காலம் தள்ளி வைக்கலாம் என்று அவர் தந்தி அனுப்புகிறார். ஆனால் அதனை கே.பி.கேசவ மேனன் ஏற்கவில்லை. கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ஏ.கே.பிள்ளை, கே. வேலாயுத மேனன், கே.கேளப்பன், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றனர். அடுத்து வழிநடத்ததந்தை பெரியாரை அழைக்கிறார்கள். அவர் ஏப்ரல் 13 அன்று வைக்கம் வருகிறார்.
கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். கோவை அய்யாமுத்து உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அகாலிகள் வருகிறார்கள். போராட்டம் மிகத் தீவிரமாகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தி கட்டுப்பாடுகள் விதிக்கிறார். ஆனால் அதனை சத்தியாக்கிரகிகள் ஏற்கவில்லை.
கோட்டயம் மாவட்டத்துக்கு நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார். மே 22 ஆம் தேதிகைதான பெரியார் ஜூன் 21 விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31 விடுதலை செய்யப்பட்டார்.
1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகள்வைக்கம் வந்தார். சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார். உயர் வகுப்பு பிரதிநிதிகளையும் சென்று சந்தித்தார். மூன்று திட்டங்களை வைத்தார். அதனை உயர் வகுப்பினர் ஏற்கவில்லை. உயர்சாதிக்குழு அவற்றை நிராகரித்தது. திருவிதாங்கூர் மகாராணியின் பிரதிநிதியையும் காந்தி சந்தித்தார். நாராயண குருவையும் காந்தி சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், இராஜாஜி, வ.வே.சு. ஐயர் ஆகியோர் உடன் இருந்தனர். ராணியையும் சந்தித்தார் காந்தி. 1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.
வைக்கம் போராட்ட ( 1924 - 25) காலத்தில் 114 நாட்கள் பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம் 74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துச் சாலைகளும் திறந்து விடப்பட்டதால், போராட்டங்களை நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்ட 17.11.1925 அன்றும் பெரியார் வைக்கத்தில் இருந்தார். வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். ஆனாலும் இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் அல்ல என்று சொல்லிக் கொண்டவர் பெரியார்!
1933 ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் பெரியார்பங்கெடுத்தார். அப்போது பெரியாருக்கு முன் பேசிய சிலர், வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு பெரியார்தான் காரணம் என்று பேசினார்கள். இறுதியாகப் பேசிய பெரியார் சொன்னார்:
"என்னைப் பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதை நடக்கவித்ததும், அது வெற்றியாய் முடிவு பெறக் காரணமாய் இருந்ததும் நானே ஆவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக் கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன். வைக்கம் சத்தியாகிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும், அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத் தன்மையும் கட்டுப்பாடுமே காரணமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” (குடிஅரசு' 1.10.1933) என்று பேசினார் பெரியார். அதனால்தான் அவர் பெரியார்!
- தொடரும்...